அச்சத்தில் இருந்து விடுபடுவதற்கு, உறுதியான, நம்பிக்கையான வார்த்தைகளை சொல்லி, மாணிக்கவாசகரய்யா பாடியது!
மாணிக்கவாசகர் தந்தருளிய திருவாசகத்திலிருந்து!
வணக்கம் நண்பர்களே!
திருச்சிற்றம்பலம்!
எதற்கு பயம்? ஏன் பயப்பட வேண்டும்? யாருக்கு பயப்பட வேண்டும்? என்று மாணிக்கவாசகர் பெருமானார், திருவாசகத்தில், ஆனந்த முறுதல் பாசுரத்தில், ‘அச்சப்பத்து’ என்ற தலைப்பில் தந்தருளிய அருமையான பாடல் வரிகள், கோழையையும் வீரனாக்கும், பயந்தவனையும் தைரியசாலியாக்குகிற, முற்போக்கான சிந்தனையையும், தைரியத்தையும் மக்களுக்கு தரக்கூடிய பாடலாக இருக்கிறது.

பெரும் தமிழ் சான்றோர்களாலும், அழகுத் தமிழால் உருகி எழுதிய, திருவாசகத்தை படித்து, இன்புற்று விளக்க உரை தந்திருக்கிறார்கள். இறைவனின் அருளால், எல்லாமே எனக்குக் கிடைத்திருக்கிறது, ஆனால், எதற்க்கும், எந்த செயல் செய்வதற்கும் தைரியம் இல்லை! எதை செய்யப் போனாலும் பயம், அச்சம் என்று வாழ்வையே சிறுமையாக்கிக் கொள்ளும் இந்த மானிடர்களுக்காக, உறுதியான தைரியத்தையும், அச்சத்தையும் போக்கி, எதையும் எதிர்கொள்கிற சக்தியையும், பேராற்றலையும் தருகின்ற இந்தப் பாடலை, என்னை வழிநடத்தும் இறையின் அருளால் என்னால் இயன்ற வரைக்கும் விளக்கிச் சொல்லி இந்தப் பதிவில் சமர்ப்பிக்கிறேன்!

உலகில் வாழ்வதற்கு பொன்னும், பொருளும், புகழும் நேர்வழியில் கிடைக்கப்பெற்றால், அந்த செல்வங்களை காக்கும் பொருட்டு, தைரியமும் கூடவே வேண்டும். ஆனால், அச்சம் என்கிற நுண்ணுயிர் மனதிற்குள்ளே புகுந்து விட்டால், அது ஆயுளையே உறிஞ்சி குடித்து விடும்! அந்த அச்சம் வளர்க்கின்ற நுண்கிருமியை, வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்றுவதற்கு, அருமையான தைரியத்தின் வாளை அழகுத் தமிழில் மாணிக்க வாசகர் பெருமான் திருவாசகத்தில் தந்திருப்பதை பார்த்து வரலாமா?
514.
புற்றில்வா ளரவும் அஞ்சேன்
பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடையெம் அண்ணல்
கண்ணுதல் பாத நண்ணி
மற்றுமோர் தெய்வந் தன்னை
உண்டென நினைந்தெம் பெம்மாற்
கற்றிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே
புற்றிலே வாழ்கின்ற, உயிரை குடிக்கும் வாளைப் போன்ற குணம் உடைய நாகமே ஆனாலும், அச்சம் கொள்ள மாட்டேன்! பொய் சொல்லி பிழைப்பவர்களையும், அதனால் வயிறு வளர்த்து வாழ்பவர்களையும், பொய்யையே மெய்யை போலவே பேசுகின்ற வேடதாரிகளையும், அவர்கள் சொல்லும் எந்தவித பொய்களுக்கும் அஞ்சவே மாட்டேன் என்றும், சடை பிடித்து நடனம் ஆடுகின்ற எம் இறைவனை வணங்கி, பாதம் பணிந்து இருக்கும்போது, என் அன்பான இறைவன் பொன்னம்பலத்தானை விட வேறொரு இறை இருக்கிறது என்று, வேறு இறையை தேடும் குணம் கொண்ட, கற்றறிவு இல்லாதவர்களை கண்டால் அச்சம் எதற்கு? விஷமுள்ள நாகத்துக்கு அஞ்சாதவன், பொய் சொல்லிப் பிழைக்கும் வேடதாரிகளை கண்டு அஞ்சாதவன், எம்பெருமானையே அன்றி, வேறு இறையை தேடுகின்ற கற்றறிவு இல்லாதவர்களை கண்டால், அச்சம் கொள்வேனா என்று கேட்கிறார், இந்தப் பாடலில் இறுதி வரியில், அம்ம நாம் அஞ்சுமாறே என்ற வரிகளுக்கு, நான் அஞ்சுதலுக்கு மாறான அஞ்சாமையோடு இருப்பேன் என்று, சொல்லுவதாக பொருள் எடுத்துக் கொண்டு, அடுத்ததாக,
515.
