புங்கம்பூ மருந்துப் பக்குவம்! மேக நோய்க்களுக்கு சரியான தீர்வு!

வணக்கம் நண்பர்களே!

போகர் ஐயா சொல்லித்தந்த மிக எளிதான பக்குவங்களில் இதுவும் ஒன்று! போகர் ஏழாயிரத்தில் பாடலாகத் தந்திருக்கிறார். புங்கம்பூ லேகியம்! புங்க மரத்தை பரவலாக பார்த்திருக்கலாம், கல்வெட்டுல பேர் எழுதுற மாதிரி, இந்த மரங்கள்ல தங்களது பெயரை செதுக்கி வைத்திருக்கிறதையும் பார்க்கலாம்! புங்க மரத்து இலையிலே ஏதோ மரு வந்த மாதிரி இருக்கும்! புங்க மரத்தோட பூ (Pongamia pinnata) என்ற அறிவியல் பெயரால் குறிக்கப்பட்டுள்ளது. சின்ன பூவாக, அழகானதாக இருந்தாலும், பெரும்பாலும் தரையில் தான் கொட்டி கிடக்கும்! புங்கம் பூ பாக்கறதுக்கு அழகாக இருக்கும், மருந்துக்கும் பலனா இருக்கும்!

இந்த புங்க மரத்தோட பூவை மருந்தா எப்படி செய்வது? என்று போகர் ஐயா எளிமையா சொல்லித்தர்றார், பாத்துட்டு வரலாமா?

பாரப்பா மேகம் இருபதுவும் தீரப்

பாடுகிறேன் புங்கம்பூ என்றமூலி

நேரப்பா ஒருபடிப்பூ வாரிவந்து

நேயமாம் ஆய்ந்தெடுத்துப் பண்டத்திலிட்டு

சேரப்பா அடுப்பேற்றி எரித்துக்கிண்டி

சிறப்பாக ஆவினெய்ப் படிதானொன்று

ஊரப்பா வறுக்குமப்பே கொஞ்சம்கொஞ்சம்

உண்ணஉண்ண பார்த்துமே புரட்டிவாங்கே  (198)

20க்கும் மேலான மேக நோய்களை தீர்க்கும் மருந்தா இருந்து, குணப்படுத்துகிற புங்கம் பூவை பற்றி பாடுகிறேன், என்று சொல்லிட்டு, புங்கம்பூ ஒரு படி வாரி வந்து, இந்த மரத்திலிருந்து பூக்கள் பூத்து தரையில் விழுந்து கிடக்கும்! அதனாலதான் வாரி வந்து அப்படின்னு சொல்றார். வாரி வந்து, சுத்தமாக்கிட்டு, பாத்திரத்தில் போட்டு அடுப்பை பத்த வச்சுட்டு, அந்த பாத்திரத்தில் இந்த புங்கம் பூவை போட்டு, நெய்யை கொஞ்சம் கொஞ்சமா விட்டு நெய் வற்றவற்ற, கொஞ்சம் கொஞ்சமா நெய்யை விட்டு விட்டு, புங்கம் பூவை வறுத்து கிண்டி எடுத்துக்கனும்னு சொல்லிட்டு,

வாங்கியே ஒருநேரம் வெருகடித்தூள்

மண்டலந்தான் கொண்டிடவே நோயெல்லாம்

ஏங்கியே மேகவகையெல்லாம் ஆரும்

இலவுபட்ட தீப்போல எரிந்துபோகும்

பாங்கியே பத்தியந்தான் பகரக்கேளு

பசிவான புளிப்புகையுந் தள்ளவேண்டும்

ஈக்கியதோர் வாயுவென்ற பதார்த்தம்தள்ளி

இச்சா பத்தியமாக உண்டுதேறே    (199)

புங்கம் பூவை நெய்யில வறுத்து எடுத்ததை, தினமும் ஒரு நேரம் காலையிலேயோ, சாயந்திரமோ காலையில் வெறும் வயிற்றிலையும், சாயந்திரம்னா சாப்பாட்டுக்கு முன்னதாகவோ, ஒரு சிறு ஸ்பூன் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால், மேகவகையான இருபது நோய்களும் ஓடியே போகும்! அது மாதிரி இந்த நோய்களெல்லாம் பஞ்சிலே பட்ட நெருப்பு எரிக்கிற மாதிரி, எரிஞ்சு கருகிப்போகும்! நல்ல குணமாகிக் கிடைக்கும்னும் சொல்லிட்டு, இந்த நெய்யில வறுத்த புங்கம் பூவை சாப்பிடறபோது பத்தியம் இருக்கணும்! புளியையும், புகையையும் வாயு பதார்த்தங்களையும் தள்ளி வச்சுட்டு, இச்சா பத்தியமா இருந்து, ஒரு மண்டலம், சுமாரா 48 நாளைக்கு! இப்படி பத்தியத்தை பத்திரமா பார்த்துவிட்டால், புங்கம்பூ நெய்யில வறுத்தது, முறையா வேலைசெஞ்சு, மேக நோயை குணமாக்கும்! சந்தேகமே வேண்டாம்! என்று போகர் ஐயா சொல்லித்தறார். இவ்வளவு மகிமை இருக்கிறப்போ, புங்கம் பூவை  பூமியிலே சிதற விடலாமா? புங்கம் பூவிலே இருக்கிற மகிமை, மேக நோய்க்கு மருந்தா உபயோகிக்கலாம்னு சொல்றது நல்ல விஷயம் தானே! 

பதிவை பார்த்திட்ட அன்பர்களுக்கு நன்றிகள்!

Leave a comment