திருவாசகத்தில் ‘குலாப்பத்து’   

செல்வம் குவிக்கும் 10 பாடல்கள்

வணக்கம் நண்பர்களே!

திருச்சிற்றம்பலம்!

குலா என்பதற்கு தமிழ் அகராதியில், குலவு, ஒன்றுசேர், கூட்டம், நட்புறு, வளை, விளங்குதல், கொண்டாடு என்று பல பொருள்கள் சொல்லப்பட்டிருக்கின்றது. இங்கே மாணிக்கவாசகர் பெருமானார், இறைவனோடு குலவுதல், இறைவனோடு ஒன்று சேருதல் என்கிறதும், நட்புறுதல், இறைவனோடு ஐக்கியமாகி,கொண்டாடுதல் என்ற பொருளில், இறைவனோடு தன்னைக் கொண்டுவிட்டதையும், தன்னைக் கொடுத்துவிட்டதையும் கருத்தில் கொண்டு ‘குலாப்பத்து’ என்கிற தலைப்பிட்டு இந்தப் பாடல் வரிகளை மனதுருகி பாடியிருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரு ஆவுடையார் கோயில் சென்று இருந்தோம். மாணிக்கவாசகர் பெருமானின் திருவாசகம் பிறந்த ஊர் என்பதாலோ என்னவோ, ஊர் திரும்பவே மனம் இடம் கொடுக்கவில்லை! ஆவுடையார் கோயிலின் அழகையும் அறிவார்ந்த பக்தி ஞானத்தையும் கண்டு மெய் மறந்து தினமும் ஒரு முறையாவது மாணிக்கவாசகரையும் ஆவுடையார் கோயிலையும் பற்றி பேசிக் கொண்டிருப்போம்! திருவாசகத்தை படிக்க ஆர்வம் இருந்தாலும், எனக்குள் அந்தப் பாடலை விளக்கி எழுத துணிவில்லை! மிக எளியோனுக்கு அந்த எண்ணம் வரலாமா? தமிழ் கற்ற சான்றோர்களால், மெய்யும், மனமும் கலந்து, விளக்கம் தரப்பட்ட திருவாசகத்தை  என்னால் விளக்கி எழுத முடியுமா?  என்ற பயத்தை, இறைவனே போக்கியருள வேண்டும், என்ற கோரிக்கையோடு, திருவாசகத்தின் மகிமையையும், தமிழின் சுவையையும்  என் அன்பான பார்வையாளர்கள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்ற ஆர்வத்தில், திருவாசகத்தில் இருந்து ‘குலாபத்து’ சதகத்தின்  பாடலை விளக்கிச் சொல்கிறேன்! திருவாசகத்தில் மொத்தமாக 656 பாடல்கள் இருந்தாலும், குலாபத்து பாடலை வாசித்தாலோ கேட்டாலோ பணமும் செல்வமும் கொட்டும் என்று, பெரியோர்களால் அறிந்தும், தெரிந்தும், அனுபவித்தும்  சொல்லப்பட்ட, பெருமக்களால் போற்றி பாடப்பட்ட குலாபத்து பாடல் பகுதியின் விளக்கத்தை சொல்ல துவங்குகிறேன்! 

இறைவனை வணங்கவேண்டும்! வணங்குதற்கு முன், தம் இறைவன் யாரென்றும், ஏன் இந்த இறைவனை வணங்கவேண்டுமேன்றும்,,தாம் ஏன் இந்த இறைவனைத் தேர்ந்தேடுத்தோமென்றும், இந்த இறைவனிடத்தில் எதற்காக அன்பு கொள்ள வேண்டும் என்பதுடன், எதற்காக தம்மை இறைவனிடம் ஒப்படைக்க வேண்டும்? எப்படி இந்த இறைவன் தம்மை ஈர்த்தான் என்றும், தில்லையம் பெருமானை கண்ட நொடியிலேயே, எப்படி சரணாகதி அடைந்தேன் என்று மாணிக்கவாசகர் பெருமானே தான் கண்டு, மெய்மறந்த தன்னையே அர்ப்பணிக்கச்செய்த பொன்னார்மேனியனை, எம்பெருமானை, அந்த ஈசனை கண்டதும் என்னை கொண்டு விட்டார் என்று இந்த 10 பாடல்களில், மனம் உருகி பாடியிருக்கிறார்! பாடலுக்குள் போகலாமா?

