ஞானவெட்டியானில் ஆவுடையார் கோயில்!

லிங்கமா! ஆத்ம லிங்கமா!! எதை வணங்குவது?

வணக்கம் நண்பர்களே!

      திருவள்ளுவ நாயனார் தந்த ஞானவெட்டியானில், ஆவுடையார் கோயிலின் அற்புதத்தையும், ஆத்ம லிங்கத்தின் விளக்கத்தையும் அழகாக தந்துள்ளார். வாழ்வில் தத்துவங்களை மிக எதார்த்தமாக, ஆணித்தரமாக, அவரது பாணியில் அழகிய தமிழில்,  யாருக்கும் எதற்கும் அஞ்சாமல், தனக்குள் பட்டதை விளக்கமாக, விரிவாக அற்புத வார்த்தைகளில் தந்திருக்கிறார். திருவள்ளுவ நாயனார் தந்த ஞானவெட்டியானில் வாதங்களையும், வேதங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, இயல்பான மனிதப் பிறப்பை இன்பமாக வாழ்ந்து முடிக்க வேண்டி, உன்னதமான, உயர்வான கருத்துக்களை சொல்லித் தந்திருக்கிறார். மனித வாழ்வில் கடைபிடிக்கின்ற கடைபிடிக்கச்செய்த மூடப்பழக்கத்தையும், வேண்டுதலையும், தூண்டுதலையும், சூழ்ச்சி செய்து மக்களை மதத்தாலும், சாதியாலும் பண்பாட்டாலும், கலாச்சாரத்தாலும் துண்டாக்கிக் கொண்டாடுபவர்களையும், துகிலுரித்து காட்டியுள்ளார்.

கோயிலின் ஆத்ம லிங்கம் வணங்குவதற்கு சிறந்ததா? கல்லில் செய்த லிங்க வடிவங்கள் வழங்குவதற்குரியதா என்று ஞானவெட்டியானில் திருவள்ளுவர் அய்யனார் சொல்லியிருப்பதை பார்த்து வரலாமா?

தந்தையுடனே யெனது-தாயுமிருவர்

சரசவுல்லா சலீலையாடையிலே

மந்திரம தாகவிந்து-நாதமுங்கூடி

வருகிறவழி சொல்வேனாண்டே யிதுகாண்

இந்திரிய சாதிலிங்க-முலகுக்கெல்லா

மேகபர நாதவிந்துபா கமதாகி

வந்தவிதங் கோசபீச பிரபஞ்சமதாய்

வாய்த்தவித முலகில் வகுத்தனர்காண்  (60)

தந்தையுடனே எனது தந்தையும் தாயும் மகிழ்ந்திருக்கும் போது தந்தையிடமிருந்து வருகின்ற விந்துவும், தாயிடம் உள்ள நாதமும் இணைந்து, கருவுக்குள் உறைந்து உருவாகி இந்த தேகம் வந்தது. இதுபோன்ற உலகம் முழுதும் உயிர்கள் பிறப்பைத் தெரிந்து, பலுகிப் பரந்து விரிந்தனவென்று பெரியோர்கள் சொன்னதும், இந்த பிறப்பின் ரகசியம் என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், மனித பிறப்பும், உயிர்களின் பிறப்பும் மந்திரத்தாலும், மாயத்தாலும் வரவில்லை என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லிவிட்டு ஆவுடையார் கோயிலில் மகத்துவத்தை சொல்ல துவங்குகிறார்!

ஆவிடையார் கோவிலிலே -யமைத்தகுறி

ஆதரவாகவே சேர்ந்து மாதர்களினால்

மேவியதோர் நாதவிந்து – வெகுவிசித

விற்பனையறிய வொருகற்பனை சொல்வேன்

பாவிகளிதை யறியார் கல்லுகள்தனில்

பாவனையொப்பாகவுமேதாவிதஞ்செய்தார்

ஆவியென்றுமறியாமல்- செலவழிய

ஆத்துமலிங்க மதனைப்பார்த் துணராமல் (61)

