போகர் சித்தர் சொன்னது!
வணக்கம் நண்பர்களே!
போகர் ஐயா தமது வைத்தியம்-500 நூலில், 398 முதல் 399 வரையிலான பாடலில், பல நோய்களை குணமாக்கும் ஆணைஅருகம் புல்லின் அருமையான, இந்தப் பக்குவத்தை நமக்கு சொல்லித் தருகிறார்!
போகரய்யா சொன்ன ஆணைஅருகம் புல்லுக்கு [Scutch Grass] Bermuda grass என்று ஆங்கிலத்திலும், தாவர அறிவியல் பெயராக, Cynodon dactylon என்றும் வழங்கப்படுகிறது.
மேலும், தமிழில் அருகம் புல், மூதண்டம், தூர்வை, மேகாரி, பதம், அறுகை போன்ற வேறு பெயர்களும் உண்டு!

புல்லானாலும் மருந்து! ஆணையருகு புல்லோட இந்த பக்குவத்தால, மேகவகை நோய்கள், வெள்ளை வீழ்தல், மஞ்சள் ரத்தம் போன்ற வகையான நோய் நொடிகள் எல்லாம் பக்கத்திலேயே வரவிடாமல் செய்துங்கறது பெரிய விஷயம் பெரிய விசேஷமும் கூட! பெரிய மருந்துகளால் கூட குணமாக்க முடியாத நோய்களையெல்லாம் சிறு மருந்துகள் பூரணமாக குணமாக்கும்னும் போகர் ஐயா தெளிவா நம்பிக்கையா சொல்லித்தரார். எங்கேயும் சாதாரணமா விளையக்கூடிய புல்லினாலே இவ்வளவு பலன் இருக்குதுங்கறதை தெரிஞ்சுக்க பாட்டையும் விளக்கத்தையும் பார்த்து தெரிஞ்சுட்டு வரலாமா?
அணுகாமல் மேகவெட்டை பிரமே கங்கள்
அகலுதற்கு வகையொன்று புகலக்கேளு
நணுகாமல் ஆனையுட அறுகம் வேரை
நன்றாக ஒருசுமைதான் பிடுங்கிவந்து
குணுகாமல் இடித்துஇதனைப் பாண்டத்து இட்டுக்
குணமாகச் சலம்அதிலே நிரம்பவார்த்துப்
பிணுகாமல் பிசைந்து சீலைவடி கட்டிப்பின்
பிழிந்துகொண்டு சக்கைஎல்லாம் எறிந்துபோடே (398)
அணுகாமல் மேகவெட்டை பிரமேகங்கள் குணமாவதற்கு வகை ஒன்று புகலக் கேளு! மேகவெட்டை, இந்த நோயை தமிழில், வெட்டை நோய் என்றும் ஆங்கிலத்தில் கொணோரியா(Gonorrhea) என்றும் அழைக்கப்படும்.
பிரமேகம் .Gonorrhœa; வெட்டைநோய். தண்டைநோய் மற்றும், மஞ்சள் ரத்தம், இதனையே Hemolytic Jaundice. என்கிறோம். இதுபோன்ற மேகநோய்கள் எல்லாம் வராமல், கிட்டவே வரவிடாமல் தடுப்பதற்கு ஒரு வழிமுறையும் பக்குவமும் இருக்குது சொல்றேன், கேளுப்பா! அப்படின்னு சொல்லிட்டு, நணுகாமல் ஆணையுட அருகம்வேரை, நன்றாக ஒரு சுமை தான் பிடுங்கி வந்து,, கஷ்டமே படாமல், ஆணையருகம் புல்லோட வேரை மட்டும் ஒரு சுமை தான் பிடுங்கி வந்து, ஒரு சாக்கு பையிலே நிரம்பர அளவுக்கு பிடுங்கிட்டு வந்துட்டு, சரி! இந்த ஆணையருகு புல் எப்படி இருக்கும்? பாக்கறதுக்கு பெரிய தண்டோட, தரையிலே படர்ந்து வளர்ந்து கிடக்கும்! பெரிய புல்லு மாதிரி வளர்ந்து கிடக்கும் இந்த ஆணையருகு புல்லோட இலையை பார்த்தா, மற்ற புல்லோட இலையைவிட அகலமாக இருக்கும்! அதுனாலேதான், ஆணையருகுன்னு பெயர் வந்திருக்குமோ என்னமோ! வயல்வெளிகள்ல, தரிசு நிலத்துல நிறைய படர்ந்து வளர்ந்து இருக்கும். அந்த ஆணையருகு புல்லோட வேரை மட்டும் தனியா வெட்டி எடுத்துட்டு, உரல்ல போட்டு நல்லா இடிச்சு, அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, நிறைய தண்ணிய ஊத்தி, ஒரு இரவு முழுவதும் அப்படியே அந்த பாத்திரத்திலேயே ஊறவச்சிட்டு, மறுநாள் ஒரு துணியில வடிகட்டி பிழிஞ்சு, அந்த சக்கை எடுத்து தூரப்போட்டுடனும்னு சொல்றார்.