557. ஓடுங் கவந்தியுமே உறவென்றிட் டுள்கசிந்து

தேடும் பொருளுஞ் சிவன்கழலே யெனத்தெளிந்து

கூடும் உயிருங் குமண்டையிடக் குனித்தடியேன்

ஆடுங் குலாத்தில்லை யாண்டானைக் கொண்டன்றே

ஓடும் கவந்தியுமே உறவின்றிட்டுள் கசிந்து, ஓடும்,  ஓடும்னா திருவோடும், கவந்தியுமேன்னா, துண்டுமே போர்வையுமே என்றும் எடுத்துக் கொள்ளலாம்!   ஓடும், வீடும், சொத்தும், பாத்திரமும், பண்டமும், ஆடை ஆபரணங்களுமே சொந்தமான உறவு என்று மனதிற்குள் ஆனந்தப்பட்டுக் கொண்டிருந்தபோது 

தேடும் பொருளும் சிவன் கழலே எனத் தெளிந்து, தேடிக் கிடைக்கின்ற பொருளெல்லாம், சம்பாதித்து திரட்டி வைத்த பொருள் எல்லாம், கூடவே சேர்த்து வைத்திருக்கும் சொத்தும் பாத்திரமும் ஆடை ஆபரணங்கள் எல்லாம் சிவனுக்கு உண்டானது என்றும், சிவனால் கொடுக்கப்பட்டது என்றும் தெளிவானதும்,  கூடும் உயிரும் குமண்டயிட குனித்த அடியேன்.. இந்த உடம்பையும் உயிரையும் என் தலையில் நிறுத்திக் கொள்ள, இந்த உடம்பைப் பற்றிய கவலையையும், உயிரைப் பற்றிய கவலையையும் என் தலையில் ஏற்றிக் கொள்வதற்கு ஒருபோதும் குனிந்து என் தம் தலையை கொடுக்க மாட்டேன் என்றும்,  ஆடும் குலாத்தில்லை யாண்டானை கொண்டன்றே,   தில்லையில் ஆடுகின்ற ஆண்டவனை சரணாகதி  கொண்ட பிறகு, இந்த உயிரும், உடலும் அவனுக்கு என்று அர்ப்பணித்து விட்ட பிறகு, என் ஆண்டவனை என் தலையில் சுமந்திருக்கும் பொழுது எதற்காக இந்த உடலைப் பற்றியும் உயிரைப் பற்றியும் தலையில் ஏற்றிக்கொண்டு ஏன் கவலைப்பட வேண்டும் என்று அடியவர்க்கு  உணர்த்திய இறைவனை, எம்பெருமானைக் கண்ணால் கண்ட உடனேயே அந்த நொடியே  என்னைக் கொண்டு விட்டார்! என்னையே கொடுத்து விட்டேன் என்று மாணிக்கவாசகர் பெருமானார் சொல்லுகிறார்! இறைவனை தலையில் ஏற்றி விட்டால், உடலைப்பற்றியும், உயிரைப் பற்றியும் எதற்க்காக கவலைப்படவேண்டும் தலைவனை, இறைவனை சுமக்கும் தலைகளுக்கு,எல்லாமே சுபம்தான் என்று எடுத்துக்கொண்டு, அடுத்ததாக,

