கீழா நெல்லி தைலம்

பித்தம் முதல் புற்று நோய் வரை குணமளிக்கும் அற்புத மூலிகை!

அகத்தியர் சித்தர் சொன்னது

வணக்கம் நண்பர்களே!
அகத்தியர் வைத்தியரத்ன சுருக்கத்தில், கவி 185 முதல் 186 வரையிலான பாடலில் கீழாநெல்லி தைலம் பற்றி சொல்லித் தந்திருக்கிறார். எதை நினைச்சாலும், உடம்பெல்லாம் நடுங்குறதை நிப்பாட்டுறதுக்கும் கூட பக்குவமா இந்தப் பாடலில் பக்குவத்தையும், கீழாநெல்லி தைலத்தால் கிடைக்கின்ற பயன்களையும் சொல்லி இருக்கிறார் அகத்தியரய்யா!

கீழாநெல்லியின் அறிவியல் பெயர் (Phyllanthus niruri).


உடம்புல நடுக்கம் வருவதற்கு பல பல காரணங்கள் இருக்கலாம். குறிப்பாக, பித்தத்தினால் இப்படி நடுக்கம் வரும்! மதுப்பழக்கத்தினாலும்  கூட,  கல்லீரல் மோசமாகி, பித்தத்தை தக்க வச்சிக்கிட்டு, இப்படி உடல் நடுக்கம் வருவது கூட உண்டு. அதனால உடம்பு நடுங்கறதும் உண்டு! மனசு நடுங்குறதும் உண்டு! மனசு நடுக்குறதுக்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும், மனசை அமைதியாக்கவும், சந்தோஷமா இருக்கிறதுக்கும் பெரியவர்கள் சொன்னதை, சரியா கடைபிடித்தாலே மனசுல இருக்குற நடுக்கம் போய்விடும்! உடம்புல வர்ற நடுக்கத்திற்கு, அகத்தியரய்யா சொல்லித்தந்த இந்த கீழ்க்கா நெல்லி தைலம், அருமருந்தாக இருந்தாலும், உடலில் ஏற்படுகிற பல நோய்களையும் குணமாக்குகிறது என்று, உறுதியாகச் சொன்ன பாடலையும், பக்குவத்தையும்  பார்த்துட்டு வரலாமா?

கேளப்பா கீழ்க்காயி நெல்லித்தானும்

கிருபையாய்த் தூக்கிடித்து தூணிநீரில்

வாளப்பா வெட்டொன்றாய் வடித்துக்கொண்டு

வளமான வெள்ளெண்ணெய் படியிரண்டு

காளப்பா வாவின்பால் படி இரண்டு

நலமான சீரகந்தான் பலமிரண்டு

வேளப்பா பாலிலே யரைத்துவிட்டு

விருதாக மெழுகுபதம் வடித்துவாங்கே  (கவி 185 )

கீழ்க்காய் நெல்லி, கீழாநெல்லின்னும் சொல்றது உண்டு. கீழாநெல்லியின் மொத்த செடியுமே மருத்துவ குணம் கொண்டது. உடம்புல இருக்குற பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தொடங்கி, புற்று நோயை கட்டுப்படுத்த வரைக்கும், நிறைய நோய்களை குணமாக்குகிற குணம் இந்த கீழாநெல்லிக்கு உண்டு! இப்படிப்பட்ட கீழாநெல்லி வயல்களின் வரப்பு,  ஈரப்பதமான இடங்கள்ல கூட வளர்ந்து இருக்கும். யாரும் விதை போட்டு இது வளர்வது இல்லை! தானாக வளர்ந்து இருக்கும் கீழாநெல்லியை மழைக்காலங்களில் சாதாரணமாக வளர்ந்து காணப்படும். மனிதர்களால் நோயை வர வைத்துக் கொண்டாலும், இறைவனால் மருந்து கொடுக்கப்படுகிறது, என்கிற சொல்லுக்கு ஏற்ற மாதிரி, இந்த கீழாநெல்லி செடி தானாவே வளர்ந்து, வருஷத்துக்கு ஒருமுறைங்கற கணக்குல வளர்ந்து, நன்மை தருகிற செடியினும் சொல்லலாம். அப்படியே அந்த கீழாநெல்லி செடியை பக்குவமா எடுத்துட்டு வந்து, துண்டாக்கிட்டு, அரைச்சு தூணி நீரில், துாணி அளவுங்கிறது, சுமாரா ஒரு ரெண்டு லிட்டர்னு எடுத்துக்கலாம். அப்படியே ரெண்டு லிட்டர் தண்ணீர் எடுத்துட்டு, அரைச்சு வைத்திருக்கிற கீழாநெல்லியை போட்டு, வடிகட்டி எடுத்துட்டு, வளமான எள்ளெண்ணெய் படி இரண்டு, அதாவது 2 லிட்டர் நல்லெண்ணெயும், ரெண்டு படி பசும்பாலும் எடுத்துட்டு, நல்ல சீரகம், அதுவும் இரண்டு பலம், சுமாரா ஒரு 80 கிராம் அளவுக்கும் அரைச்சு எடுத்துட்டு, ஒரு பாத்திரத்தை எடுத்து, கீழாநெல்லி சாற்றையும், நல்லெண்ணையையும் ஊத்தி கொதிக்க வைக்கணும். கொதித்து வர்ற நேரம் பார்த்து, பாலையும் சேர்த்துட்டு, கூடவே அரைச்சு வைத்திருக்கிற சீரகத்தையும் சேர்த்து நல்லா கலக்கி விடுகிறபோது, எல்லாம் சேர்ந்து மெழுகு பதமா திரண்டு வர்றபோது, பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி வச்சுட்டு, சூடு ஆறுனதும் எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று சொல்லிட்டு,


