போகர் வைத்தியம் 700 ல் சொன்னது
தோல் நோய்களுக்கான எளிய மருந்து!
வணக்கம் நண்பர்களே!
நமது குருவான போகரய்யா, செய்து உபயோகித்து பலனடைய வேண்டும் என்று போகர் வைத்தியம் 700-ல் 2617 முதல் 2620 வரை பாடலாக, தோல் சம்பந்தமான வியாதிகளுக்கான சிறந்த மருந்தாக, தேங்காயை பயன்படுத்தி தைலம் செய்து, உபயோகித்து பலனடைய வேண்டுமென்று, மருந்தொன்று சொல்லி இருக்கிறார்.

நிறைய செலவுகள் செய்து கிடைக்கிற மருந்தாக இல்லாமல், மிக எளிதாக செய்யக்கூடிய தைலமாகவே இருப்பதாலும், இதை செய்வதற்கு எளிய பக்குவ முறைகளை சொல்லி இருப்பதாலும், குணமாகாத, கொடுமையாக துன்பம் கொடுக்கும், தோல் நோய்கள் குணமடையும் என்ற வகையில், இந்த தேங்காய் தைலத்தை செய்து, பலன் பெற வேண்டும் என்று போகரய்யா சொல்லித்தந்த பாடலுக்குள் செல்வோமா?
நோயேது சிரங்கு சொறி கரப்பானேது
நுவல வொண்ணா வாறாப்புண் புரைகளேது
நோயேது இன்ன மொரு செய்திகேளு
நுணுக்க மாந்தேங் காயை கருகச்சுட்டு
நோயேது அதிற்பாதி மிளகுஞ் சேர்த்து
நோக்கமா யரைத்த தனைவழித்துக் கொண்டு
நோயென்ற றேகமெங்கும் பூசு பூசு
நோன்மையுடன் சாயரட்சை வெந்நீர் வாரே
நுணுக்கமாக தேங்காயை சுட்டு, கரிக்கி எடுத்துட்டு, கரிக்கின தேங்காயோட எடைக்குப் பாதியாக, மிளகு எடுத்துக்கணும். அதாவது, தேங்காய் நூறு கிராம் இருக்குதுன்னா, மிளகு 50 கிராம் அளவுக்கு எடுத்துட்டு, பாத்து, பக்குவமா இரண்டையும் சேர்த்து, அரைச்சு எடுத்துட்டு, உடம்புல நோய் இருக்கிற, சொரி,சிரங்கு, கரப்பான் தொற்று இருக்கிற இடத்தில் கரிக்கின தேங்காயும், மிளகும் சேர்த்து அரைச்ச விழுதை பூசிட்டு, ஒரு மணி நேரம் கழிச்சு, அதன் பிறகு குளிக்கிறதுக்கு, வெந்நீர் ஊற்றி குளிக்கணும்னும் சொல்லித்தர்றார். அடுத்ததா
வார்த்துமே மூன்றுநாள் குளித்துப் பாரு
வாராது சிறங்குசொறி கரப்பான் போகும்
வார்த்துமே யின்னமொரு சூட்சங் கேளு
வளமான தேங்காய்ப் பால்படி தானிரண்டு
வார்த்துமே சட்டியிலிட் டடுப்பி லேற்றி
வகையான கல்லுப்பு மஞ்சளி ரண்டு
சேர்த்துமே கரிய சீரகத் தினோடு
திறமாக வகைக்குக்காற் பலந்தான் சேரே
தேங்காயை கருக்கி சுட்டு, அதோட மிளகு சேர்த்து அரைச்சதை சேர்த்து, உடம்பெல்லாம் நோய் இருக்கிற இடமெல்லாம் பார்த்து பூசி வெந்நீரில் குளிக்கிறத, மூன்று நாளைக்கு செய்யணும்னும், அப்படி குளிச்சா சிரங்கு சொறி கரப்பான் போயிடும்னும், இன்னுமொரு பக்குவமும் இருக்குது, சொல்றேன் கேளுப்பான்னுட்டு, நல்ல, வளமான பெரிய தேங்காயை எடுத்து, அரைச்சு எடுத்துட்டு, பிழிஞ்சு, ரெண்டு படி அளவுக்கு தேங்காய் பால் எடுத்துட்டு, அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்புல வச்சுட்டு, நெருப்பை ஏத்திட்டு, கல்லுப்பு, மஞ்சள், கருஞ்சீரகத்தையும் தனித்தனியே ஒரு கால் பலம் எடுத்துட்டு, கால் பலம்னா, சுமாரா 10 கிராம் அளவுக்கு எடுத்துக்கிடனும்னும் சொல்லிட்டு, அடுத்ததா,
