யாக்கோபு சித்தர் சொன்னது!
வணக்கம் நண்பர்களே!
ராமதேவர் என்கிற யாக்கோபு சித்தர் தமது ராமதேவர் சிவயோகம் -200 ல் 69 முதல் 71 வரையில், பாடலாக வெள்ளி வித்தையைப் பற்றி சொல்லியிருக்கிறார். இதைப்போன்ற உலோக வித்தைகளைப் பற்றியும், உலோக உப்புகளைப் பற்றியும் மிக தெளிவாகவும்,எளிதாகவும் செய்வதற்கும் சொல்லித்தருகிறார். இந்த பதிவில் கூட அவர் சொல்லித்தந்த வெள்ளி வித்தை செய்வது பற்றித்தான் சொல்லப்போகிறோம்!

இன்றைக்கும் கூட வெள்ளிக்கு அதிகமான வரவேற்ப்பும், மதிப்பும் இருக்கிறது. வெள்ளியை எப்படி செய்வது என்கிற வித்தைக்குக் கூட வரவேற்ப்பு இருக்கிறது! தங்கத்தால் செய்யமுடிகின்ற பல வடிவங்களையும், சிலைகளையும் கூட வெள்ளியால் செய்து மக்கள் பயன்படுத்திக்கிட்டு வர்றாங்க! மோதிரத்தில் தொடங்கி, மெட்டியோட வளையல் மூக்குத்தின்னு சேர்த்து அலங்கார பொருட்கள் இன்னும் நிறையவே வந்துட்டு இருக்குது. பல்லு குத்துவதற்கு கூட வெள்ளியில் செய்த கம்பிகளை பயன்படுத்துகிறார்கள்! பாக்குறதுக்கு வெள்ளையா பளபளன்னு இருந்தாலும், நாளடைவில் கருத்துப் போகும்கிறதாலே வெள்ளியை குறைச்சு மதிப்பிடக் கூடாது. வெள்ளிக்கும் பலன் இருக்கிறது, மூனேமூணு பாட்டு, வெள்ளி வித்தையாலே நாமே வெள்ளி செய்கிற வித்தையை ராமதேவரய்யா சொல்லித்தர்ற பாடலையும் பக்குவத்தையும் பார்த்து வரலாமா?
பாரப்பா பிரிதீவின் கடாட்சத்தாலே
பக்குவமாய் வெகுதொழில்க ளாடலாகும்
தேரப்பா மனந்தேறி வெள்ளிவித்தைச்
செவ்வையாய்ச் சொல்லுகிறோம் நன்மையாக
நீரப்பா நிறைந்துநின்ற வெள்ளீயத்தில்
நினைவாக வந்திருக்கும் ரசத்கைத்தாக்கி
சேரப்பா யதற்குநிகர் பாஷாணத்தைச்
சேர்த்து நன்றாய்ப்பிரிதீவைச் சேர்த்துக்கொள்ளே (69)
பிரிதீவின்னா நிலம்! இந்த பூமியிலே என்னென்னவோ நல்ல பல தொழில்கள் செய்து வாழலாம்னும், மனசுலே கருத்தா சொல்லுறத கேட்டு,வெள்ளி வித்தையையும் கத்துக்கோ, மனசுல பட்டதை, நல்லதை நாலு பேருக்கு சொல்லித்தரலாம்னு, இந்த வெள்ளி வித்தையை பத்தி சுத்தமா சொல்லித்தரேன்னு சொல்லிட்டு, வெள்ளீயம்னு சொல்ற உலோகத்தை வாங்கணும்! அடுத்ததா, பாதரசம் வாங்கிக்கணும்! அடுத்து, துத்த நாகம்கற உலோகத்தை எடுத்துக்கணும்! வெள்ளீயம், பாதரசம், துத்தநாகம் அப்படிங்கறது, வெள்ளீயத்துக்கு ஆங்கிலத்தில் ‘டின்’ (tin) அப்படின்னு சொல்லுவாங்க! பாதரசத்தை ‘மெர்க்குரி’ (mercury) என்று சொல்லுவார்கள்! துத்தநாகத்தை ‘சின்க்’ (zinc) என்று சொல்லுவார்கள்! மேலே சொன்ன உலோகங்களை