வாங்கியே முழுகிவாப் பித்தவெட்டை

மயக்கமொடு மஞ்சள்கா மாலைதீரும்

தாங்கியே வாந்தியெல்லாந் தவறுண்டேயாம்

தலைமயக்கம் வாயூறல் சாந்தமாகும்

தேங்கியே யுட்சுரங்கள் தீர்ந்துபோகும்

தேகத்தில் நடுக்கல் முதல் தீர்ந்துபோகும்

ஏங்கியே திரியாதே மனஞ்சோம்பாதே

எளிதல்ல நோயப்பா விரங்கிப்பாரே     (கவி 186)

மெழுகுபதமாகக் கிடைக்கிற கீழாநெல்லி தைலத்தை, கொஞ்சமா எடுத்து, தலையில் தேய்த்து முழுகிட்டு வர்ற போது, பித்தவெட்டை, மயக்கம், மஞ்சள் காமாலையும் தீரும்னும்,  தாறுமாறா வாந்தி எடுத்துக்கிட்டு கஷ்டப்படுறதெல்லாம் நின்னுடும்னும்  மயக்கம், தலைசுத்தல் குறைந்துவிடும்!ரொம்ப நாளா தொந்தரவு செஞ்சுகிட்டு இருக்கிற, சுரங்கள், உள்காய்ச்சல் எல்லாம் ஓடியே போகும்னுட்டு, உடம்புல நடுக்கம் இருந்தால் போயே போகும்னும், வருத்தப்பட்டுக்கிட்டே இருக்க வேண்டாம்! மனதைத்  தளரவிடாம இருக்கணும்னும், இந்த நோய்களெல்லாம்  எப்படி தீரும்? எப்பதான் தீரும்னும் வருத்தப்படவே வேண்டாம்! தொடர்ச்சியா, இந்த கீழாநெல்லி தைலத்தை, தலையில் தேய்ச்சு முழுகிட்டு வரப்போ, இந்த நோய்கள் எல்லாம் போயே போகும்னும்,. இந்த நோய்கள் எல்லாம் எளிதானது, வந்தால் போயிடும்னு லேசா எடுத்துக்காம, இந்த கீழாநெல்லி பக்குவத்தை செய்து, தைலத்தை தலைக்கு தேய்த்து குளிப்பதை தவறாமல் செய்து வாருங்கள் என்று, அகத்தியர் ஐயா சொல்லித்தரார்.

கீழாநெல்லியில் செய்கிற மருந்து பக்குவங்கள் நிறைய இருந்தாலும், இந்த கீழாநெல்லித் தயிலத்தாலே,  இத்தனை நோய்களை தீர்க்கிறது என்கிறபோது, இந்த கீழா நெல்லிசெடிய பத்தின விஷயங்களை, தேடிப் படிக்கிறதோடு, இந்த செடியை பத்தின பலன்களை தெரிஞ்சுகிட்டு, பத்து பேருக்கு சொல்லித்தருவதும் கூட நல்ல விஷயம் தானே!

பதிவைப் பார்த்தவர்களுக்கும், பகிர்ந்தவர்களுக்கும்  கோடானு கோடி நன்றிகள்!

Leave a comment