வெண்கடுகு வசியமை!

கண்ணுக்கும், நெற்றியிலும் இட்டு, வித்தைகள் பல செய்யமுடியும்!

போகர் சித்தர் சொன்னது!

வணக்கம் நண்பர்களே!
போகரய்யா தமது ஏழாயிரத்தில் ஆறாவது காண்டத்தில் 5481 மற்றும் 5482 வது பாடலில் இந்த வெண்கடுகு பற்றிக் குறிப்பிட்டுள்ளார். கருப்பு கடுகை தாராளமாக சமையலறைகளில் பார்த்திருக்கலாம். வெள்ளை நிறம் கொண்ட ‘வெண்கடுகு’ வட இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. வெண்கடுகு சமையலுக்கும், பல நோய்களைக் குணமாக்கும் மருத்துக்கும் பயன்படுகிறது. போகரய்யா தமது ஏழாயிரத்தில் வெண்கடுகு செய்யும் வித்தைகளை பாடலாகச் சொல்லியிக்கிறார். வெண்கடுகு இத்தனை சிறப்பான செயல்களை மனிதர்களுக்கு செய்யுமா என்று கேட்பதற்கும், படிப்பதற்கும், தெரிந்து கொள்வதற்க்கும். மிக ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. போகரய்யா சொன்ன வெண்கடுகுக்கு
தாவரவியல் பெயர்     :  Sinapis Alba
ஆங்கிலப் பெயர்       :  Yellow Mustard Seeds
கடுகு விதைகள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கவும்,  முடக்கு வாதம், ஆர்த்ரைட்டீஸ் பிரச்சனைகள் குணமாவதற்கும்,
மைக்ரேன் என்னும் ஒற்றைத்தலைவலியை குணமாக்குவதற்கும்,
சுவாச பிரச்சனை, ஆஸ்துமா, இரத்த அழுத்தம், மாதவிடாய் பிரச்சினைகள், கர்ப்பப்பை கோளாறுகளையும் குணமாக்கும்,
வலி, வீக்கம், நோய் தொற்றுக்கிருமிகளை போக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பயன் படுகிறது.


மனித வாழ்வில் மிகவும் பயனுள்ள வெண்கடுகு ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, குடும்பத்தில் கண் திருஷ்டி, குடும்பப் பிரச்சினைகள், முக வசியம் போன்றவைகளுக்கும் பயன் தருகிற வெண்கடுகில் கண்ணுக்கும், நெற்றியிலும் இடுகின்ற திலகமாக, மையை பற்றி போகரய்யா சொல்லித் தந்த பாடலை பார்த்துவரலாமா?

5477.
நிற்பாரே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன்
நிலையான புலிப்பாணி மைந்தாகேளு
அற்பமென்று நினையாதே அருண்மைந்தாபார்
அருமையுள்ள காலாங்கி சொன்னநீதி
சிற்பரனார் யெந்தன்குரு வாக்குதானும்
சீருலகில் வொருநாளும் பொய்யாதப்பா
துப்புரவாய் தகரமுடன் தாரஞ்சேர்த்து
துகையான வெள்ளையென்ற பட்டுதானே

தம் சீடரான புலிப்பாணிக்கு, இன்னுமொரு மார்க்கத்தை, வித்தையை சொல்லித் தருகிறார். இந்த வித்தையை ரொம்ப சுலபம்ன்னு நினைச்சுடாதே. இந்த வித்தையை, என் குருவான காலாங்கிநாதர் எனக்குச் சொன்னது. எந்தன் குருவோட வாக்கு என்றைக்கும், பொய்க்காது! தகரமுடன் தாரஞ் சேர்த்து, தகரம்னா குங்குலிகம், தாரம்னா அரிதாரம், இரண்டையும் சேர்த்துட்டு, ஒரு வெள்ளைப்பட்டு துணியை எடுத்துக்கணும்னும் சொல்லிட்டு, அடுத்த பாட்டுக்குப் போகிறார்

5478.
தானான சீலையது தன்னில்மைந்தா
தண்மையுடன் இரண்டையுந்தான் அதனிற்சுற்றி
மானான வெள்ளையென்ற கடுகுதானும்
மகத்தான பாண்டமதிலிட்டுமைந்தா
பானான வெள்ளை கடுகெண்ணைதன்னால்
பக்குவமாய் தானெரிப்பாய் நாலுசாமம்
தேனான சிரசதுவாம் மோடுதன்னில்
தேற்றமுடன் மையதனை வாங்கிடாயே

