பல்லுக்கு ஒரு

நல்ல சேதி! கேட்டுக்கலாமா!

பல்லுக்கு பொடி இப்படி பண்ணலாமே!

வணக்கம் நண்பர்களே!

இந்த பதிவில் தேரையர் தந்த வியாதிக்கு, அதாவது பல் வியாதிக்கு தேறையர்வயித்தியம் 1500-ல் தந்தவியாதிக்கு பஞ்சபூஷிதப்பொடி என்கிற தலைப்பில் 60 முதல் 63 வரை தந்த பாடலில் ஒரு அருமையான பக்குவத்தை சொல்லி இருக்கிறார்.

ஒருகாலத்தில் பல் துலக்குவதற்கு, எருவரட்டியின் சாம்பலும், அடுப்பு சாம்பலும் பயன்பட்டது. இதையெல்லாம் பயன்படுத்துகிற காலத்துல, பல் வலியோ, பல் சம்பந்தப்பட்ட நோய்களோ வந்துச்சானு தெரியல! பல்லுக்கு எது சரியானதாக இருக்கும்னு சித்தர்களும், சித்த வைத்திய பெருமக்களும், பல மருத்துவ மூலிகைகளையும் பரிசோதித்து, மக்களுக்கு ஒரு நல்ல மருந்தாக, நல்ல பல்பொடியாக, பல் நோயிலிருந்து குணமாக்குகிற பக்குவத்தை சொல்லித் தந்திருக்கிறார்கள்!

  இப்போது பலதரப்பட்ட பொருட்களுடன், பல வண்ணங்களிலும் பற்பசைகள் வந்து கொண்டிருக்கின்றன. பல் மருத்துவமனைகளும் மருத்துவர்களும் கூட நிறைய நிறைய வந்து கொண்டு இருக்கிறார்கள்! சித்த வைத்தியத்திலும், ஆயுர்வேத வைத்தியத்திலும் சொல்லப்பட்ட மருந்து பக்குவத்தில் இன்றும் சில பற்பொடிகளும், பற்ப்பசைகளும் வந்து கொண்டிருந்தாலும், அவ்வளவாக மக்களால் பேசப்படவில்லை!

எளிதாக கஷ்டமில்லாத படி எது கிடைக்கிறதோ அதையே மக்கள் நாட துவங்குகிறார்கள். பற்பொடியில், மருத்துவ குணம் உள்ள பற்பொடி, மருத்துவ குணமில்லாத சுவையைத் தாங்கி வருகிற பற்பசைகளும் இருந்தாலும், எது சிறந்தது என்பதை ஆராய்ந்து, பிரித்துப் பார்த்து பயன்படுத்துவதற்கான நேரம், மக்களுக்கு இல்லாமல் போனது கூட ஒரு காரணமாக இருக்கலாம்!

  கண்கவர் வடிவங்களிலும், வண்ணங்களிலும், விதவிதமான சுவைகளிலும் பற்பசைகள் கிடைத்தாலும், பல் துலக்குவது என்பதேகூட பெரிய கடமையான செயலாக, மக்கள் நினைத்து விட்டதும், சிலரது மத பழக்கங்களும், குல பழக்கங்களும், அவர்களின் வழக்கங்களும் கூட சிலருக்கு பொருந்தியும், பலருக்கு பொருந்தாமலும் போகிறபோது, சடங்கிற்காக பல் துலக்குவது என்பதும், கட்டாயத்திற்காக பல் துலக்கவேண்டுமென்பதும்  கூட, பற்பசைகளின் வகைகள் பெருகுவதற்கும், அதன் விளைவாக ஏற்படுகின்ற, பற்பிரச்சினையை சரிசெய்யவும், பல் மருத்துவர்களும் பெருகிவிட்டதையும் கூட சொல்லலாம்! வேப்பங்குச்சியாலும், ஆலங்குச்சியாலும் பல் துலக்கிகொண்டிருந்த காலத்தில், இத்தனை பல் நோய்களும் பல் சம்பந்தமான பிரச்சினைகளும் வந்திருந்தாலும், இதுபோன்ற மருந்துகளால் பூரண குணம் பெற்றிருப்பார்கள்! பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட பிரஷ் அறிமுகமான காலத்தில், பிளாஸ்டிக் பிரஷ் கொண்டு பல் துலக்குவது என்பது பெரிய கௌரவமாகவே இருந்தது! அப்போது, பல் விளக்குகிறேன் என்று பிளாஸ்டிக் டூத் பிரஷை வாயில் வைத்துக் கொண்டே ஊரையே வலம் வந்து பறைசாற்றிய மக்களும் உண்டு! காலத்திற்கு ஏற்ப மாறி கொள்வதும், மாற்றிக்கொள்வதும் சரிதான் என்றாலும், எது நல்லது? நமக்கு எது நலம் தரும் என்கிற பொருட்களெல்லாம், கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருப்பதையும், மறந்து விடக்கூடாது! அதை மறைக்கவும் கூடாது! அது போன்றதொரு பக்குவமாகத்தான் தேரையரையா இந்த பல்பொடியை பற்றிய பாடலையும், பக்குவத்தையும் தந்திருக்கிறார்! பார்த்து வரலாமா?

