முருங்கை மர வேரில் என்ன இருக்குது!

வணக்கம் நண்பர்களே!

முருங்கை மர வேரில் என்ன இருக்குது!

போகர் ஐயா தமது ஏழாயிரத்தில், 6847 முதல் 6853 வரையிலான பாடல் வரிகளில்,  உடலில் அழகை கூட்டவும், மூச்சை அடக்கவும், நரம்புகளெல்லாம் முறுக்கேறி, நெடுங்காலம் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் வாழச் செய்வதற்கு, முருங்கை மர வேரின் பட்டையைக் கொண்டு, மருந்தாக, செந்தூரமாக செய்து, நலமாய் வாழ ஒரு அற்புதத்தை பாடலாக நமக்கு தந்திருக்கிறார்! முருங்கையில் உள்ள இலைகளும், பூக்களும், காயும், வேரும், பட்டையும் சேர்த்து      அத்தனை பாகங்களும் பயனுள்ளதாகவே இருக்கிறது. இதில் குறிப்பாக முருங்கையின் வேரை பயன்படுத்தி, மருந்தாக எப்படி தருகிறார் என்பதைதான் இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த பதிவை காணொளியாக காணலாம் – https://www.youtube.com/watch?v=MVBLY2lWCgM

பாடலுக்குள் போகலாமா?