கடைகளில் கேட்டு வாங்கிட்டு, ஒரு இரும்பு சட்டியை எடுத்து அடுப்பில் வைத்து நெருப்ப மூட்டி சட்டி நல்லா சூடானதும், வெள்ளீயத்தை சுமாரா ஒரு 1/4 கிலோ அளவுக்கு, போட்டு சூடாக்கும் போது கொஞ்ச நேரத்திலேயே அது தண்ணிபோல உருகிடும்! அப்படி நல்லா உருகி நிக்கிறபோ, பாதரசம் கொஞ்சமா ஒரு 50 கிராம் அளவுக்கு கூட சேர்த்துட்டு, ஒரு குச்சியாலே கலக்கிற போது,, வெள்ளீயமும், பாதரசமும் ஒன்னு சேர்ந்து உருகி நிக்கும்! அந்த சமயத்துல கொஞ்சமா, துத்தநாகத்தை எடுத்து, சுமாரா ஒரு 50 கிராம் அளவுக்கு எடுத்துட்டு, உருகி நிக்கிற வெள்ளீயமும், பாதரசமும் சேர்ந்த கலவையோட சேர்த்து போட்டுட்டு, கொஞ்ச நேரம் நல்லா உருகினதும் கலக்கி விட்டா எல்லா உலோகமும் ஒன்று சேர்ந்த மாதிரி உருகி புட்டு மாதிரி இல்ல மணல் மாதிரி பொடிப்பொடியா ஆகி கிடைக்கும்! துத்தநாகம், வெள்ளீயத்தையும், பாதரசத்தையும் உடைச்சுடும்! அதினாலே மணல் மாதிரி கிடைக்கும்னும் சொல்கிறார்! அத கவனமா சட்டில இருந்து இறக்கி வச்சிட்டு, அடுத்ததா,
சேர்த்து நன்றாய்க் கல்வத்தில் பழச்சாற்றைவிட்டுச்
செவ்வையாய்த் தானரைத்து வட்டுபண்ணிப்
போற்றிரன்றாய் மண்மறைவிற் புடத்தைப்போடு
போக்கான நாற்சரக்குங் கட்டிப்போகும்
பார்த்திபனே யதையெடுத்து வைத்துக்கொண்டு
பதிவாகச் செம்புருக்கி யதனிற்றாக்கு
நாற்றிசையு மெய்க்கவேதான் வெளுத்துப்போகும்
நன்றாகப்பத்திலொன்று வெள்ளிசேரே (70)
வெள்ளீயத்தையும், பாதரசத்தையும், துத்தநாகத்தையும் சேர்த்து உருக்கினபோது, மணல் மாதிரி கிடைச்ச உலோகத்தை, எலுமிச்சம்பழச் சாற்றை விட்டு நல்லா அரைச்சு எடுத்துட்டு, அதை ஒரு சின்ன சின்ன வில்லைகளாக தட்டி, அதாவது, வட்டமான டோக்கன் மாதிரி தட்டி, வெயில்ல வச்சு காய வைக்கணும்! அடுத்து, வில்லைகள் நல்லா காய்ஞ்சதும் எடுத்து, ஈரமான களிமண்ணை எடுத்து, களிமண்ணால் வில்லைகளை பொதிந்து உருட்டி, உருண்டை வடிவத்தில் செஞ்சு, அந்த மண் உருண்டை கட்டிகளை வெயில்ல காய வச்சுட்டு, மண் உருண்டைகள் நல்லா காய்ஞ்சதும் எடுத்து புடம் போடணும்னு சொல்றார். புடம் போடுவது என்பது, ஈரமில்லாத தரையில் பத்து வரட்டி எருவுகளை அடுக்கி வைத்து, அந்த வரட்டி எருவுக்கு மேலே, காய்ஞ்ச மண் உருண்டைகளை வைத்து நெருப்பை மூட்டவேண்டும்! இந்த முறைக்கு புடம் போடுதல் எனப்படும்! புடம் போடும் முறைகள் பல அளவுகளில் உள்ளன. புடம் போடுவது பற்றி கொஞ்சம் தெரிஞ்சுகிட்டா நல்லது! இல்லை, தெரிஞ்சவங்ககிட்டே கேட்டு தெரிஞ்சுகிறதும் நல்லது! புடம் போட்டு