558. துடியே ரிடுகிடைத் தூய்மொழியார் தோள்நசையால்

செடியேறு தீமைகள் எத்தனையுஞ் செய்திடினு

முடியேன் பிறவேன் எனைத்தனதாள் முயங்குவித்த

அடியேன் குலாத்தில்லை யாண்டானைக் கொண்டன்றே

துடி என்றால், உடுக்கை! உடுக்கை இடை கொண்ட மகளிரின் அன்பொழுகும் வார்த்தையாலும், தோள் வனப்பாலும் மன சஞ்சலமடைகின்ற, நசையால் அப்படின்னு எடுத்துக்காம, உடுக்கையின் இரு பக்கமும் ஒலி தருகிற இசைக்கருவியை போல, தம் செல்வத்தாலும், அதிகாரத்தாலும் இருபக்கமும் வலகரமும் இடக்கரமுமாக, தம்மைச் சுற்றிலும், தம்மை புகழ்ந்தும், பாராட்டியும் கூட்டமாக இருக்கிற, உறவுகளும், சொந்தங்களும், நண்பர்களும் சுற்றி இருக்கிற தைரியத்தில், வலிமையில் அவர்களின் பாராட்டை பெற வேண்டி, அவர்களை மகிழ்விக்க வேண்டி,, செடி ஏறு தீமைகள் எத்தனையோ செய்திடினும், கொடி போல படர்ந்து விரிந்து வளர்கிற செடியைப் போல, எண்ணிக்கை இல்லா தீமைகளும் கொடுமைகளும் செய்திருந்தாலும், முடியேன், பிறைசூடிய பெருமானின் பாதத்தில் சரணாகதி அடைந்த அடியார்களுக்கு, அன்றே, இனி பிறவேன், மீண்டும் பிறப்பதென்பது இல்லையென்ற  பாக்கியத்தை தந்துவிடுகின்ற, என் ஈசனைக் கண்ட நொடியே கொண்டு விட்டேன்! என்னையே தந்து விட்டேன்! என்று மாணிக்கவாசக பெருமானார் சொல்கிறார்! எத்துணை பாவங்களும், தீமைகளும் செய்திருந்த போதிலும், மனம் உருகி வேண்டி,  இறைவனின் பாத மலர்களில்,  சரணாகதி அடைந்து விட்டால் மறுபிறவி  என்பதில்லை என்று தாம் உணர்ந்த மறு நொடியே தம்மை தந்துவிட்டதாக மனமுருகி பாடுகிறார்! அடுத்ததாக,

559. என்புள் ளுருக்கி இருவினையை யீடழித்துக்

துன்பங் களைந்து துவந்துவங்கள் தூய்மைசெய்து

முன்புள்ள வற்றை முழுதழிய வுள்புகுந்த

அன்பின் குலாத்தில்லை யாண்டானைக் கொண்டன்றே 

அடியார்களின்  உள்ளத்தில் இருந்த கெட்ட எண்ணங்களையும், சிந்தனைகளையும் உருக்கித் தெளிய வைத்து, நல்ல எண்ணத்தையும், நற்சிந்தனையையும் கொடுத்து, இருவினையான பிறப்பையும் இறப்பையும் இல்லாமல் செய்து, துன்பங்களையும் மனதையும் குணத்தையும் சுத்தம் செய்து, துடைத்தெடுத்து முன்பு செய்த தீமைகளையும், கொடுமைகளையும் அழித்து கரை சேர்க்கின்ற என் அன்பான இறையை, தில்லையம்பெருமானை கண்டதுமே, கண்ட நொடியே தம்மைக் கொண்டுவிட்டார் என்றும், தாம் தன்னையே தந்துவிட்டேன் என்றும், பொன்னம்பலத்தானை சரணாகதி அடைந்துவிட்ட பிறகு, தமக்குள் இருந்த, தம்  உள்ளத்திலிருந்த கசடுகளும், தீமைகளும் போய்விட்டது என்று பாடலாய் சொல்லிவிட்டு, அடுத்ததாக,

