போகர் ஏழாயிரத்தில் சொன்ன நன்னாரிக் கஞ்சி பக்குவம்!
போகரய்யா, தமது வைத்திய நூலில், இளைப்பிருமலுக்குக் கஞ்சி என்ற தலைப்பில், 255 முதல் 257வரை பக்குவத்தை பாடலாகத் தந்திருக்கிறார்! நன்னாரியை உபயோகித்து கஞ்சி செய்து, கொடுமையான இளைப்போட வர்ற இருமலுக்கு, ஒரு மருந்தாகவும், உணவாகவும் கஞ்சி பத்தின பக்குவத்தை சொல்லித்தருகிறார்.

நன்னாரி வேருக்கு, Indian sarsaparilla என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. அறிவியல் பெயராக Hemidesmus indicus என்றும் சொல்லப்படுகிறது. நன்னாரி வேரில் பல மருத்துவ நன்மைகள் இருக்கின்றன. இந்தப் பதிவில், நன்னாரியைக் கொண்டு கஞ்சி செய்வதைப் பற்றி இங்கு சொல்லப்படுகிறது!
கஞ்சியால வயிறு நிறையும்! மனசு நிறையும்! அதோட இருமலையும் குறைக்கும்கிறது, நல்ல ஆரோக்கியமான பக்குவம் தான்! போகர் ஐயாவோட பாடல்களில், ஒரு நோய்க்கு கொடுக்கிற மருந்து பக்குவத்துல பல பொருட்களை சேர்க்க சொல்லி இருப்பார்! ஒன்றுக்கொன்று எதிர்வினை ஆற்றி, நோய் குறைந்தாலும் பக்க விளைவுகளையும் வரவிடாதபடிக்கு, இப்படி பொருட்களை சேர்த்து கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாலும், இந்த இருமலுக்கு நன்னாரிக்கஞ்சி பக்குவம், மிக எளிதான பொருட்களைக் கொண்டு, கொடிதான இருமலை குணமாக்குகின்ற பக்குவத்தை, சொல்லித் தந்திருக்கிறார்! பார்த்துவிட்டு வரலாமா?
255.
பார்க்கவே ஏங்கல்உப் பிசமோடு ஈழை
பறந்தோட நன்னாரி பருவேராக
ஏற்கவே கொண்டுவந்து மேற்றோல் போக்கி
எலுமிச்சங் காயளவாய் அரைத்துக்கேளு
ஆர்க்கவே சம்பாநெல் பழந்தண் மூலம்
அல்லாட்டால் கருங்குறுவை அரிசியேனும்
காக்கவே ஒன்றிரண்டாய் இடித்து வாங்கிக்
காற்படியாய் அளந்துசட் டியிலேபோடே
இளைப்போட, வயிறு வீங்கி, சளி ரொம்ப கட்டியிருந்தா அந்த இளைப்பையும், இருமலையும், உப்பிசத்தையும், சளியையும் குனமாக்குறதுக்கு, நன்னாரியோட, பெரிய வேரா பார்த்து எடுத்துட்டு, அந்த நன்னாரி வேரோட மேல் தோலை மட்டும் சீவி எடுத்துட்டு, ஒரு எலுமிச்சங்காய் அளவுக்கு, உருட்டி எடுத்துட்டு, சம்பா நெல் அரிசி, சம்பா அரிசி! பழைய அரிசியா இருந்தா நல்லது, சம்பா அரிசி கிடைக்கலைன்னா, கருங்குருவை அரிசியை கூட எடுத்துக்கலாம்! அப்படியே, அரிசியை எடுத்துட்டு, ஒன்னுக்கு ரெண்டா உடைச்சு, இடிச்சு வாங்கிட்டு, அதில ஒரு கால்படி, 250 கிராம் அளவுக்கு அரிசியை எடுத்து பாத்திரத்தில் போட்டு, தண்ணிய ஊத்தி, அடுப்புல வச்சு, நெருப்பை மூட்டி, கஞ்சி காய்ச்சணும்னும், சாதாரணமா, அரிசியில் கஞ்சி காய்ச்சிற மாதிரியே கஞ்சி காய்ச்சிக்கணும், அவ்வளவுதான்! அடுத்ததா,
256.
போட்டுத்தண் ணீர்வார்த்தே உப்புஇல் லாமல்
பொங்கியே கஞ்சிதான் கொதிக்கும் போது
நாட்டமுடன் முன்னரைத்த பொடியைப் போடு
நலமான தேங்காய்ப்பூ அளவே போடு
ஆட்டவே குழையவெந்து பாகு போலே
ஆகுமடா ஆறவைத்துக் குடிக்கச் சொல்லு
வாட்டமின்றி மூன்றுநாள் ஐந்து நாள்தான்
வகையுடனே தப்பாமல் கொள்ளு கொள்ளே
கஞ்சி கொதிக்கிறபோது, ஏற்கனவே எடுத்து வைத்திருக்கிற நன்னாரி வேரை அந்த கஞ்சியில போட்டுட்டு, தேங்காயை துருவி தேங்காய் பூவையும், அளவா போடணும்கிறார்! கஞ்சியில உப்பு மட்டும் போடக்கூடாது! நல்லா கஞ்சி குழைய வெந்ததும், பாகு பதத்திலே, பாயாசம் பதத்திலே எடுத்து சாப்பிடச்சொல்கிறார். கொஞ்சமும் அலுத்துக்காம, சலிச்சுக்காம நோய் குறையணும்கிற நினைப்போடு, மூணு நாள், இல்லைன்னா ஒரு அஞ்சு நாளைக்கு, மூணு வேளைக்கும் தவறாமல் சாப்பிடணும்னு சொல்லிட்டு,
257.
கொள்ளவே சொன்னநோய் எல்லாம் தீரும்
கொடிதான பத்தியங்கள் இல்லை தானே
அள்ளவே மருந்து இட்ட கஞ்சிக்கு உப்புஒன்று
உதவாது மற்றதெல்லாம் ஆகும் பாரு
கள்ளம்உறும் வாயுப்பண்டம் ஆகா தப்பா
கரப்பன்என்ற பதார்த்தம்எல்லாம் தள்ளு தள்ளு
விள்ளவே நாரிவேர்க் கஞ்சி உண்ட
வேளைதப்பி மற்றதெல்லாம் தின்னு தின்னே
சம்பா அரிசியிலேயோ, குருவை அரிசியிலேயோ, நன்னாரி வேரும், தேங்காய் பூவும் சேர்த்து, உப்பு இல்லாமல் கஞ்சி வச்சு சாப்பிட்டு வரப்போ இளைப்பும், இருமலும், உப்புசமும், சளியும் போயேபோகும்னு சொன்னோமில்லையா? இந்த நன்னாரி கஞ்சி சாப்பிடறபோது, கொடுமையான பத்தியும் ஏதுமில்லை! இதுக்கு பத்தியம் இருக்கான்னு கேக்குற அன்பர்களுக்கு, இந்த கஞ்சி குடிக்கிற போது கொடுமையான பத்தியும் ஏதும் இல்லை என்கிறார். உப்பு சேர்த்துக்க கூடாது, உப்பு சேர்த்துகிட்டா அது வெறும் கஞ்சியா போகும்! மருந்துக் கஞ்சி ஆகாதுன்னும், வாயு பண்டங்கள் ஆகாது! வாயுவை கிளப்பிவிடற மாதிரியான காய்கறிகளையோ, பண்ட பதார்த்தங்களையோ, குறிப்பா சொல்லனும்னா, கருவாடு, மீன், கத்திரிக்காய் போன்றவைகளையும் சேர்த்துக் கூடாதுன்னும், மத்தபடி, நன்னாரி வேர் கஞ்சி சாப்பிடற நேரம் விட்டுட்டு, மற்ற நேரத்துல, மற்ற வியாதிகளுக்கான மருந்துகளை எடுத்துக்கலாம்னும் சொல்றார்!
கிராமங்கள்ல கஞ்சி வைக்கிறதுங்கிறது தினசரி நடக்கிற ஒன்று! கம்பு, கேழ்வரகு, குருணை, சோளத்திலையோ கூட தினமும் கஞ்சி வச்சு சாப்பிடற பழக்கம் இன்னும் இருக்குது! கம்பங் கூழையும், தயிரையும் கலந்து, வெங்காயத்தையோ, பச்சை மிளகாயோ கடிச்சிட்டு கஞ்சிய குடிச்சா, அடடா! எத்தனை இட்லியும் சட்னியும் ஈடு கொடுக்க முடியாது! கஞ்சி வச்சு குடிச்சுப் பாருங்க, இருமலும் தீரும், உடம்பும் தேறும்! நல்ல விஷயம் தானே! போகரையாவுக்கு ஒரு நன்றியை சொல்வோம்!
பதிவை பார்த்தவர்களுக்கும், பகிர்ந்தவர்களுக்கும் நன்றிகள்!
இந்த வீடியோ பதிவை lakslead youtube https://youtu.be/KJGM-HFP3OY?si=lD3ymHXszni6347O சேனலிலும் காணலாம்!