கோயிலிலே அமைந்த குறி, ஆவுடையார் கோவிலின் கர்ப்பகிரகத்தில் ஆவுடையை மட்டுமே இருக்கும், லிங்க வடிவம் இல்லை என்பதையும், ஆலயங்களில் இறைவனின் உண்மைத் தன்மையை மாதர்கள் அறிந்து கொண்டு, ஒவ்வொரு மாதர்களும் கருவறை கொண்ட கோயில்கள்தான் என்பதையும், உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு பெண்ணினமும், கருவை உருவாக்கும் உயிர் தெய்வங்கள் என்பதையும், உணர்ந்து கொள்ளும் விதமாக, தெரிந்து கொள்ளும் விதமாக, ஒரு கற்பனையான கதையாக, கருவறைக்குள் உறைகின்ற உருப் பொருளை பற்றியும், லிங்கமாவதும், உயிராவதும் எதுவென்றும் சொல்லுகின்றேன்! நான் இப்படி சொல்லுவதை அறிந்து கொள்ளாத, புரிந்து கொள்ளாத பாவிகள், ஆலயங்களில் கல்லுகளை லிங்க வடிவமாக செய்வித்து, அதற்கு ஆரத்தியும், அர்ச்சனையையும் செய்து வழிபடுவார்கள். ஆனால் உண்மையான லிங்க வடிவும், ஆத்ம லிங்கம் எதுவென்றும் தெரிந்து கொள்ளாதவர்கள், அறிந்து கொள்ளாதவர்கள், செலவுகள் பல செய்து லிங்க வடிவங்களை செய்து, பூசிப்பது என்பது, ஆத்மலிங்கத்தை பற்றி உணராததால் தான் என்றும், சொன்ன திருவள்ளுவ நாயனார் ஆத்ம லிங்கத்தை உணர்வது எப்படி? என்றும் ஒவ்வொரு பிறப்பிற்கும், உயிர்களுக்கும் ஆத்ம லிங்கத்தின் ஜோதியே உயிராகி, உருப்பொருளாகி இந்த மகத்தான உடல் கிடைத்திருக்கிறது என்பதையும் சொல்லிவிட்டு,

வன்னியும் வாயுவுங்கூடி-உயர்கின்ற

மண்டப மார்க்கத்தின் வீதிதனிலே

உன்னதமாய் நாதவிந்து-உறவாடியுமே

ஒருவழியாக வந்துதித் ததுகாண்

முன்னிலை யாய்ச்சுடரதனில்-மூலவன்னி

முப்பொருளுஞ் சேர்ந்துவொரு வுற்பனமதாய்

சென்னிதனில் வளரியல்பாம்-நாதமெ னுஞ்

சித்திரப் பூஞ்சாவடியில் மத்திபத்திலே  (62)

அடுத்ததாக, வன்னியும் வாயுவும் ஓடி உயர்கின்ற மண்டப மார்க்கத்தின் வீதி தனிலே- நாதமும், விந்துவும் ஒன்று சேர்ந்து உறவாடி, ஒரு வழியாக கருவறையை நோக்கி, பாதையில் முன்னேறி வருகிறதைக் காணுகிற போது, விந்துவின் தலையின் முன்னே கிரீடமாக, சோதிப்பிழம்பான சுடர்தனில் மூலப்பொருளான அக்னியும், கூடவே, பூமி, காற்று, ஆகாயம் என்கிற முப்பொருளும் ஒன்று சேர்ந்து, உற்பனமாக ஒன்றாக இணைந்து, விந்துவின் தலையில் இருப்பதும், நாதமெனும் சித்திரப்பூஞ் சாவடியில், கருமுட்டைகள் கூட்டமாக சித்திரப் பூக்கள் போல மத்திலே இருப்பதும், அதாவது விந்துவின் தலையில் முனையில், அக்னியோடு கூடவே பூமியின் பழுவும், காற்றின் அசைவோடும், ஆகாயத்தின் அடர்த்தியோடும்  கருவறையை நோக்கி பயணப்படுகிற போது, அங்கே கருமுட்டைகள் சித்திரப் பூஞ்சோலை போல இருக்கிற வழியதனில், நவரத்தின மண்டபத்துக்குள், வச்சிரப்பைதனில், அக்னியையும், பூமியையும், காற்றின் வேகத்தையும், ஆகாயத்தின் அரவணைப்பையும், ஒன்றாக சுமந்து கொண்டு வருகிற விந்தானது, சித்திரப்பூஞ்சாவடி மண்டபத்தை அடைந்து என்றும் சொல்லிவிட்டு,

வருகிற வழியதனில் – நவரத்ன

மண்டபத்துக்குள்ள வச்சிரப்பைய தனில்

பெருகியநாதமது – சதாசிவத்தின்

பிரணவமூலப் பிரகாசப்பே ரொளியினில்

உருவிய மலர்க்கமலம் – போற்றியருள்

உற்பனமருள் தருங்கற்ப கத்தில்வாழ்,

அருள்வந்தெய்தெடினுந் – திருவடியதின்

அனுதினம் பூசித்துமிகவடி பணிந்தேன்  (63)