எறிந்திட்டுப் பிழிந்தசலம் தெளிய வைத்தே
இயல்பாக மூன்றுநாள் சென்றுஇறுத்தே
எறிந்திட்டே அடிவண்டல் உறைந்த வற்றை
எழில்இரவி முன்உலர்த்தி உண்டை செய்து
குறிந்திட்டுப் பக்குவமாய் எடுத்துக் கொண்டு
குணமாக உண்டுவர மஞ்சள் ரத்தம்
தறிந்திட்ட பிரமேகம் வெள்ளை வீழ்தல்
தழலான மேகவகை விழலாய்ப் போமே (399)
எறிந்து விட்டு பிழிந்த சலம் தெளிய வைத்து, இடிச்ச வேரோட சக்கை தூர போட்டுட்டு வடிகட்டின தண்ணீரை அப்படியே பாத்திரத்திலேயே ரெண்டு மூணு நாளைக்கு விட்டுட்டா, பாத்திரத்துக்கு அடியிலே வண்டல் மாதிரி பாத்திரத்தில் உறைஞ்சு கிடக்கிறதை எடுத்து, சிறு உருண்டையா உருட்டி, வெயில்ல காய வெச்சு, காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால், நிறைய நோய்கள் குணமாகும் என்று சொல்கிறார்! குறிப்பா, மஞ்சள் ரத்தம், இதனையே Hemolytic Jaundice. என்கிறோம். பிரமேகம், வெள்ளை விழுதல் அது போன்ற நோய்கள் எல்லாம் குணமாகும்கறார். ஒரு சாக்கு மூட்டையிலே ஆணையருகுவேரை சேகரிச்சு எடுத்து, இடிச்சு வடிகட்டி சக்கையை தூரப்போட்டுட்டு, வேரை ஊறவச்ச தண்ணிய அப்படியே ரெண்டு மூணு நாட்களுக்கு விட்டு, தெளிய வச்சு, வண்டலா பாத்திரத்திலே சேர்ந்திருக்கிற அருமையான ஆணையருகு வேரோட தூளை, சுமார் ஒரு 250 கிராம் அளவுக்கு கிடைச்சதுன்னா, அதில்லேயிருந்து, சின்னசின்ன உருண்டையா, 60 உருண்டைகளாக செய்து, வெயில்ல காய போட்டு எடுத்துட்டு, தினமும் வெறும் வயித்துல, காலையில் ஒரு மாத்திரை வீதம், சாப்பிட்டு வந்தா சுமாரா ஒரு 48 நாளைக்குன்னு கூட எடுத்துக்கலாம்! இப்படி இந்த ஆணையருகு புல்லோட வேரை உருண்டை பண்ணி சாப்பிட்டு வந்தா, பிரமேகம், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ரொம்ப அதிகமா இருந்துச்சுன்னாலும், அதையும் கட்டுப்படுத்தி தூர விரட்டிடும்னு ஆணையருகு புல்லோட மகத்துவத்தை போகர் ஐயா சொல்லித்தருகிறார். நல்ல விஷயம்தானே!
பதிவை பார்த்தவர்களுக்கும், பகிர்ந்தவர்களுக்கும் நன்றிகள்!