560. குறியும் நெறியும் குணமுமிலார் குழாங்கடமைப்

பிறியும் மனத்தார் பிறிவரிய பெற்றியனைச்

செறியுங் கருத்தில் உருத்தமுதாஞ் சிவபதத்தை

அறியுங் குலாத்தில்லை யாண்டானைக் கொண்டன்றே 

குறிக்கோள் இல்லாதவர்கள், நல்ல நெறியும், நல்ல பண்பும், நீதியும் இல்லாதவர்கள் நல்ல குணமே இல்லாத கூட்டத்தினரோடு சேர்ந்து கொண்டு, கொடுமைகள் செய்வதையே கடமையாக கொண்டவர்களையும் கொண்டவர்களை உறவாகவும் சொந்தங்களாகவும் பெற்றிருந்த குணத்தார்கள்,  தில்லையம்பெருமானின் அமுதமான சிவ பதத்தை பற்றிக் கொண்டதும்  அவர்களுக்கு அருள் தந்து, அடியார்களாக்கி,  நல்ல குணமும், நற் சிந்தனைகளையும் கொடையாக கொடுக்கிற, எம்பெருமானை, எம் ஈசனை கண்ட அன்றே சரணாகதி அடைந்து விட்டதாகவும், அந்த நொடியே தம்மை தந்துவிட்டதாகவும், மனம் உருகி மாணிக்கவாசகர் பெருமானார் தில்லையம் பெருமானை கண்டவுடன் தம்மைக் கொண்டவுடன் தமக்கு நல்லவைகளும், நற்சிந்தனைகளையும் அருளச்செய்த பெருமானே! என்று பாடிவிட்டு அடுத்ததாக,   

561. பேரும் குணமும் பிணிப்புறுமிப் பிறவி தனைத்

தூரும் பரிசு துரிசறுத்துத் தொண்டரெல்லாம்

சேரும் வகையாற் சிவன்கருணைத் தேன்பருகி

ஆருங் குலாத்தில்லை யாண்டானைக் கொண்டன்றே 

பேரும், பிறப்பு என்கிறதையும், குணம் என்பதற்கு, பிறவி குணத்தையும், பிணியும் தருகின்ற பிறவிதனை அப்படின்னும் எடுத்துக்கலாம்! நல்ல பெயரும், பட்டங்களும், பதவிகளும் புகழும் பெற்று வாழுகின்ற இந்த பிறவியில் மூப்பும், பிணியும், கலந்து  உழலுகின்ற இந்த பிறவியில், அள்ளி எடுத்துக்கொண்ட பொன்னும், பொருளும், தாமாக உழைத்துச் சேர்த்த சொத்தும், மற்றவர்களிடமிருந்து அபகரித்துச் சேர்த்த சொத்துகளையும், பரிசுகளையும், பாரமாக எண்ணி விட்டுவிட்டு, உதறிவிட்டு, தில்லையம் பெருமானின் திருவடிகளையே கதியென்று வருகின்ற தொண்டர்களையெல்லாம், இறைவனின் கருணைத்தேன் பருகி, பெருமானின் அருளால் பிறவி இல்லாத பெருவாழ்வு பெற்று, ஆனந்தக் களிப்போடு அடியார்களின் மனம் குளிர்விக்கும் எம்பெருமான் தில்லையம் பெருமானைக் கண்டதுமே  கொண்டுவிட்டேன்! தம்மையே தந்து விட்டதாக மனம் உருகி பாடலாக பாடிய மாணிக்க வாசகர் பெருமானார் அடுத்ததாக,  

  562. கொம்பி லரும்பாய்க் குவிமலமாய்க் காயாகி

வம்பு பழுத்துடலம் மாண்டிங்கன் போகாமே

நம்புமென் சிந்தை நணுகும்வண்ண நானணுகும்

அம்பொன் குலாத்தில்லை யாண்டானைக் கொண்டன்றே 

சிறப்பான பிறப்பெடுக்க வேண்டி, கொடியில் அரும்பாகி, மொட்டாகி, மலராகி, காயாகி, வாழ்ந்து, இந்த சிறப்பான மனிதப் பிறவியில் பிறந்து, குழந்தையாகி, குமரன் ஆகி, பெரியவனாகி, வாழும் காலம் முழுதும் உழைத்து,வாழ்க்கையோடு போராடி, வயதாகி, உடல் சோர்ந்து, பழுத்து, உடல் மாண்டு போகாமல், நம்பும் என் சிந்தை,  நம்புகின்ற அடியார்கள் தம் மனதில், நம்பிக்கையை கொடுத்து, அடியார்களின் சிந்தையோடு கலந்து,  மனதை ஆட்கொண்டு, தம்மோடு ஒன்றி கலக்க வைக்கும் எம்பெருமானை கண்டதும், தம்மையும் ஆட்கொண்டு, தம் சிந்தையிலும் ஒன்றிக் கலந்து, தம்மை உணர வைத்த பொன்மேனியன் எம்பெருமானை கண்டதும், அன்றே அந்த நொடியிலே கொண்டுவிட்டேன்! சரணாகதி அடைந்து விட்டேன் என்று சொல்லி மனமுருகி பாடிவிட்டு,  அடுத்ததாக,