வெருவரேன் வேட்கை வந்தால்
வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
இருவரான் மாறு காணா
எம்பிரான் தம்பி ரானாம்
திருவுரு வன்றி மற்றோர்
தேவரெத் தேவ ரென்ன
அருவரா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே
வெறுப்பு வந்தாலும் சரி, விருப்பம் வந்தாலும் சரி, வினைகள் கடல் போல சீறி வந்து, என்னை அமிழ்த்தினாலும் சரி, அதாவது, போன பிறவி பாவ வினைகள் மொத்தமாக சேர்ந்து கொண்டு, கடல் போல வந்து என்னை மூழ்கடித்தாலும், அஞ்ச மாட்டேன் என்றும், பிரம்மாவும் விஷ்ணுவும் எம் தலைவனாம் ஈசனின் திருவடியையும், திருமுடியையும் காண, முயற்சிகள் செய்த போதும், காணக் கிடைக்காத எம் தலைவனின் திருவுருவை, அன்பான இறை தொண்டர்களுக்கு திருநடனக் கோலத்தில் காட்சியளித்து அருள் கொடுக்கும் எம் இறைவனைக் காட்டிலும் வேறு ஒரு இறைவன் இருக்க முடியுமா? நான் வணங்கும் பொன்னம்பலத்தானை, நெருங்கி அருள் பெற மனமில்லாதவர்களை கண்டால், அஞ்சவா போகிறேன்? அச்சம் எப்போதும் இல்லை என்று சொல்லிவிட்டு, அடுத்ததாக,
516.
வன்புலால் வேலும் அஞ்சேன்
வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி
என்பொலா மணியை யேத்தி
யம்பலத் தாடு கின்ற
யினிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே
கொடுமைக்கும், குத்திக் கிழிக்கும் வன்மையான கோபத்திற்கும் துணை போகும், எந்த வேலாக இருந்தாலும், அதற்கெல்லாம் அஞ்ச மாட்டேன்!வளையல் அணிகின்ற உன்னதமான பெண்மையின் பிறப்பில், காமத்தாலும், மோகத்தாலும் எனைக் கொல்ல வருகின்ற, பெண்களின் கடைக்கண் வேல்வீச்சுக்கும் அஞ்ச மாட்டேன்! பக்தி பரவசத்தால், என்னையே உருக்கி, கண்களில் நீர் சுரக்கும் பக்தியோடு, எம்பெருமான் தில்லையம்பதியின் நாட்டியத்தை கண்டு, பூரித்து வணங்கி எம்பெருமானின் அருள் அமிர்தக் கடலில், ஒரு சிறு துளி ஏனும், பருகுவதற்கு பக்தி இல்லாத, அன்பில்லாதவர்களை கண்டால், ஒருபோதும் அஞ்சி விடமாட்டேன்! கூர்மையான, கொடுமையான வேலுக்கும், கன்னியரின் கடைக்கண் காமத்தின் கூர்மையான வேலுக்கும் அஞ்சாதவனாகிய நான், எம்பெருமானின் நடனத்தை கண்ணாரக் கண்டு, என் உடம்பும் மனமும் உருகி, அந்த இறைவனின் அருள் அமிர்தத்தில் நனைந்து, புத்துணர்வும் பேரின்பமும் அடைகின்ற என்னைப்போல, எம் பெருமானின் அருள் அமிர்தத்தில், ஒரு துளியேனும் பெறுவதற்கு பண்படாத, பக்தி இல்லாத, அன்பில்லாதவர்களை கண்டு அஞ்சவா போகிறேன்? என்று கேட்டுவிட்டு அடுத்ததாக,
517.