6847.
அன்றான யின்னமொரு போக்கு சொல்வேன்

வப்பனே புலிப்பாணி யன்புள்ளானே
குன்றான செந்தூர மென்னசொல்வேன்

குறிப்பான வயமதுவும் பலந்தான் பத்து
வென்றிடவே நிம்பழத்தின் சாற்றினாலே

விருப்பமுடன் சுத்தியது செய்து மல்லோ
நன்றாகக் கல்வமதி லிட்டு மைந்தா

நலமுடனே தானரைக்க மருந்தைக்கேளே


6848.
கேளப்பா முருங்கைவேர் பட்டை தன்னை

கிருபையுடன் தானிடித்து சார்பிழிந்து
பாளப்பா போகாமல் பத்து சாமம்

பாங்குடனே தானரைப்பாய் சுண்ணநீரும்
ஆளப்பா பலமதுவும் ஒன்றே யாகும்

அப்பனே தான்போட்டு வரைத்துமல்லோ
சூளப்பா வில்லையது லகுவாய்ச் செய்து

சுந்தரனே ரவிதனிலே காயப்போடே


6849.
காய்ந்தபின்பு பில்லையதை எடுத்து மைந்தா

கருவாக வோட்டிலிட்டுச் சீலைசெய்து
வாய்ந்ததொரு புடமதுவும் கெஜமே யாகும்

வளமுடனே போட்டபின்பு எடுத்துப்பாரு
தீய்ந்துமே போகாமல் செந்தூ ரந்தான்

தீர்க்கமுடன் அருணனது நிறம்போலாகும்
மாய்ந்துமே அயமதுவும் மடிந்து மல்லோ

மகத்தான செந்தூரஞ் சொல்லொண்ணாதே


6850.
சொல்லவென்றால் நாவில்லை பாவு மில்லை

துப்புரவாய் நாதாக்கள் மறைத்தசித்து
வெல்லவே யிவ்வேதை யார்தான் செய்வார்

விதியாளி செய்வாரே மற்றோர்காணார்
புல்லவே செந்தூர மகிமை தன்னை

பூதலத்தில் மாண்பர்களுங் கண்டதில்லை
அல்லவென்றால் செந்தூரம் கோடி பாகம்

வப்பனே கண்டதுண்டு மெத்தகாணே


6851.
காணவே செந்தூரம் மண்டல ந்தான்

கருவாகக் கொண்டவர்க்குப் பலனைக்கேளு
தோணவே தேனதனில் கொண்டா லல்லோ

தோறாமல் தேகமது இருக்கும்பாரு
வேணதொரு ரோகமெல்லாம் நீங்கி யல்லோ

விரைக்குமே நரம்பதுவும் துடிப்புமெத்த
பாணமெனும் மன்மதனார் வேகந் தன்னை

பாலிக்கும் வயத்தினுட வீரங்காணே


6852.
வீரமாம் வாசியது மேலோ டாது

வீறான நரம்புகளும் முருக்குமேறி
சாரமுடன் தேகமது வலுவு மெத்த

சட்டையது மூன்றுவிசை தள்ளும்பாரு
கோரமென்ற தேகமது வழகு மீறி

கொற்றவனே நெடுங்கால மிருக்கலாகும்
பாரமென்ற வயமதுவும் சொல்லப் போமோ

பாராளுஞ் சித்தர்முனி வேதையாச்சே

முருங்கை மர வேரின் பட்டையைக் கொண்டு, குறிப்பான, சிறப்பான மருந்து இருக்குது, அன்பான புலிப்பாணி மைந்தனே! கேளப்பா! குன்றான மலை அளவு பெருமையுள்ள செந்தூரத்தை என்னவென்று சொல்வேன்! அயம் தான் பத்து அயம்னா இரும்பு, அந்த இரும்பை எலுமிச்சம்பழச் சாற்றினால் சுத்தி செய்து, அதாவது, எலுமிச்சம் பழத்தை பிழிஞ்சு எடுத்த சாறிலே, ஒரு நாள் பூராவும் ஊறவச்சு எடுத்துட்டு, பிறகு அந்த இரும்பு துண்டை அம்மியிலேயோ, சொரசொரப்பான கல்லுமேலையோ போட்டு தேய்ச்சா, இரும்புத் துண்டு கொஞ்சம் கொஞ்சமா தேயும், அப்படி தேய்ச்சுக் கிடைக்கிற இரும்புத் துகள்களை எடுத்து சேகரிச்சு வைச்சுட்டு, அடுத்ததா,

முருங்கை மரத்தோட வேரை வெட்டி எடுத்துட்டு, அதோட பட்டையை மட்டும் உரிச்சு எடுத்து,  பட்டையையும், 35 கிராம் அளவுக்கு சுண்ணாம்பு தண்ணீரையும் சேர்த்து, பத்து சாமம் நல்லா அரைக்கணும்னு சொல்றார்! பத்து சாமம்னா சுமாரா முப்பது மணிநேரம்! நல்லா மை போல அரைக்கணும்னும் கூட இந்த கால அளவுகளைக் கொடுத்திருக்கலாம்! முருங்கை வேர்ப்பட்டையோட சாறும், சுண்ணாம்பு தண்ணீரும் சேர்த்து நல்லா அரைகும்போது  கிடைக்கிற விழுதை எடுத்து, ஒரு ரூபாய் நாணயம் அளவுக்கு சின்ன வில்லைகளாக  தட்டி, வெயிலில் காய வைக்கணும்னு சொல்லிட்டு, 

அப்படி காய வைத்து, நன்கு காய்ந்த வில்லைகளை ஒரு மண் ஓட்டுச்சட்டியிலே போட்டு, மேலே ஒரு மண் சட்டி மூடி போட்டு, ஈர களிமண்ணாலே அந்த மூடியுள்ள சட்டியின் வாயை சுற்றிலும் அடைத்து, அதன்மேலே எருவரட்டியை ஒரு அடி உயரத்துக்கு அடுக்கி வைத்து, நெருப்பை எரியவிட்டு, எருவரட்டி முழுவதும் எரிந்ததும், மண் சட்டி ஆறினதும் எடுத்து, கவனமாக பிரித்து எடுக்கவேண்டும். முருங்கை மர வேரின் சாறும், சுண்ணாம்பும், இரும்பு துகளும் சேர்ந்து வெந்து, செந்தூரமாக இளஞ்சிவப்பு நிறத்தில் மெல்லிய துகள்களாக கிடைக்கும். இந்த செந்தூரத்தை, நாற்பத்தெட்டு நாட்கள் தொடர்ந்து, தினமும் காலையில் ஒரு நெல்லளவு எடுத்து, தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்,

  • உடம்பிலே இருந்து துன்பம் கொடுக்கிற, தேவையில்லாத வியாதிகள் எல்லாம் ஓடிப் போய்விடுமென்றும்,
  • உடலிலுள்ள நரம்புகள் எல்லாம் வலிமையாகி, இளமையும், துடிப்பும் அதிகமாக இருக்கும் தன்மை வந்துவிடுமென்றும்,
  • மன்மதனின் வில்லிலிருந்து புறப்படுகிற அம்பின் வேகம் போல, இந்த செந்தூரத்தின் பலன் இருக்குமென்றும்,
  • மூச்சுக்காற்றை வெளியில்விடாமல், உள்ளுக்குள்ளே அதிகமான நேரம் அடக்கி வைத்திருக்க முடியுமென்றும்,
  • வீணான நரம்புகளும், கெட்டுப்போன பலன் தராத, சரிவராத நரம்புகள் எல்லாம், மறுபடியும் முறுக்கேறவும்,
  • முழு பலத்தோடு, ஆற்றலோடு செயல்படவும், உடம்பு கட்டுமஸ்தான அமைப்பும், அழகும், சக்தியும், வலிமையும் கிடைக்குமென்றும்,

இந்த முருங்கை மர வேர் செந்தூர மருந்து செய்யும் பலன்கள் உண்மையானதாகவும், நிறைவானதாகவும், இருக்குமென்றும் முருங்கை மரத்தின் வேரின் பட்டையைக் கொண்டு செந்தூரம் செய்யும் முறையை நோயில்லாத உலகைக்காண வேண்டி, போகர் சித்தர் உலக மக்களுக்குப் பயனுள்ள பக்குவமாக சொல்லித்தந்திருக்கிறார்!  இந்த முருங்கை மர வேர் செந்தூரத்தை சித்த வைத்திய பெருமக்களின் ஆலோசனையுடனும், அவர்களின் பரிந்துரையின்படியும் எடுத்துக்கொள்வது சிறப்பானதாக இருக்கும்!

நல்ல விஷயம் தானே! 

நன்றிகள்!

Leave a comment