563. மதிக்குந் திறலுடைய வல்லரக்கன் தோள்நெறிய

மிதிக்குந் திருவடி யென்றலைமேல் வீற்றிருப்பக்

கதிக்கும் பசுபாசம் ஒன்றுமிலோம் எனக்களித்திங்

கதிர்க்குங் குலாத்தில்லை யாண்டானைக் கொண்டன்றே

எல்லோரும் மதிக்கின்ற அதிகாரமும், செல்வமும் இருப்பதால், ஆணவமும் அகங்காரமும் செருக்கும் கொண்டு வாழ்கின்ற,  அரக்கர்களின் குணத்தோள்களை, குணத்தோர்களின் குணங்களான, அதிகாரத்தையும், ஆணவத்தையும், அகங்காரத்தையும், செருக்கையும்  மிதித்து, நெறித்து, ஒடுக்கும் வல்லமை கொண்ட  இறைவனின் திருவடிகளை தம் தலை மேல் கொண்டபோது, துன்ப வாழ்வு கொடுக்கின்ற பந்தமும், பாசமும் ஒன்றுமே இல்லை என்பதை உணர வைத்து, தம்மோடு ஒன்றிக் கலந்து உயர்கின்ற,அருள் கொடுத்து, அடியார்களை ஆனந்தக் களிப்படையச் செய்யும்   எம் பெருமானை கண்டதும், அன்றே, அந்த நொடியே சரணாகதி அடைந்து விட்டேன்! என்னையே தந்து விட்டேன்!  என்றும் மனமுருக பாடிவிட்டு, அடுத்ததாக,

564. இடக்குங் கருமுருட் டேப்பின் கானகத்தே

நடக்குந் திருவடி யென்றலைமேல் நட்டமையால்

கடக்குத் திறலைவர் கண்டகர் தம் வல்லாட்டை

அடக்குங் குலாத்தில்லை யாண்டானைக் கொண்டன்றே

இந்த வரிகளுக்கு இடுகாட்டில், இருட்டில் நடக்கின்ற சிவபெருமானின் திருவடி, என்று எடுத்து பொருள் கொண்டாலும் சரி!  இடர்பாடுகள் உள்ள, கடும் இருட்டோடு, கானகத்தில் பரிதவிக்கும்  நிலை போல இருக்கும் இந்த வாழ்க்கையில், இந்தப் பிறவியில், துயர் நிறைந்த வாழ்வில், இறைவனின் பொற் திருவடிகளை தம் தலையின் மீது வைத்துக் கொண்டபோது, வாழ்வின் எந்தவித இடர்களும், தொல்லைகளும், துயர்களும், பொல்லாதவர்களின் கொடுமையான ஆட்டத்தையும், அட்டகாசத்தையும்,  அடக்கி வைத்து, அடியார்களுக்கு, அன்போடு வழிகாட்டி, கரம்கொடுத்து, அரவணைத்து, பிறவித் துன்பத்தை துடைத்தெடுத்து, தம்மோடு ஒன்றிக் கலக்க வைக்கும்,  எம்பெருமானே தில்லையம்பெருமானை கண்டதும், சரணாகதி அடைந்து விட்டேன்! மனதில் அன்றே கொண்டு விட்டேன் என்று மனமுருகி சொல்லிவிட்டு, அடுத்ததாக,