கிளியனார் கிளவி யஞ்சேன்
அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடு மேனி
வேதியன் பாத நண்ணித்
துளியுலாங் கண்ண ராகித்
தொழுதழு துள்ள நெக்கிங்
களியிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே
கிளி போன்ற மொழி பேசி காமத்தில் விழ வைக்கும் சொல்லின் பாய்ச்சலுக்கும் அஞ்சி விடமாட்டேன்!அத்தகைய பெண்களின் பொய்யான சிரிப்புக்கும், நகைப்புக்கும் அஞ்சு விட மாட்டேன்! திருநீறு பூசிய திருமேனி கொண்ட, வெள்ளியம்பலத்தில் வீற்றிருக்கும் எம் பெருமானின் அழகை கண்டு, அந்த இறையின் கனிவை கண்டு, திருவடியை பற்றி உள்ளம் உருகி, கண்ணீர் சிந்தி உடம்பெல்லாம் சிலிர்க்கின்ற உணர்வு பெறும், மனமில்லாதவர்களை கண்டு, நான் எதற்கு அச்சப்பட வேண்டும்? நான் அச்சப்படவே மாட்டேன் என்றும் சொல்லிவிட்டு, அடுத்ததாக,
518.
பிணியெலாம் வரினும் அஞ்சேன்
பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியி னான்றன்
தொழும்பரோ டழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச்
சேவடி பரவி வெண்ணீ
றணிகிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே
துன்பம் கொடுக்கிற, துயரான வேதனை கொடுக்கின்ற எந்தவித நோய் வந்தாலும், அஞ்ச மாட்டேன்! மறுபடியும் இந்த உலகத்தில் பிறப்பதற்கும், இந்த நொடியே இறப்பதற்கும் அஞ்ச மாட்டேன்! துணி நிலா, பிறை நிலவை தன் தலையில் சூடிய, எம்பெருமானின் தொண்டர்கள் தொழுகின்ற திருவடியை காண வேண்டி, திருமாலால் பூமியைப் பிளந்தும் காண முடியாத திருப்பாதங்களை, அடியவர்களின் பக்திக்காகவும், அன்புக்காகவும், பொன்னம்பலத்தானின் பொற் பாதங்களைக் கண்டு, வணங்குகின்ற காட்சி கொடுத்து, தொண்டர்களுக்கு அருள் புரியும் ஈசனின் திருமேனியில், அணியும் திருநீற்றை, தம் நெற்றியிலும், உடலிலும் பூசி மகிழ்ந்திருக்கும் தொண்டர்கள் போல், தம் நெற்றியில் திருநீறு அணிந்து கொள்ள மறுக்கும் மனிதர்களைக் கண்டால், அச்சம் கொள்ளவா போகிறேன்? கொடிய நோய்களுக்கும், பிறப்புக்கும், இறப்புக்கும், அஞ்சாத நான் திருநீற்றை அணிய மறுக்கின்ற, மனிதர்களைக் கண்டால் அஞ்சுவேனா? அச்சப்பட போவதே இல்லை, தேவையும் இல்லை என்றும் சொல்லிவிட்டு, அடுத்ததாக,
519.
