நாறு கரந்தை ஞானத்தைக் கொடுக்கும்!

வணக்கம் நண்பர்களே!

நாறு கரந்தை கற்பம். கருவூரார் வாத காவியம் 700 ல், கருவூரார் சொன்ன வைத்திய குறிப்புகளில், இந்த நாறு கரந்தை கற்பம் மிகச் சிறப்பானது! மருத்துவ பக்குவத்தை அறிந்து கொள்ள, தெரிவு செய்ய அறிவு வேண்டும் என்பதற்காகவும், அறிவே முதலானது என்ற கோணத்தில் அறிவுக்கும், சித்திக்கும் ஆரோக்கியத்துக்குமான பக்குவமாக  சொல்லியிருக்கலாம்!

கரந்தை செடிக்கு அறிவியல் தாவர பெயர் (sphoeranthus mirtus)
தாவரக்குடும்பம் ASTERACEAE என்று வழங்கப்படுகிறது.

கரந்தையிலே பல வகைகள் உண்டு.. கொட்டைக்கரந்தை, சிவ கரந்தை, விஷ்ணு கரந்தை, திருநீற்றுப்பச்சை, உருத்திர சடை, சப்ஜா செடி என பல பெயர்களில் சொல்லப்படுவதுண்டு. (நறுமணம் தரக்கூடிய என்று பொருள் படும் நாறுகரந்தை என்று முன்னோர்கள் சொல்லிவைத்தார்களோ? இல்லை, நாருபோல படர்ந்து வளருவதால் இதற்கு நாறு கரந்தை என்று பெயர் வந்ததோ தெரியவில்லை! )

இங்கே கருவூரார் சித்தர் கரந்தை மூலிகையைக் கொண்டு எளிய பக்குவத்தை பாடலாகத் தந்திருக்கிறார். அறிவு கொடுக்கும் மூலிகை என சொல்லப்பட்ட நாறு கரந்தை கற்பத்தை பற்றி பார்க்கலாமா?

நெறியோடே வாழ்வதற்குக் கற்பங்கேளு

நிசநாறு கரந்தையுட கற்பந் தன்னைப்

பெருபூர்வ பட்சபிர தமையிலப்பா

பேதமில்லாப் பவர்ணைசஷ்டி பஞ்மீதான்

திரிதிகையா மிதுகளிலே பூசமோனம்

சேருதற்கு ரோகணிநா ளதுவந்தாக்கால்

உறுதியுட னபிஷேகஞ் செய்துகொண்டு

உற்பனமாய்ப் பழந்தேங்காய் தூபங்காட்டே

நெறியாக வாழ்வதற்கான கர்ப்பமாக, இந்த கரந்தை மூலிகையின் பக்குவத்தை, கருவூரார் சொல்லியிருக்கலாம்! நெறியாக வாழ்வதற்கு அறிவு தேவை அல்லவா? அறிவு இருந்தால் ஒழுக்கம் தானாக வரும்! அல்லது, ஒழுக்கத்தை இன்னவென்று கற்றுக் கொள்ளலாம்! ஒழுக்கத்தை  கற்றுக் கொள்ளவும், கற்றுக் கொடுப்பதற்குமே அறிவு தேவைப்படுகிறது. அந்த அனுபவத்தை அறிவாக மாற்றுவதற்கு, செயல்பாட்டை தீர்மானிக்கும் ஞானம் தேவைப்படுகிறது, அந்த இரண்டையும் பெறுவதற்கு கரந்தை மூலிகையின் பக்குவத்தை சொல்லித் தருவதாக எடுத்துக் கொண்டு, கரந்தைச் செடியை எடுப்பதற்கும், பூர்வ பட்ஷ பிரதமையில், பௌர்ணமி சஷ்டி பஞ்சமி திதியில், ரோகினி நாள்ல, தேங்காய் பழம் சூடம் வைத்து கும்பிட்டு, பக்தியுடன் இந்த கரந்தை செடியை எடுக்க வேண்டும் என்று கருவூரார் சொல்கிறார்.

காட்டியபின் செடியதனை யப்பா நீயும்

கரந்தைச் சமூலம்வாங்கி நிழலுலர்த்தி

வாட்டமிலாச் சூரணமாய்ச் செய்து கொண்டு

வகையாக வெருகடிதான் நெய்யிற்கொள்ளத்

தாட்டிகமா யொருமாதந் தின்பா னாகில்

சத்தியமாய்ப் புத்தியுண்டாம் ஞானமுண்டாம்

கோட்டி யில்லாக் கற்பமிது பத்தியங்கேள்

குருவையரி சிச்சாதம் நெய்யும்பாலாம்

கரந்தைச் செடியை எடுத்தாச்சு! மொத்தமா முழு கரந்தை செடியையும் எடுத்து, நிழலில் காயவைத்து, பொடியாக்கிட்டு, ஒரு சிறு ஸ்பூன் அளவு, சுமாரா 2 கிராம் அளவுக்கு எடுத்து, நெய்யிலே  கலந்து சாப்பிடணும்னும் சொல்றார். அந்த கரந்தை பொடியை, ஒரு மாசத்துக்கு நெய்யில கலந்து சாப்பிட்டு வர்ற போது, சத்தியமா புத்தியும், ஞானமும் வந்திடும்னும் கருவூரார் சொல்றார். புத்தி வர்றதுக்கு கரந்தை மூலிகை பொடி ரொம்ப அவசியம்னு தெரிஞ்சுக்கலாம்! கரந்தை மூலிகை பொடியை சாப்பிட்டுவர்ற காலத்திலேயே, குருவை அரிசியிலே செய்த சாதமும், நெய்யும், பாலும் சாதத்தோட கலந்து சாப்பிடுவதைத்தான் பத்தியமாக சொல்கிறார். புத்தி வரணும்னா பத்தியம் காக்கணும்! 