வருகிற வழியதனில், கருவறையை சென்றடையும் வழிதனிலே, கருவறை மண்டபத்தில், பிரணவத்தில் மூலமான உயிர்களை உற்பத்தி செய்யும், உலகையே உயிர்களால் நிரப்புகின்ற மூலமான, நாதத்தின் பேரொளியினில், அந்த மலர் கமலத்தில், கர்ப்பத்தில், கருவறையில் கர்ப்பமாக வாழ்வு தருகின்ற அருளை, இறைவன் தனக்கு, அளித்தருளும் பொருட்டு இறைவனின் திருவடியை ஊகித்து சரணாகதி அடைந்தேன்! என்று தம்மையே ஒரு விந்தாக பாவித்து, கருவறையில், நாதமெனும் கருமுட்டை வைரங்களுக்குள் நுழைந்து, கற்பகத் தருவாய் உடல் கிடைக்க, அருள் வேண்டி இறைவனின் திருவடிகளை நினைத்து தியாணித்து இருந்தேன்! அப்படின்னு சொல்லிட்டு,

போற்றிய மண்டபம்விட்டு-மறையவர்தன்

புகழுஞ் சிங்காரமெ னும்புரவிவிட்டு,

சாற்றிய மயேஸ்பரத்தில் -சம்பிரமத்துடன்

சத்திரத் தில்வந்து சித்திரச்சாவடியினில்

கார்த்திருந்தேன் திருநடனம் – ரத்னமணி

கனகசபையைக் கண்டுநான்மகிழ்ந்தேன் பூத்த

செங்கமலமலர்-இங்கிதநாதப் பொக்கிஷத்தைக்

கண்டறிந்துயான் மகிழ்ந்தேன் காண்  (64)

போற்றிய மண்டலம் விட்டு, மறையவர்கள் புகழும் சிங்காரம் எனும் புரவி விட்டு, போற்றிய மண்டலம் விட்டு இருந்த இடத்தை விட்டு அதாவது விந்துவானது, விந்துப்பை என்கிற மண்டலத்தை விட்டு, பெண்மையின் சம்மதத்துடன், ஆண்மை என்கிற குதிரையை ஓட விட்டு, கூடிக் குலாவி வெளியேறி, இப்போது சித்திரைச் சாவடியாம் கருவறைக்குள், வைரப் பூந்தோட்டத்தில் சிறு நடனம் காண வேண்டி காத்திருந்தேன்! ரத்தினமணி ஒலிக்க திருநடனம் ஆடுகின்ற கனக சபையாம் கருவறையில், செங்கமல மலர்களின் பொக்கிஷத்தை கண்கொண்டு கண்டு மனம் மகிழ்ந்தேன் என்கிறார் திருவள்ளுவநாயனார். அதாவது உரு கொடுக்கும் கருவறையில் உன்னதமான ஓரிடத்தில கருவோடு இணைகின்ற திரு நடனம் காண்பதற்கு காத்திருந்ததாக! என்று சொல்லுவதாக எடுத்துக் கொண்டு, அடுத்த பாடலாக,

தெண்டனிட்டு மண்டபம்விட்டுக் கருவூர்தனில்

சித்திரப்பூஞ்சா வடிதன் முகப்பும்விட்டு,

தொண்டர்கள் பணியும்ருத்திரன் – திருவடியை

தொழுதனு தினம்பணிந்து துதித்துநின்றேன்

அண்டர்கள்போ ற்றுகின்ற – பிரகாசவொளி

அவ்விடத்தி லேமனதை யடக்கியேகாண்

கண்டுகளி கூர்ந்துமிக – மதியின்மலர் 

கங்கையத்தின் பங்கயக்கண் சிங்காதனத்தில் (65)

தண்டனிட்டு மண்டபம் விட்டு கருவூர் தனில் சித்திரப்பூ சாவடியும் விட்டு, மெல்லத் தலைவணங்கி மண்டியிட்டு, மெதுவாக நடந்து மண்டபம் விட்டு, கருவூர்தனில், கர்ப்பகிரகத்தில், கருவறையில் செங்கமல மலர்களின் வைரம் மிளிர்கின்ற தோட்டத்தை விட்டு, அந்த ரத்தின சாவடியின் இடத்தை விட்டு, நடனமாடுகின்ற கனகசபையை விட்டு, தொண்டர்கள் பணிந்து வணங்குகின்ற ருத்திரனையும், வணங்கி நின்றதாகவும், தேவர்கள் போற்றுகின்ற பேரொளி வீசுகின்ற கர்ப்பகிரகத்தை கண்டு மகிழ்ச்சியுடன், நிலவு போன்ற குளிர்ச்சியும், கங்கையின் அழகும், அரவணைப்பும் கொண்ட சிம்மாசனத்தில் இருப்பதை போல், கருவறையின் உள்ளே, உடலாக உருவாவதற்கு, கருவாகி ஆனதையும் நினைத்து அங்கேயே, மனதை ஒருநிலைப்படுத்தி ஆனந்தமாக அமர்ந்திருந்தேன் என்றும் சொல்கிறார், திருவள்ளுவ நாயனார்! அடுத்ததாக,

நின்று பதியம்பரம்விட்டு நிலைபிசகா

நினைவுக்கரிய தொருபொறி கடந்து,

வேண்டியவர மருளும் திருமால்திரு-

மெல்லடி பணிந்து பதம்வணங்கியபின்

சென்று மூலவாசியைக் கொண்டு

இராஜயோகந்-தேசிப் பிரகாசமூல கேசரத்தில்

யான்ஒன்றுதவ நெறிபிசகா ரேசிக்கவிருள்

ஒடியே மூலாக்கினிநீரடி வணங்க (66)

நின்றுபதி அம்பரம் விட்டு நிலைபிசகா நினைவுக்கரிய தொருபொறி கடந்து- மனம் ஒன்றி நின்று, கருவறையின் மத்தியிலே, நினைக்கவே முடியாத இயக்கம் கண்டு, அந்தக் கருவறையில் இயங்குகின்ற பொறியின் வெப்பத்தை கடந்து, கேட்டதை கொடுக்கும் மகாவிஷ்ணுவின் திரு உருவை நினைத்து, அவர்தன் திருவடிகளை வணங்கி, யோகத்திலிருந்து பிரகாசமான மூல கருவறையில், தவறி பிசகாமல் இருள் நீங்கி, அக்னி பிரபாகத்தை நினைத்து வணங்கியபடியே இருந்தேன் என்று சொல்கிறார் திருவள்ளுவநாயனார்! அதாவது, கருவறையின் வெப்பத்தையும், செயலையும், இருளையும், ஒளியையும் கண்டு, உள்ளே செல்வதையும் சொல்லுவதாகவும் எடுத்துக் கொண்டு, அடுத்ததாக,

வணங்கிய பதிகடந்து- திருநடன

மாடியகூத்தனுஞ் சபையது கடந்து,

இணங்கிப்பிர்ம ருத்திரன் – கமலமலர்

இணையடி தொழுதுமேயா ன்பணிந்தேன்

குணமவரதி செயமா- மென்னாலுரைக்க

கூடுமோகோ டானகோடி மேடானமேட்டி

மணம்விசிதமலர் பொழியு-மதிரவியின்

மாமதுரபூபதி கொண்டே மயங்காமல் (67)

வணங்கிய பதி கடந்து திரு நடனமாடிய கூத்தனுஞ் சபையது கடந்து, கருவறையில் சிம்மாசனத்தில் அமர்ந்து, பிரகாச அக்னியின் பேரொளியை தம் தவத்தால் உணர்ந்திருந்து, கருவறையை வணங்கி, அந்த நடனசபையைக் கடந்து, திரு நடனம் ஆடின்ற கூத்தனின் கனகசபையையும், பிறவியைக் கொடுக்கின்ற, பாவங்கள் தீர்க்கின்ற பிரம்மனும், ருத்திரனும் இருவரையும் வணங்கி, திருவழியைப் பணிந்து, தொழுதேன்! அந்த பிரம்மா, ருத்திரனின் இருப்பிடத்தை, அந்த அதிசயத்தை என்னால் சொல்லவும் முடியுமோ? நறுமணமும், சூரிய, சந்திர ஒளியின் பிரகாசமும் இருக்கின்ற கருவறையில், கனகசபையைக் கண்டு மயங்காமல் இருக்க முடியுமோ? அதை மறக்கவும் முடியுமோ? என்று கருவறையில், கரு உருவாகி, சுற்றிச் சுழன்று, வளர்ந்து, ஞானத்தையும், தவத்தையும் உள்ளிருந்தே உணர்கிறபோது, கருவறையில் அந்த ஆனந்தத்தை சொல்லவும் முடியுமோ? என்று கேட்பதாக எடுத்துக் கொண்டு, அடுத்ததாக,

