வணக்கம்!
சித்தர் போகரய்யா சொன்ன, போகர் ஏழாயிரம் நூலிலிருந்து 477 முதல் 479 வரை விளக்கம் சொல்லப்பட்டதாகும்! இந்த குறிப்பை Lakslead YouTube channelலிலும் காணலாம் (https://youtu.be/uhEV695OHZE?si=9ROAcvqlGIqtoFjx)
பிரமி செடியை ஆங்கிலத்தில், Bacopa monniera என்றும் சொல்லப்படுகிறது. மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள பிரமியில் நீர் பிரமி, மண்டூக பிரமி என வகைகள் உண்டு.

நீர் பிரமி, நீள்வட்ட தடிமனான இலைகளை கொண்டது.

மண்டூக பிரமி, வட்டவடிவ இலைகளை கொண்டது. வயல்களின் வரப்புகளிலும், நீர்பாங்கான இடங்களிலும் அதிகமாக காணப்படும்.
பிரமியின் பயன்களாக
- மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும்,
- சிறு நீரக குறைபாடுகளை சரிசெய்யவும்,
- மூளையின் உட்புற வீக்கத்தைக் குறைக்கவும்,
- ADHD என்று சொல்லப்படுகிற நோயிலிருந்து காக்கவும்,
(ADHD என்பது ஒரு நரம்பியல் கோளாறு ஆகும். ADHD உள்ள நபர்களுக்கு பிரமியின் பலனாக கவனம் மற்றும் அறிவுத் திறன்களை மேம்படுத்தவும் உதவுகிறது)
- தூக்க முறைகளை மேம்படுத்தவும்,
- கவலை மற்றும் மன அழுத்தத்திலிருந்து தீர்வு காணவும்,
- இரத்த அழுத்தத்தை சீராக்கவும்,
- கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும்,
- தலை முடி பிரச்சினைக்கும் பிரமி பலன் தருகிறது.
- சருமத்திற்கான பிரச்சினைக்கும் பிரமி தீர்வு காண்கிறது.
போகர் சொல்லித்தந்த இந்த பிரமி லேகியம் செய்வதற்கு வழி முறைகள்:
மிளகும், திப்பிலியும் தனித்தனியே நூறு கிராம் அளவுக்கும், இந்துப்பு ஒரு சிறு ஸ்பூன் அளவுக்கும் எடுத்துக்கொண்டு, பத்து கிராம் அளவுக்கு மஞ்சளையும் நன்றாக இடித்து, தூளாகச் செய்து தனியே வைத்துக் கொள்ளவேண்டும்.
இருநூற்று ஐம்பது கிராம் அளவுக்கு, நெல்லிக்காயை எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
பிரமி இலையை அரைத்து, சாறு எடுத்து, ஒரு லிட்டர் அளவுக்கும், பசுவின் நெய் ஒரு கிலோ அளவிலும் எடுத்துக்கொண்டு, ஒரு பாத்திரத்தில் கலந்து வைத்து, அடுப்பேற்றிக் காய்ச்சும்போது, அதில் நாட்டு சர்க்கரையையும், ஒரு கிலோ அளவுக்கு சேர்த்து, கூடவே, மிளகு, திப்பிலி, இந்துப்பு, மஞ்சள் பொடியாகச் செய்து எடுத்து வைத்திருப்பதையும்,
அரைத்து வைத்திருக்கும் நெல்லிக்காயையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, மிதமான சூட்டில் கிண்டி எடுத்து, பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு, ஒரு சிறு உருண்டை வீதம் ஒரு நாள் விட்டு, ஒரு நாள் உண்ணலாம்.
மிளகு சேர்த்து செய்துள்ளதால், இந்த லேகியத்தை உண்ணும் போது, ஒரு நாள் விட்டு ஒரு நாள் உண்ண வேண்டும் என்று சொல்லப்பட்டது. ஒருவேளை, காலையில் இந்த பிரமி லேகியத்தை எடுத்து உண்ணும்போது மலமானது, நெல்லிக்காய் உருண்டைபோல கீழே வந்துவிடும் என்பதால், மாலை வேலைகளில் உட்கொள்வது நல்லது!
பிரமி லேகியத்தை உண்டவர்களுக்கு, 16 வயது இளமையோடும், களைப்பு நீங்கி, சுறுசுறுப்பாகவும், விரைவாகவும், வலிமையுடனும், புத்துணர்ச்சியோடும் இருப்பார்களென்றும்,
குழந்தை வரம் வேண்டுமென்று தவமிருக்கும் பெண்களுக்கு, கர்ப்பநோய்க் கோளாறுகளை குணமாக்கி, விரைவில் கர்ப்பம் தரிக்கவும் இந்த பிரமி லேகியம் அருமருந்தாக உதவி செய்யுமென்றும்,
கண்கள் ஒளி பெற்று, பகலிலும் நட்சத்திரம் தெரியும் அளவிற்கு கண் பார்வை வலுப்பெறுமென்றும், உடலில் இழந்த பொலிவை மீண்டும் உருவாக்கி, உடம்பில் புத்துணர்வு ஏற்படுத்துமென்றும்,
பல விதமான நோய்களில் இருந்தும், விரைவில் குணம் கொடுக்கும் மருந்தாகவும், இந்த பிரமிலேகியம் இருக்குமென்பது மிகச் சிறப்பானது!
பிரமிலேகியம் உடல் சோர்ந்து, இழந்துபோன இளமையைத் தருவதோடு, கண்களையும் பாதுகாக்கிற மிகப்பெரிய நற்குணமும், நற்பயனும் கொண்டது.
பிரமியின் பலன்களையும், நோய்க்கான தீர்வையும் சித்த வைத்திய பெருமக்களின் ஆலோசனையோடும், பரிந்துரையின் மூலமும் பயன்படுத்துவது நல்லது!
பிரமிலேகியத்தை, உலக மக்களின் உடலுக்கு ஆரோக்கியத்தையும், வாழ்வில் நலத்தையும் தரக்கூடிய இந்த அருமருந்தை சொல்லித்தந்த போகரய்யாவுக்கு நன்றி கூறுவோம்!
நல்ல விஷயம்தானே!
பொறுப்புத்துறப்பு
பதிவிடப்படும் அனைத்து வகையான செய்திகளும், வழிமுறைகளும் தகவலளிக்கும் நோக்கத்தில் பதிவிடுவதே ஆகும். இந்தப் பதிவில் தெரிவிக்கப்படும் எந்தவொரு கருத்துக்களையும், செய்திகளையும் இந்த ஒளியலைவரிசை எவரையும் ஆதரிப்பதோ, ஆதரிக்கச் சொல்லுவதோ, ஏற்றுக்கொள்வதோ, செய்து பார்க்கத் தூண்டுவதோ, அல்லது முன்னிலைப்படுத்துவதோ நோக்கமாக கொண்டதில்லை. இந்தப் பதிவில் பதிவிடப்படும் மருத்துவ தகவல்களை உபயோகிக்கும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று, மருத்துவரின் ஆலோசனையின் படி உபயோகிக்குமாறு தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் பதிவிலும், ஒளியலைவரிசையிலும் பதிவிட்டுள்ள தகவல்களை எந்த வகையிலும் (reproduced or transmitted) மறு பதிவாக்கமோ, மறு நகலாக்கமோ செய்வது தவிர்க்கப்படவேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறது.