ஓரிதழ் தாமரையை ஏன் சிறப்பான மூலிகையென்று

போகர் சொல்கிறார்!

வணக்கம் நண்பர்களே!

போகர் சித்தர் தமது ஏழாயிரம் நூலில், 446 வது பாடலில், ஓரிதழ் தாமரை பற்றியும், குணமாக்கும் நோய்களையும், நோய் தீர்க்கும் பக்குவத்தையும் மிக அழகாக, மிக எளிதாக சொல்லியிருக்கிறார்! ஓரிதழ் தாமரை ஒரு சிறப்பான மூலிகையென்று போகரய்யா சொல்லித்தந்ததின் காரணத்தை தெரிந்து கொள்ளவேண்டாமா?

பாடல் வரிகளை பார்த்து வரலாமா?

ஏமமா மோரிலைத்தா மரைச்ச மூலம்

இடித்துமே சூரணித்து நெய்யிற்கொள்ளச்

சேமமா யுடம்பினின்ற வேக மொல்லாஞ்

சிதைந்துமே விட்டுப்போஞ் சிறுநீர்தானுங்

காமமாய்க் குளிர்ந்துவிடுங் கண்பு கைச்சல்

காமாலை வறட்சியொடு கடியபித்தம்

வாமமாய்ப் போய்விடுமண் டலந்தான் கொள்ளு

மகந்தான ரோகமெல்லா மாறிப்போமே  (446)

வரலாமா? ஓரிதழ் தாமரையின் மொத்தத்தையும் அதாவது ஓரிதழ் தாமரை செடியின் பூ, இலை, தண்டு, வேர் என்று முழு செடியையும் எடுத்துக்கொண்டு, நிழலில் காயவைத்து, காய்ந்ததும் பொடியாக்கி எடுத்துக்கொண்டு, நெய்யோடு கலந்து சாப்பிடலாமென்று போகர் சித்தர் சொல்லித்தருகிறார். அப்படி, ஓரிதழ் தாமரையை ஒரு மண்டலம், அதாவது, 48 நாட்கள் காலையில் ஒரு சிறு ஸ்பூன் அளவுக்கு எடுத்துக்கொண்டு நெய்யோடு கலந்து உண்டு வரும்போது,  

  • உடம்பிலிருந்த தீவிரமான நோய்களின் வேகம் தணிந்து அடங்கி ஓடிப்போகுமென்றும்,
  • சிறுநீரின் எரிச்சலும் தணிந்து, குளிர்ந்து விடுமென்றும்,
  • உடல் வெப்பத்தினால் வருகின்ற கண் புகைச்சலும், எரிச்சலும் போகுமென்றும்,
  • காமாலை, நாவரட்சியும், தோல் வரட்சியும், கொடுமையான பித்தமும் போகுமென்றும்,
  • ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால், உடம்பிலுள்ள கொடிய நோய்களெல்லாம் தீருமென்றும்,

ஆண்மை குறைபாடுகளை சரிசெய்யவும், உடல் நன்கு தேறுவதற்கும், நிழலில் காயவைத்து பொடிசெய்ததை, காலையில் ஒரு டம்ளர்  பாலில் கலந்து அருந்திவரும் போது, உடலில் வெப்பத்தை குறைத்து, ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

போகரய்யா ஒரிதழ் தாமரையின் பயன்களை சொல்கிறார்.

ஓரிதழ் தாமரைக்கு அறிவியல் பெயர் Hybanthus என்றும், Violaceae குடும்பத்தை சேர்ந்ததென்றும் குறிப்பிடப்படுகிறது. ஓரிதழ் தாமரை செடி, வயல் வரப்புகளிலும், நீர்பாங்கான இடங்களிலும் வளர்ந்து காணப்படும். ஓரிதழ் தாமரை சூரணத்தை, சித்த வைத்திய பெருமக்களின் ஆலோசனையோடும், வழிகாட்டுதலோடும் எடுத்துக்கொள்வது சிறப்பானதாக இருக்கும்.

ஒரிதழ் தாமரையை சிறப்பான மூலிகையென்று போகரய்யா சொல்லியிருப்பது நல்ல விஷயம் தானே!

 நன்றிகள்!

Leave a comment