கொண்டபதி மண்டபம்விட்டுக் – கருவிகளின்

கூடியதிரு முகப்பூஞ் சோலையிலே

அணடர்களருள் போற்றுங் – கணபதியின்

அடியினருள் துதித்து அடியில்வந்தேன்,

குண்டலி கமலமலா – மேன்மெலவாதன்

கோபுரசித்திரமதிலின்வாசல்விட்டு

மண்டலஞ்சூழுங்கதிர்-வலமடை பின்

மலரடிதொழுதுயான் வணங்கிவந்தேன் (68)

வந்துதிரு மூலத்திலும் – பானுவிருக்கும்

வச்சிரவளர் சதுஷ்கோ ணவாசலிலுஞ்

சுந்தரவிந்த திலும்வந்து- சினேகமது

சோதித்துக் கலந்துற வாடிக்கொண்டே

விந்திரபதவி களெனவே என்னாண்டையே

கேள் இங்கிதநாத சங்கிதமங்களமதாய்

சந்திரப்புட்கரணிவரும் – நந்திப் பிரகாசந்

தாரையதுவே முழங்குஞ் சாரையைக்கண்டேன் (69)

வந்து திரு மூலத்திலும், வானவில் இருக்கும் வைரமலர் கொண்ட நான்குகோண வாசலிலும், கருப்பையின் வாசலில், திருமூலத்திலும் வந்து விழுந்து, ஊர்ந்து, கடந்து இரத்தின பூஞ்சோலையில் சென்று, கனகசபையில் நடனமாடி, களிப்போடு, வைர மாளிகையில் சிம்மாசனத்தில் உறைந்து, தியானித்து தொழுது வணங்கி, இந்திர சபையின் பதவி கிடைத்தாற்போல் மகிழ்ந்து, நிலவு போன்ற குளிரொழுகும் கங்கையின் கதகதப்பிலும் மிதந்து, பிரம்மனையும் ருத்ரனையும் வணங்கி, நந்தி தேவரின் சந்ததாரை முழங்கியதும், சாரை என்கிற மூச்சுக் காற்றை, சிவசாரையாகக் கண்டேன் என்று சொல்கிறார். அதாவது, கருவறையில் உருவாக மாறுகிற காலம் முழுதும், நிலவின் மென்மையையும், கங்கையின் கதகதப்பையும், பேரொளியும் துலங்க சிம்மாசனத்தில் இருந்தபோது, இந்திரனின் ராஜ்யசபையில் வீற்றிருந்த காலம் அதில் கருவறையில் குதூகலமாய் கழித்திருந்த போதும் சந்திர புஷ்கரணியில் மிதந்து கர்ப்பப்பை வாசல் விட்டு வெளியே வரும் விதத்தை கூறுவதாக எடுத்துக் கொண்டு,

தூண்டியநாதபரி – பரிபூரணத்தின் 

சுகந்தமலர்க்கமலந் துதித்துக் கொண்டேன்

பூண்டுபொற்பதம்பணிந்தேன் என்னாண்டையேகேள்

பூரகத்தினிலும் வந்துபோற்றிசெய்தேன்,

வேண்டிய மதிமலர் கொண்- டாராதனைகள்

மிகுத்தவம்பிகாயோமம்விதரணையாய்

காண்டிபமென் றாலறிய-வாசியைக்கொண்டு

கருத்திலிருத்திக்கண்ட தாரையூதினே  (70)

தூண்டியே நாதபரி பரிபூரணத்தின் சுகந்த மலர் காலம் துதித்துக் கொண்டேன் பூண்டு பொற் பாதம் பணிந்தேன்! நாத பரிபூரணமான கருவறைக்குள், சுகந்த மலர் கமலத்தில் உருவாக உதித்தேன்! பொற்பாதம் பணிந்தேன், தாயின் பொற்பாதம் பணிந்தேன்! கருவறையை விட்டு வெளியில் வந்த போது, பக்தியோடு மனதால் மலர் ஆராதனைகள் செய்தபடியே துதிக்கும்போது, வாசியால் உயிர் முழுவதும் பெற வேண்டி, பூரகத்தையும், கும்பகத்தையும், ரேசகத்தையும் முறையாக செய்வதற்கு, அறிவென்னும் புஷ்பத்தால் அர்ச்சித்து அருள் தந்ததுபோல், வாசியை பிடித்துக் கொண்டு மூச்சை உள் இழுத்து, உலகத்தால் தெளிவு பெற்று உயிர் பெற்றேன் என்று சொல்லிவிட்டு,