வாளுலாம் எரியும் அஞ்சேன்
வரைபுரண் டிடினும் அஞ்சேன்
தோளுலா நீற்றன் ஏற்றன்
சொற்பதங் கடந்த அப்பன்
தாளதா மரைகள் ஏத்தித்
தடமலர் புனைந்து நையும்
ஆளலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே
கொழுந்துவிட்டு எரியும் நெருப்புக்கும், என்னை சுட வரும் நெருப்புக்கும் அஞ்ச மாட்டேன்! துன்பம் தருகின்ற வெள்ளம், கரைபுரண்டு வந்தாலும் அஞ்ச மாட்டேன்! தோளிலும், நெற்றியிலும், மார்பிலும் திருநீறு அணிந்திருக்கும் எம்பெருமானும், எங்கும் நிறைந்தவனும், இனிய சொற்பதங்களுக்கும் மேலான, அருள் நிறைந்த என் அம்மையப்பனின் திருவடிகளைத் தழுவி வணங்கி, மலர் அணிவித்து, சரணாகதி அடைந்து மகிழ்கின்ற மனம் இல்லாதவர்களை கண்டால், எதற்கு அஞ்சவேண்டும்? அப்படிப்பட்ட அன்பைத் தெரிந்துகொள்ளாத, பண்பில்லாதவர்களை பார்த்து அஞ்சு விடுவேனா? நெருப்புக்கும், நீருக்கும் அஞ்சாதவன், திருநீறு அணிந்த எம்பெருமானை வணங்குவதற்கும் அப்பரம்பொருளைக் கண்டு மனம் உருகி மகிழ்வதற்கு, மனம் இல்லாதவர்களை கண்டு அச்சம் கொள்வேனா? என்று கேட்டுவிட்டு, அடுத்ததாக,
520.
தகைவிலாப் பழியும் அஞ்சேன்
சாதலை முன்னம் அஞ்சேன்
புகைமுகந் தெரிகை வீசிப்
பொலிந்தஅம் பலத்து ளாடும்
முகைநகைக் கொன்றை மாலை
முன்னவன் பாத மேத்தி
அகநெகா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே
கொடுமையான, வீண் பழியாக எந்த பழியை என் மீது சுமத்தினாலும், அஞ்சப்போவதில்லை! இறப்பை முன்னமே தெரிந்து கொண்டாலும், அந்த இறப்புக்கும் அஞ்ச மாட்டேன்! நெருப்புப் பிளம்பின் வட்ட அலங்கார வளைவில், ஒளியாய் அலங்கரிக்க, புகை சூழ்ந்த நெருப்பை இடக்கரத்தில் பிடித்து, ஜோதியான வடிவை ஏந்தி, அம்பலத்தில் நடனம் ஆடுகின்ற அம்பலத்தானின் புன்னகையையும், கொன்றை மலர் மாலை மார்பை அலங்கரித்து, முன்னே கால் தூக்கி நடனம் ஆடுகின்ற, எம்பெருமானின் திருப்பாதம் பற்றி, துதித்து மனம் உருகி நெகிழாதவர்களை கண்டால், எதற்கு அச்சப்பட வேண்டும்? வீண் பழிக்கும் அஞ்சாதவன், இறப்பு வரும் காலத்தை முன்னமே அறிந்து கொண்டாலும், வருகின்ற இறப்பை கண்டும் அஞ்சாதவன்! எம்பெருமானை கண்டு மனம் நெகிழாத மனிதர்களைக் கண்டு அச்சம் எதற்கு? அஞ்சவே மாட்டேன்! என்று கேட்டுவிட்டு, அடுத்த பாட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.
521.
