தலையில் முடி முளைக்க தயிலம்  

HAIR GROWTH OIL

வணக்கம் நண்பர்களே!

வைத்திய கண்ணாடி என்கிற நூலை படித்த போது, இந்த பக்குவம் சொல்லப்பட்டிருந்தது. எத்தனையோ அன்பர்கள் எளிதான பக்குவமாக உண்மையிலேயே முடி முளைக்கும் பக்குவமாக பதிவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். ஆயுர்வேதத்திலும் இதற்கான மருந்துகள் இருந்தாலும், சித்த வைத்தியத்தில் இதற்கான பக்குவம் இருப்பதை கண்டதும் பதிவிடுகிறோம்! இந்தப் பக்குவத்தை சரியாக செய்வதற்கு, சித்த வைத்திய பெருமக்களின் ஆலோசனைப்படி செய்வதும் கூட, நல்ல நன்மை தரும் என்று சொல்லிக் கொள்வதோடு, எளிய பொருட்களைக் கொண்டும், நம் ஊரில் கிடைக்கின்ற பொருட்களைக் கொண்டும் இந்த பக்குவம் தயாரிக்க சொல்லப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான பணத்தைக்  கொட்டி கொடுக்காமல் வீட்டிலேயே தயாரித்து, பயன் கிடைக்க இந்த எளிய பக்குவம் உதவும் என்பதில் ஐயமில்லை!

இந்த வைத்திய கண்ணாடியில் பல சித்தர்களின் பாடல்கள் சேர்த்து, நூலாக பதிவிடப்பட்டு இருப்பதால், இந்த பாடல் எந்த சித்தரால் சொல்லப்பட்டது என்று புலப்படவில்லை! ஆனாலும், நம்பிக்கைக்குரிய, தெரிந்த பொருட்களை சேர்த்து இந்த பக்குவம் சொல்லப்பட்டுள்ளதால், நிச்சயமாக பலன் கொடுக்கும் என்று நம்பிக்கையோடு செய்து பார்க்கலாம்! பாடலுக்குள் போகலாமா?

காருநாய்கரிச் சான்பட்டை யார்பலம்

பாருபேருறையாள் பலம் * வெள்ளுள்ளி *மயிர்மாணிக்கம்

சேருவாய்பலஞ் சேர்த்து நறுக்கியே

ஏருவாய்நாழி யெள்ளெண்ணெ யூற்றிடே

ஊர்த்திடுங் கதிரோன்புட மேனிதம்

போர்த்திடுமிரு போதுமோரேழுநாள்

சேர்த்திடில் மயிர் சேரமுளைத்திடும்

மோர்த்திடும் பத்திய மில்லைக்கார்த்திடே

        கரிச்சான் செடிக்கு, ( Eclipta prostrata) என்ற அறிவியல் பெயரும் உண்டு. மேலும், கரிச்சை, பொற்றலை, கையாந்தகரை, கரியசாலை, கரிக்கை, கைகேசி, கரிக்கண்டு, பிருங்கராஜம், தேஜராஜம், கரிசலாங்கண்ணி, கரிசனம், (மஞ்சள் கரிசாலை) ஆகிய வேறு பெயர்களும் உண்டு.

கரிச்சான் என்று சொல்லக்கூடிய செடியின், வேரின் பட்டையை எடுத்து, அதாவது கரிச்சான் செடியோட வேரின் பட்டையை தனியே உரித்து, 6 பலம், அதாவது ஒரு 250 கிராம் அளவுக்கு எடுத்துட்டு, கூடவே,

பேருரையான், பேருரையான்னா வசம்பு, Acorus calamus (also called sweet flag, sway or muskrat root) வசம்பு ஒரு 40 கிராம் அளவுக்கும், வெள்ளை பூண்டு (garlic), 40 கிராம் அளவுக்கும், மயிர் மாணிக்கம் (Cypress Vine) 40 கிராம் அளவுக்கும் எடுத்து, எல்லாத்தையும் பொடியா நறுக்கி எடுத்துட்டு, ஒரு பெரிய பாட்டில்ல போட்டு, நல்லெண்ணெய் ஒரு கிலோ வாங்கி, அந்த பாட்டிலுக்குள்ள ஊற்றி வைக்கணும்னு சொல்றார்.

கரிச்சான் வேர்பட்டை, வசம்பு, வெள்ளைப் பூண்டு, மயிர் மாணிக்கம்,  மயில் மாணிக்கம் என்றும் சொல்லப்படுகிறது. எல்லாவற்றையும் சேர்த்து நறுக்கி, நல்லெண்ணெயில் போட்டு, கதிர்புடம் போடணும்ங்கறார்! நல்ல வெயில் படும்படியாக காய வைக்கிறதுதான் கதிர்புடம் என்று சொல்லப்படுகிறது! எல்லாவற்றையும் சேர்த்து பாட்டிலில் போட்டு மூடி, நல்ல வெயில் படும்படி, ஏழு நாளைக்கோ, அல்லது ஒன்பது நாளைக்கோ கூட, வெயிலில் வைத்து எடுத்துக்கலாம்! அப்படி வெயிலில் நன்கு காய்ந்ததும், எண்ணையை மட்டும் தனியே எடுத்து, தலைக்கு தேய்சிக்கனும்னும் சொல்றார். இந்த எண்ணையை காலையிலேயேயும், சாயந்திரமும் ரெண்டு வேளைக்குமா தலைக்கு கொஞ்சமா எண்ணெய் எடுத்து, தலையில முடி இல்லாத பகுதிகளில் தேய்ச்சி விடனும், அவ்வளவுதான்! இந்த எண்ணெயை தலைக்கு தேய்ச்சு வர்ற சமயத்தில், பத்தியம் ஏதும் இல்லை!

கரிசாலை செடி, மழை நேரத்துல எங்க பார்த்தாலும் கிடைக்கும்! வசம்பு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வெள்ளை பூண்டும் கூட கடைகளில் கிடைக்கும். மயில்மாணிக்கம் செடியை, சிவப்பு நிறம் உள்ள பூக்களோட கோடை காலத்தில் நிறைய பார்க்கலாம்! மேலே சொன்ன கரிசாலை, வசம்பு, வெள்ளப்பூண்டு, மயிர்மாணிக்கம் எல்லாத்தையும் சேர்த்து, நறுக்கி நல்லெண்ணெயில் போட்டு, வெயிலில் காய வைத்து எடுத்து, முடிமுளைக்க வைக்கிற எண்ணெய் ரெடி செய்து பாருங்க! உலக மக்களுக்கு சித்தர்கள் சொல்லித் தந்தது நல்ல விஷயம் தானே!

பார்த்தவர்களுக்கும், பகிர்ந்தவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்! 

Leave a comment