வந்துதசநாதவிந்து – சுழிமுனையின்

வாசலின்கருத்துக்குழிதன் வீட்டுக்குள்ளே

தந்திரமதாகவேதான் – கருவதனில்

சங்கற்பமில்லாமல் கலந்துறைந்ததுகாண்

விந்தையெனுநாதவிந்து சையோகந்தனில்

விற்பனம்போலவுமெய்துமுற்பனமதாய்

சுந்தரசுக்குலசுரோணித-மிரண்டுங்கூடி

சொற்பனம்போலுமுதித்த சூக்ஷமிதுகாண்  (71)

வந்து தச நாத விந்து சொறிமுனையின் வாசலில் கருத்துக் குழிதன்  வீட்டுக்குள்ளே தந்திரமாகவேதான் –  வந்த பல கோடி விந்தும், நாதமும் சுழி முனையின் வாசல் வழியே கடந்து, கருக்குழியான கருமட்டும் விந்தையாக கலந்து, கருவாக உறைந்து ஒன்றாகி உருவாகி, விந்துவும் நாதமும் ஒன்றாக கலந்து உறவாடி, இரண்டும் கூடி, கனவு போல தந்திரத்தால் கருவாக உருவாக உருவானது. இந்த உடம்பு கருவறையில், விதையாக முளைத்த இந்த அணு, நாதமெனும் கருமுட்டையோடு இணைந்து, கருவாகி, உருவாகி வளர்ந்து வெளியே வரும்போது, வாசிக்காற்று உள்ளே சென்று, உயிராய் பிறப்பெடுக்கும் ஆன்மத்தை, மூச்சாய் பூரகமாக உள்ளே செலுத்திய ஆன்மலிங்கம், உயிராக உருவுக்குள் விளைந்ததை, பரம்பொருளே ஆன்மாவாக, ஆத்ம லிங்கமாக, உள்ளே பரப்பிரம்ம ஜோதியாக, ஆழ்மனதில் புகுந்து வீற்றிருக்கும் போது, அந்த ஆன்மலிங்கத்தின் உருவம் எது? கருவறை பாதையைக் கண்டேன்! விந்தாடும் நாட்டியத்தால் நாதத்தை எடுத்து, கருவாக, கருவறையில் உறைந்ததையும் கண்டு மகிழ்ந்தேன். கருவாக, உருவாக வளர்ந்து, பின்பு பூமியிலே வரும்போது, உயிர் என்ற மூச்சுக்காற்று உள்புகுந்து, உயிர் கொடுத்த பேருடைய ஆத்மலிங்கத்தை, உணர்ந்தேனன்றி உருவாக காணவில்லையே! எனக்குள் உறைந்த ஆன்மா, இறையின் உருவாக, இறைவனின் ஒளியாக, என் உடலுக்கு உயிராக உள் நுழைந்த இறைவனே பரம்பொருளாக, ஆவுடையின் மேல் ஆத்மநாதராக, ஆத்ம லிங்கமாக அருள் செய்கிற போது, அங்கே இருக்கிற இறைவன் தான் எனக்குள்ளும், எல்லா உயிர்க்குள்ளும் ஆன்மலிங்கமாக இருக்கிறான்! அந்த அருள் உருவம் உருவாகத் தெரியாது என்பதால், ஆவுடைய மேல் லிங்கமானது அருவமாக இருக்கிறது! எனக்குள்ளும், எல்லா உயிர்க்குள்ளும் ஆன்மலிங்கம் உயிராக இருந்து, அருள் செய்வதை உணர்ந்துவிட்டால், லிங்கம் என்கிற தனியான குறி எதற்கு? என்று திருவள்ளுவ நாயனார் கேட்பதும், ஆவுடையையும், ஆன்மலிங்கத்தையும், கற்பனையாக புனைந்த பாடல் என்றாலும் சரியான புரிதல் தானே!

பதிவை பார்த்தவர்களுக்கும், பகிர்ந்தவர்களுக்கும், கோடான கோடி நன்றிகள்!

Leave a comment