தறிசெறி களிறும் அஞ்சேன்
தழல்விழி யுழுவை யஞ்சேன்
வெறிகமழ் சடைய னப்பன்
விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்க ளேத்திச்
சிறந்தினி திருக்க மாட்டா
அறிவிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே
கயிறையும், கம்பத்தையும் அறுத்தெறிந்து, மதம் கொண்டு மீறி வருகின்ற யானைக்கும் அஞ்ச மாட்டேன்! கொடிய பற்களோடும், கொடிய பார்வையோடும், மிளிரும் கண்களை உடைய புலிக்கும் அஞ்ச மாட்டேன், எம் பெருமானின் திருவிளையாடல்களை, வானவர்களும், தேவர்களும், அறிய முடியாத, அறிந்து கொள்ள இயலாத, புரிந்து கொள்ள முடியாதபடி, திருவிளையாடல் புரிகின்ற, விரித்த சடையழகன் பொன்னம்பலத்தானின் திருவிளையாடல்களின் சிறப்பை அறியாது, இறையோனின் பொற்பாதங்களை பற்றி, அருள் பெற்று, இன்புற்று சிறப்புறுகின்ற, இனிய நல்வாழ்வு வாழ்வதற்கு, எம்பெருமான் மேல் பக்தியும், அன்பும் இல்லாத, ஞானம் இல்லாத மனிதர்களை கண்டு, எதற்காகவும் அச்சம் கொள்ள மாட்டேன்! மதம் கொண்ட யானைக்கும், கோபம் கொண்ட புலிக்கும் அஞ்சாதவன், இந்த ஞானம் இல்லாத மனிதர்களை பார்த்து, அஞ்சவா போகிறேன்? அஞ்சவே மாட்டேன்!என்று சொல்லிவிட்டு, அடுத்ததாக,
322.
மஞ்சுலாம் உருமும் அஞ்சேன்
மன்னரோ டுறவும் அஞ்சேன்
நஞ்சமே யமுத மாக்கும்
நம்பிரான் எம்பி ரானாய்ச்
செஞ்செவே யாண்டு கொண்டான்
திருமுண்டந் தீட்ட மாட்டா
தஞ்சுவா ரவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே
கடுமையான பனிக்கும், கருமேகங்களின் உறுமலுக்கும், இடிக்கும், மின்னலுக்கும் அஞ்சமாட்டேன்! மன்னாதி மன்னர்களும் என் மீது பகை கொண்டாலும், அஞ்சப்போவதில்லை! கொடிய நஞ்சையே அமிழ்தமாக்கி உண்டு விட்ட, எம் பெருமான், பொன்னம்பலத்தாரின் நெஞ்சில் பூரணமாய் நிறைந்திருக்கும், எனை ஆளுகின்ற எம் பெருமானின் திருமேனியை, அலங்கரிக்கும் திருநீற்றை, அணிய மறுத்து, அஞ்சுகின்ற கோழைகளைக் கண்டு அஞ்ச மாட்டேன்! கடும் பனிக்கும், கருமேகத்திற்கும், இடிக்கும், மழைக்கும் அஞ்சாதவன்! மன்னர்களே பகை கொண்டு படை எடுத்தாலும் அஞ்சாதவன்! திருநீற்றை அணிந்து கொள்ள பயந்து மறுக்கும், கோழைகளைக் கண்டால் பயம் எதற்கு? அச்சம் கொண்டு விடுவேனா? என்று கேட்டு விட்டு, அடுத்ததாக,
523.
கோணிலா வாளி யஞ்சேன்
கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியி னானை
நினைந்துநைந் துருகி நெக்கு
வாணிலாங் கண்கள் சோர
வாழ்த்திநின் றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே
கோணல் இல்லாத, கூர்மையான, கொல்லுகின்ற அம்புக்கும் அஞ்ச மாட்டேன்! உயிர் பறிக்கும் எமனுக்கும், அவனின் கோபத்திற்கும் அஞ்ச மாட்டேன்! நீண்ட பிறை நிலவை, தலையில் சூடிய எம்பெருமான் பொன்னம்பலத்தானின், கருணையையும், அருளையும் கண்டு, மனம் குளிர்ந்து, கண்ணில் நீர் பெருக, பணிந்து தொழுது, அம்பலத்தானின் ஆடலழகை கண்டு, மனம் மெய்சிலிர்த்து, வாழ்த்துவதற்கே மனமில்லாத, ஆணவக்காரர்களைக் கண்டால் எதற்காக அஞ்சவேண்டும்? அச்சம் கொள்ளவே மாட்டேன்!உயிருக்கு துன்பம் தரும் அம்புக்கும், உயிர் எடுக்கும் எமனுக்குமே அஞ்சாதவன், இந்த ஆணவக்காரர்களை கண்டு, அஞ்சவா போகிறேன்? அச்சம் என்பதே தமக்கு இல்லை என்று, ஆனித்தரமாகச் சொல்லுகிறார் மாணிக்கவாசகர் பெருமான்.