பொய்யாதய்யா புகலுக்குருமொழி

அய்யாமாந்தர்க் கறைவன் பொடியொன்று

செய்யாராவடம் சிறந்தபீங்காந் தனில்

கைப்பதான்றி கடுக்காயுத் தூக்கிடே

தூக்குமாசக் கடுக்காய் துடிபலம்

நீக்கும்கார நிகழும் காசுக்கட்டி

பாக்கும்பிற்கான பழாசந் தான்பிழி

காக்குங்கல்வங் கடியவே போட்டிடே

குருவின் வார்த்தைகள் பொய்யாகாது! அவர் சொல்கிற பற்பொடியை செய்வதற்கு, ஒரு கனமான பீங்கான் பாத்திரத்தை எடுத்து, நல்ல தான்றிக்காயையும், கடுக்காயையும், காசு கட்டியையும் எடுத்துட்டு, எல்லாத்தையும் உடைச்சு எடுத்துட்டு, அதுல எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறு எடுத்து அந்த சாறை விட்டு கலந்து, நிழல்ல காய வைத்து,  அதை உரலில் போட்டு பொடியாக்கணும்னு சொல்றார். தான்றிக்காய் ஒரு 35 கிராம், கடுக்காய் ஒரு 35 கிராம், காசுக்கட்டி ஒரு 100 கிராம் எலுமிச்சம் பழம், ஒரு நாலு பழம் பிழிஞ்சு எடுத்த சாறு, எல்லாத்தையும் கலந்து உரல்ல போட்டு, நல்லா மைபோல பொடி ஆக்கணும்!

பொடியாக்கிட்டு எடுத்து, நிழலில் வைத்து ஆறவிட்டு எடுத்து பத்திரப்படுத்தி வச்சுக்கணும். தான்றிக்காயோட குணமும், கடுக்காயோட குணமும் சேர்ந்திருக்கிறதாலேயும், காசுக்கட்டி நிரப்புவதற்கான பொடியா இருக்கிறதாலேயும், எலுமிச்சம் பழச்சாறு புளிப்பு சுவையையும் தருவதினாலே பல்பொடி நல்ல சுவையாகவும் இருக்கும்!  இப்படி தயார் செய்த பற்பொடியை உபயோகித்து, பல் துலக்கிறதாலே, பல் சம்பந்தமான நோய்களும், மேலும், வாய் நாற்றம், பல் கூச்சம், பல் சிதைவு வராமல் தடுக்கும் என்று தேரையரையா சொல்லித்தருகிறார்!

போட்டுமேயரை பொருந்த பூஷிதத்தை

ஆட்டுமேஜாமம் அறுபது சென்றபின்

கூட்டுமேயெடு த்துக் குறிப்புடன்

நீட்டுமேகல்வம் நிழலினு லர்த்திடே

உலர்த்திடும்பொடி யுற்றபல் ரோகத்தை

கலர்த்திடும்பொடி காலையில் தேய்த்திட

பெலர்த்திடுந்தந்தம் பெரியபல் நோய்களும்

அலர்த்திபிரம லலைந்து தானோடுமே

  இந்த பற்பொடியை எடுத்து, காலையிலயும், மாலையிலேயும் பற்களிலேயும், எளிறுகளிலேயும் படர மாதிரி நல்லா தேய்க்கணும்! இந்த பற்பொடியை தினமும் உபயோகிச்சு, பல் துலக்கிறதாலே, பல் வலுவானதாக இருக்கும்னும், பல் சம்பந்தமான எந்த நோயும் கிட்ட வரவே வராது என்று உறுதியாக சொல்லித் தருகிறார்! பற்பசை தீர்ந்து போகும்னு கொஞ்சமா எடுத்து, பல் தேய்க்கிறதாலே பற்பசை ரொம்ப நாளைக்கு வரும்! ஆனால், வாயத் தொறந்தா பக்கத்துல இருக்குறவங்களுக்கும் பிரச்சனை, பக்கத்திலே வருகிறவர்களுக்கும் பிரச்சனை! பல்லுக்கு பிரச்சனை வந்தால், அதனாலே மத்தவங்களை தெறிச்சு ஓட வைக்கலாமா? என்ன பல்லு இருந்தாலும், வகைவகையா எந்த பற்பொடி இருந்தாலும், பல்லை பாதுகாக்கணும்னா நல்லபடியா பல்லை விளக்கினால் தான், பல்லும் நல்லா இருக்கும்! சொல்லும் நல்லா இருக்கும்! தேரையரையா சொல்லித்தந்தது நல்ல விஷயம் தானே!

பதிவை பார்த்தவர்களுக்கும், பகிர்ந்தவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்! 

Leave a comment