ஆமென்றும் மற்றொன்று மாகாதப்பா

ஆனகற்ப மிரண்டுமா தந்தான் கொண்டால்

பூமிதனில் நடக்குமொரு வதிசயங்கள்

புகழ்பெறவே தெரியுமப்பா கெதியுந்தங்கும்

வாமமுட னரைவருடங் கொண்டா யாகில்

வகையாக மகாசித்தி யடையலாகும்

காமவலைக் குட்படவு மாகா தப்பா

கருத்தான கற்பமிந்தக் கற்பங் கேளே

சரிப்பா! ஒருமாசமா கரந்தை மூலிகை பொடியை சாப்பிட்டதாலே, புத்தியும், ஞானமும் வந்திருச்சுன்னு தெரிஞ்சதும், அடுத்த மாசமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்னவாகும்னு கேட்கத் தோணும்! ரொம்ப அதிசயமா, உலகத்துல நாளைக்கு நடக்க போறதை, இன்னைக்கே சொல்லக்கூடிய ஆற்றல் கிடைக்கும்கறார்! அதுசரி! இன்னும்கூட, ஒரு ஆறு மாசத்துக்கு, இந்த கரந்தை மூலிகை பொடியை நெயில் கலந்து சாப்பிட்டு வந்தால் என்னவாகும்னுதானே கேட்ட்குறீங்க? ஆகும்! மகா சித்தி வந்துரும்னு சொல்றார்! சொல்லறதெல்லாம் பலிக்கும்னும், நினைச்சதெல்லாம் நடக்கும்னும் சொல்றார்! அந்த அளவுக்கு சித்தி வந்துருங்கன்னும், இதுக்கு பத்தியமா என்ன சொல்றார்னா, காமா வலையில உட்படாதே! என்று கண்டிப்பா சொல்கிறார். அது மட்டுமில்லே!

கேளப்பா நாழிகையோ சனையின் தூரம்

கெடியாகப் போய்வரலாம் கெவுனமார்க்கம்

கேளப்பா ஆகாச கெவுனம்பாய்வான்

கெவுன சித்தி யட்டசித்தி வச்சிரகாயன்

கேளப்பா ஒருவருடங் கொன்டானானால்

கிலேசமிலை வயதுபதி னாறுதோன்றும்

கேளப்பா வருடமா யிரமிருப்பான்

கிருபையுள்ள கற்பமிது கொண்டு பாரே

கரந்தை மூலிகை பொடியை சாப்பிட்டா, வானத்தில் பறக்கலாம்னும், கெவுனமார்க்கமா அண்டங்களைஎல்லாம் சுற்றி வரலாம்னும், இன்னும் அஷ்டமா சித்திகளும் அவர்களுக்கு கை கூடும்னும் கருவூரார் சொல்கிறார். ஒரு மாசம் சாப்பிட்டால் அறிவு ஞானமும் சத்தியமா வந்துடும்! ரெண்டு மாசம் சாப்பிட்டா தீர்க்கதரிசனம் தெரியும்! இன்னும் ஆறு மாசம் சாப்பிட்டா, சொல்லறதெல்லாம் பலிக்கும்! நினைச்சதெல்லாம் நடக்கும்! கெவனமார்க்கமும்,  அஷ்டசித்தியும் கிடைக்கும்னு சொன்னதும், ஒரு வருடம் இந்த கரந்தை மூலிகை பொடியை நெய்யிலே கலந்து சாப்பிட்டு வர்றபோது நரை திரை மூப்பு இல்லாத, என்றும் 16 வயசு போல இளமையும், துடிப்பும், அழகும், ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் கிடைக்கும்னும் கருவூரார் சொல்கிறார். கரந்தை மூலிகை பொடியை சாப்பிட்டு வர்றபோது, குறிப்பாக, கரந்தை மூளிகையோட, இல, வேர், பூக்கம் எல்லாமே மருத்துவ பக்குவத்தில் பல நோய்களைக் குணமாக்க உதவுகிறது.  

  • நோய் எதிர்ப்பு சக்தியும் ரத்தத்தை சுத்தப்படுத்தவும்,
  • இதய நோய்களை குணப்படுத்தவும்,
  • நுரையீரல் பிரச்சினைகளில் இருந்து குணமாகவும்,
  • மூளையின் நரம்புகளை பலப்படுத்தவும்,
  • நரம்புத்தளர்ச்சியிலிருந்து மீண்டு வரவும்,
  • கண் பார்வையை கூர்மையாக்கவும்,
  • மனக் கோளாறுகளை சரி செய்யவும்,

வயிற்றுக் கோளாறுகள், வெள்ளைப்படுதல், கிரந்தி, கரப்பான் நோய்களிலிருந்தும் குணமாக்கவும், இன்னும் பல நோய்களுக்கு அருமருந்தாகவும் கருந்தை செடி பயன்படுகிறது. கர்ப்ப மூலிகைகளில் கரந்தை மூலிகையின் சிறப்பை தமது வைத்தியம் 700ல், பாடலாகவும், பக்குவமாகவும் கருவூரார் சித்தர் சொல்லித்தந்தது நல்ல விஷயம் தானே!

பார்த்த அன்பர்களுக்கும், பகிர்ந்த அன்பர்களுக்கும்  கோடான கோடி நன்றிகள்! 

Leave a comment