565. பாழ்ச்செய் விளாவிப் பயனிலியாய்க் கிடப்பேற்குக்

கீழ்ச்செய் தவத்தாற் கிழியீடு நேர்பட்டுத்

தாட்செய்ய தாமரைச் சைவனுக்கென் புன்றலையால்

ஆட்செய் குலாத்தில்லை யாண்டானைக் கொண்டன்றே

பாழான நிலத்தை உழுதும், விளைவித்துப் பொருள் சேர்க்க நினைக்கும், பாழான நிலத்தில் விளையவைப்பது எவ்வளவு கடினமோ, அதுபோல, பயனில்லாததை செய்கிறவர்களுக்கு என்று எடுத்துக் கொண்டாலும் சரி! பாழ் செய், கெட்டதை மட்டுமே நினைக்கின்ற, கெட்டதை மட்டுமே செய்வதும், சொல்வதுமாக பண்பில்லாத பயன் இல்லாததையே செய்து வாழ்கின்ற, வாழ்ந்த மக்களுக்கும் கூட, மனதுருகி அந்த தாமரைச்செல்வனான சிவபெருமானின் பாதங்களை தம் தலையில் வைத்து, அப்பெருமானின் பாதங்களை பற்றி கொண்டால், அவர்கள் தம் முற்பிறவியில் செய்த சிறுசிறு புண்ணியங்களையெல்லாம் ஒன்று திரட்டி, பொற்கிழி போல் சேர்த்து எடுத்து, அம்மக்களுக்கும் அருள் பாலித்து,  அவர்களையும் தம்முள் கலந்து, அடியார்களாக ஏற்றுக் கொள்கின்ற, அன்பான எம் பெருமான் தில்லையம்பெருமானை கண்டதுமே, அன்றே அந்த நொடியே, கொண்டு விட்டேன்! சரணாகதி அடைந்து விட்டேன்! என்னையே தந்து விட்டேன் என்றும் மனமுருக பாடலாகச்  சொல்லிவிட்டு, அடுத்ததாக,

 566. கொம்மை வரிமுலைக் கொம்பனையாள் கூறனுக்குச்

செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக்

கிம்மை தரும்பயன் இத்தனையும் ஈங்கொழிக்கும்

அம்மை குலாத்தில்லை யாண்டானைக் கொண்டன்றே

அடியும் முடியும் அளவிட முடியாத, ஆனந்த கூத்தன் எம் பெருமானின் இடப்பக்கம் வீற்றிருக்கும், என் அன்னை உமையாளை சரிநிகராய் உடல் கொடுத்து, உள்ளம் கொடுத்த இறைவனை, சுத்தமான பக்தி மனதால் நொடிப்பொழுதும் ஆராதிக்கிற, அடியார் பெருமக்களின் வாழ்வில், இடர் தரும், துன்பம் தருவனவற்றையும் துன்பத்தால் பெறுகின்ற துயர் அனைத்தையும், அடியோடு அழித்து ஒழிக்கும் அம்மையப்பனென்று, கண்டதுமே சரணாகதி அடைந்து விட்டேன்! என்னையே தந்து விட்டேன்! இப்பூவுலகில், அவ்விறையின்,பொற்திரு பாதங்களை தலையில் சுமந்து, அருள் பெற்ற அடியார்க்குள் அடியேனையும் அடியாராய் ஆட்கொள்ள வேண்டி, இறையான தில்லையம்பெருமானை கண்ட நொடியில், கண்ட அன்றே ஈர்க்கப்பட்டேன்! என் சிந்தையும் செயலும் அவனே என்று வாழும் வாழ்வு மட்டும், வலம் வருவேன் என்று மாணிக்கவாசகர் பெருமான் மனமுருகி பாடிய குலாபத்து பதிகத்தில், இறைவனை நேசித்ததையும், அவன் அன்பை வாசித்ததையும் அவனுள் தம்மை கொண்டு விட்டதையும், தம்மையே தந்து விட்டதையும்  பாடிக் கொடுத்தது  நல்ல விஷயம் தானே!

பதிவை பார்த்தவர்களுக்கும் பகிர்ந்தவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்! 

Leave a comment