சேரப்பா சமனாக மும்ம ருந்துந்
திறமாகப் பொடித்தந்தப் பாலிற் தூவி
நேரப்பா வடுப்பேற்றிக் காய்ச்சு காய்ச்சு
நிகரான பதமாக எண்ணெய் வாங்கு
ஆரப்பா இவ்விதமாய் மருந்து சொல்வார்
அவனியிலே யுண்டோதான் கண்டாற் சொல்லு
தேரப்பா என் மருந்தே நன்மருந்து
தெளிவாகச் சொன்னேன் காண்சிறப்பாய்த் தானே
மேல சொன்ன கல்லுப்பு, மஞ்சள், கருஞ்சீரகம் இந்த மூன்றையும் பத்து கிராம் அளவுக்கு எடுத்துட்டு, தூளாக்கிட்டு, அந்த பொடியை தேங்காய் பாலில் தூவி, அடுப்புல வச்சு காய்ச்சணும்னும், எண்ணை பதத்துக்கு வந்ததும், அடுப்பிலிருந்து இறக்கிஎடுத்துக்கிடனும்னும், யாரப்பா இந்த உலகத்துல, இந்த மாதிரி எல்லாம் மருந்து சொல்வார்கள்? இந்த மருந்து நல்ல மருந்துன்னு தெளிவாகவே சொல்லியிருக்கிறதால், பக்குவம் மாறாமல் சொன்னபடியே செய்து பார்த்து இந்த தேங்காய் தயிலத்தோட பயனையும், சிறப்பையும் நோயை எவ்வளவு வேகமாக குணப்படுத்துகிறதுங்கறதையும் கண்கூடாகத் தெரிந்து கொள்ள முடியும் என்கிறார் போகரையா! அடுத்ததா,
தானேதான் வாங்கியதை வுடம்பிற் றேய்த்துத்
தனியான மாம்ப ட்டை தனையிடித்துக்
கோனே நீகுறுணிநீர் தனிற்குழைத்துக்
குண மாகமேற் பூசிச்சாய ரட்சை
வானேநீ யிப்படிதான் மூன்று நாள்தான்
வளமாகக் குளித்துவரச் சொறிசிரங்கு
தேனே தான்கரப் பானுந் தீருங்கேளு
செயலான புளியிலை யாவாரை வேரே
எண்ணெய்யாக எடுத்த தேங்காய்தயிலத்தை உடம்புல தேய்ச்சுட்டு, அடுத்ததா, மாம்மரத்துப் பட்டையை சீவி எடுத்துட்டு, நல்லா பொடியாக்கிட்டு, வடித்த கஞ்சி தண்ணியிலேயோ, அல்லது கொஞ்சமா தண்ணீரை விட்டு குழைச்சு, ஒரு கிண்ணத்திலே எடுத்துக்கலாம். குழைச்சு வச்சிருக்கிற மாமரத்துப்பட்டை பொடியை தேங்காய் தயிலம் தேய்ச்சு ஒரு மணிநேரம் கழிச்சு, உடம்பில் தேய்ச்சு குளிக்கணும்கறார். ஒரு மூன்று நாளைக்கு, தேங்காய்த் தயிலத்தை உடம்பில் தேய்ச்சுக்கிட்டு, மாமரத்துப் பட்டைத் தூளை தேய்ச்சு, குளிச்சிட்டு வந்தா, சொரி, சிரங்கு, கரப்பான் போன்ற தோல் நோய்கள் எல்லாம் ஓடியே போகும்னும், அது மட்டுமில்ல, புளியிலையும், ஆவாரை வேரையும் வச்சு ஒரு பக்குவம் சொல்லித் தருகிறார்.
தேங்காய்த் தயிலத்தால் சொரி, சிரங்கு, கரப்பான், மேகவெட்டை போன்ற தோல் நோய்களையெல்லாம், குணமாக்கலாம்னும் போகரையா சொல்லித் தந்த பக்குவம் நல்ல விஷயம் தானே!
பதிவைப் பார்த்தவர்களுக்கும், பகிர்ந்தவர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்!