சூடு ஆறினதும் எடுத்து, மண்ணை உடைச்சு உள்ளிருக்கும் வில்லைகளை எடுத்துப்பார்த்தால், உலோககட்டியாக மாறி கிடைக்கும்! அதை பத்திரமாக எடுத்து வைத்துவிட்டு, அடுத்ததா, செம்புங்கற (copper) உலோகத்தை எடுத்து, மூசையின்னு சொல்கிற பாத்திரத்திலே போட்டு உருக்கனும்! வெள்ளீயத்தையும், பாதரசத்தையும், துத்தநாகத்தையும் இரும்பு சட்டியில் போட்டு உருக்கணும் ஆனால், இந்த செம்பு (copper) ரொம்ப கடினமான உலகம்! அதினாலேதான் மூசையில் உருக்க வேண்டும்! அப்படி மூசையிலே சுமாரா 100 கிராம் அளவுக்கு செம்பு எடுத்துக்கிட்டாலும் சரி, 50 கிராம் எடுத்துகிட்டாலும் சரி! செம்பு உருகி வருகிற நேரத்துல, புடம் போட்டு எடுத்து வச்சிருக்கிற உலோக உருண்டைகளையும் போட்டு உருக்கும்போது, செம்பும், உலோக உருண்டையும் சேர்ந்து கலந்து, செம்போட சிவந்த நிறம் மாறி, வெள்ளை நிறத்துக்கு மாறியிருக்கும்னு சொல்கிறார்!
சேர்த்துருக்கிப் பார்க்கவெள்ளி மாற்றுத்தானும்
செவ்வையுடன் பத்துமாற்றா குமப்பா
பார்த்திபனே யிவ்வேதை பத்திப்பார்த்து
பத்திகொண்டு யோகமதில் பதிவாய்நில்லு
கார்த்தருள வேண்டுமென்று குருவைக்காரு
வானமதி யமுர்த முள்ளேகொள்ளு
பூர்த்தமலர் வாசனைபோல் யோகநிஷ்டை
புநிதமுட னாசனமும் புகலக்கேளே (71)
அந்த நிறம் வெள்ளையாக மாறின செம்புத்துண்டை பத்துக்கு ஒரு பங்காக, அதாவது, 10 கிராம் அளவுக்கு வெட்டி எடுத்த செம்புத்துண்டோட, கூடவே 1 கிராம் அளவுக்கு, சுத்தமான வெள்ளி சேர்த்து சிறு மூசையிலே உருக்கி எடுத்துப் பார்த்தால், அந்த செம்பு உலோகம் மொத்தமும் வெள்ளி மாதிரி மாறி இருக்கும்னும், அது வெள்ளியோட தரத்துல 10 மாத்து வெள்ளியாக இருக்கும்னும் யாக்கோபு சித்தர் சொல்லித்தறார்! இந்த வெள்ளை வெள்ளி வித்தையை கவனமாகவும், பக்தியோடவும் அறிந்துகொண்டு, பலவிதமான அலங்கார பொருட்கள் செய்து, தொழிலில் வருமானமும் பொருளும் நிறைய வந்தாலும்கூட, சொல்லித்தந்த குருவையும், இறைவனையும் மறக்காமல் இருக்கணும்னும் அன்போட சொல்லிட்டு,

செம்பு உலோகத்தை வெள்ளையாக மாத்துகிற இந்த பக்குவத்தை செய்கிறபோது, உலோகத்தை பத்தின ஞானமும், அனுபவமும், புடம் போடுவது பத்தின தெளிவும் இருக்கிறவங்களோட அறிவுரையோடவும், ஆலோசனையோடவும், பயிற்சி செய்தும் இந்த வெள்ளை வெள்ளி வித்தையை செய்து பழகிக்கலாம் அப்படின்னு யாக்கோபு சித்தர் ஐயா நமக்கு எல்லாம் சொல்லித்தந்தது நல்ல விஷயம் தானே!
பதிவை பார்த்தவர்களுக்கும், பகிர்ந்தவர்களுக்கும் நன்றிகள்!