தம்மையே ஆளுகின்ற, தம்மையே ஆட்கொண்ட பொன்னம்பலத்தானின், அருளும், கருணையும் இருக்கும்போது, சீறிவரும் பாம்பிற்கும், பொய்யர்களுக்கும், வெறுப்புக்கும், விருப்பத்திற்கும், பொல்லாத வினைக்கும், வேலுக்கும், கூர்விழியின் காமப் பார்வைக்கும், கிளி போல மொழி பேசி, பொய்யாக புகழ்கின்ற பேச்சுக்கும், ஏச்சுக்கும், எவ்விதமான பிணிகளுக்கும், பிறப்புக்கும், இறப்புக்கும், எரிகின்ற நெருப்புக்கும், கரைபுரளும் வெள்ளத்திற்கும், வீண்பழிக்கும், முன்னமே அறிந்து கொண்டு வருகின்ற இறப்புக்கும், மதம் கொண்ட யானைக்கும், கொடிய புலிக்கும், மின்னலின், இடியின் உறுமலுக்கும், மன்னர்கள் கொண்ட பகைக்கும், கூர்மையான அம்புக்கும், உயிர் பறிக்கும் எமனுக்கும் அஞ்சாதவன், எம்பெருமானின் திருவடிகளை பணிந்த பின்பு, என்னில் எல்லாமே இறைவனிடம் ஒப்படைத்த பின்பு, எதற்காக, யாருக்கு அஞ்சவேண்டும்? எம்பெருமானிடம், தான் பெற்ற எல்லாப் பெருமையையும், பகையையும், துன்பத்தையும், துயரையும், மனதையும், மமதையையும், திமிரையும், வினைகளையும் விட்டு விட்டால், எம்பெருமான் என்னை காப்பார் என்று தைரியமும், நம்பிக்கையும் இருக்கும் போது எதற்காக வீணாக அச்சப்பட வேண்டும்? எம்பெருமானின் அருள் கொடையையும், அன்பையும், அரவணைப்பையும் உணராத மக்களை கண்டால், அவர்கள் மேல் இரக்கம் கொள்வேனேயன்றி, என்றும் அச்சம் கொள்ளவே மாட்டேன்! என்று, மாணிக்கவாசகர் பெருமானார் திருவாசகத்தில் அச்சப்பத்து என்ற தலைப்பில் பாடலாகத் தந்திருக்கிறார்!
எதற்கும் அச்சம் கொள்ள வேண்டாம்! எந்த மதத்தின், எந்த குலத்தின், எந்த சாதியின் நம்பிக்கைக்குரிய, இறைவனாக இருந்தாலும், அந்த இறைவனின் திருவடியை, சரணாகதி என்று, உறுதியாய் பற்றி பணிந்து விட்டால், எந்த வினையும், எந்த பிணியும், எந்த கெடுதலும் வராது! வருவதற்கு விடவும் மாட்டார் என்பதை, உறுதியோடு உணர்ந்து விட்டாலே, இறைவனின் அருள் கிடைத்துவிடும்! அப்போது, நமக்குள் இருக்கும் அச்சமே, அச்சப்பட்டு ஓடிவிடும் என்று, அச்சப்படுகிற மனத்திற்கு, அச்சத்தில் இருந்து விடுபடுவதற்கு, உறுதியான, நம்பிக்கையான வார்த்தைகளை சொல்லி, மாணிக்கவாசகரய்யா சொல்லித்தந்தது, நல்ல விஷயம் தானே!
பதிவை பார்த்தவர்களுக்கும் பகிர்ந்தவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்!