வெள்ளைப் பட்டுத் துணியை எடுத்து, ஒரு சிறு துண்டாக, 4 அங்குலத்துக்கு 4 அங்குல அளவுக்கு, வெட்டியெடுத்து, அந்தத் துணி பட்டு துணியாகத்தான் இருக்கணும்னு இல்லாம, பருத்தித் துணியாக இருந்தாலும் எடுத்துக்கொள்ளலாம்! அந்தத் துணியோட நடுவில் குங்குலியத்தையும், அரிதாரத்தையும் சேர்த்து தூளாக்கினதை சிறு மூட்டையாகக் கட்டி வைத்து, ஒரு மண் பாத்திரத்தை எடுத்து, மண்சட்டி மூடியாகக்கூட இருந்தாலும் நல்லது. அந்த மண்சட்டியில் வெண்கடுகை போட்டு, வெள்ளைக் கடுகெண்ணெய் ஊற்றி, வெள்ளைக் கடுகெண்ணெய் கிடைக்கவில்லையென்றால், சாதாரண கடுகெண்ணெய்யை ஊற்றி, குங்குலிகம், அரிதாரம் சேர்த்து கட்டின சிறு துணி மூட்டையை, தீபம் போல எரிக்க வேண்டும்! தீபம் முழுவதும் எரிந்து, வெண்கடுகு எண்ணெய்யோடு, வெண்கடுகும், எரிந்து கருகி மையாகக் மண்சட்டியில் படிந்து கிடைக்கும். மண்சட்டியில் படிந்து சேர்ந்துள்ள மையை வழித்தெடுத்து, பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டு, அடுத்ததாக

5479.
வாங்கியே மையதனில் கூடச்சேர்க்கும்
மகத்தான சரக்கதுவும் சொல்லக்கேளும்
ஓங்கியே பச்சையென்ற பூரந்தானும்
வுத்தமனே வாடையென்ற கஸ்தூரியப்பா
தூங்கியே திரியாமல் புனுகுமைந்தா
துடியான குங்குமப்பூ ரோஜனையும்சேர்த்து
சாங்கமுடன் சவ்வாதுந் தானுங்கூட்டி
சட்டமுடன் தானரைப்பாய் பன்னீராலே

மண்சட்டியில் இருந்து சேகரித்த வெண்கடுகு மையில் கூட சேர்க்கும் பொருட்களையும், சொல்வதாகச் சொல்லிவிட்டு, அந்த வெண்கடுகு மையோட பச்சை கற்பூரம், கஸ்தூரி, புனுகு, குங்குமப்பூ, கோரோசனை, சவ்வாது இதையெல்லாம், கொஞ்சமா சேர்த்து, பன்னீர் ஊற்றி, சந்தனம் அரைக்கிற மாதிரி அரைக்கணும்னும் சொல்றார்! இந்தப்பொருட்களெல்லாம், வாசனைக்கு சேர்க்கணும்னு சொல்வதாக எடுத்துக் கொண்டு, மேலே சொன்ன பொருட்களையெல்லாம், சேர்த்து நல்லா மை போல அரைச்சு எடுத்துக்கணும்னும் சொல்லிட்டு அடுத்ததா,

5480.
பன்னீரால் நாற்சாமம் அரைத்துமேதான்
பாங்குபெற மையதனைப் பதனம்பன்னு
இன்னிலத்தி லுனைப்போலார்ச்சித்து
யெழிலான பூபதியாமென்னக்கூறும்
நன்னயமாய் ஆவினதுவெண்ணைதன்னால்
நயம்பெறவே தான்கூட்டி மத்தித்தேதான்
சொன்னபடி மையதனைக் கண்ணிற்றீட்டி
சுகியுடனே வையகத்தைச் சுற்றுவீரே

பன்னீரில் அரைச்சு எடுத்த மையை, ஒரு சிமிழ்ல வைத்துக் கொண்டு, கொஞ்சமாக எடுத்து பசு நெய்யில் கலந்து, கண்ணுக்கு மை போல தீட்டிக்கிட்டு, சந்தோசமா இந்த உலகத்தையே சுற்றி வரலாம்ன்னும், வெண்கடுகால் ஆன மையை கண்களில் தீட்டிக்கொண்டு, போகிற போது, பார்க்கிறவர்கள், இப்படி ஒரு சித்தன் இருக்க முடியுமா? என்று சொல்லும் அளவுக்கு, வெண்கடுகு மையால், கவர்ச்சியும், கம்பீரமும், சித்தன் என்கிற பெயரும் கிடைத்திருக்கும்! இந்த உலகை ஆனந்தமாகச் சுற்றியும் வரலாம் என்று சொல்லிவிட்டு, அடுத்ததாக

5481.
சுற்றயிலே யுனைக்கண்ட மாண்பரெல்லாம்
சுகமுடனே மன்மதனாரென்றுசொல்லி
வெற்றிபெற யுனைவணங்கி பின்னேசென்று
விருப்பமுடன் கேட்டதெல்லா மீவார்பாரு
எற்றிசையும் உனைக்கண்டு யேங்குவார்கள்
எழிலான மையினது வேகத்தாலே
நெற்றிதனில் மையதனை யிட்டாயானால்
நேர்மையுடன் சிவராஜன் என்பார்பாரே

வெண்கடுகு மையைக் கண்களுக்கு, இட்டுக்கொண்டு செல்லும்போது, பார்க்கின்ற மக்களெல்லாம், மன்மதனா இவரென்று சொல்லி, வணங்கி பின்னே தொடர்ந்து வந்து, கேட்டதெல்லாம், விருப்பமுடன் கொடுப்பார்கள்! எல்லாத் திசையிலும், மக்கள் அன்பு கொள்வார்களென்றும், இந்த அழகான வெண்கடுகு மையினால், நெற்றியிலே திலகமாக இட்டுக் கொண்டால், சிவராஜன் என்றும் சொல்லி, வணங்குவார்கள் என்றும் சொல்லிவிட்டு, அடுத்ததாக,


5482.
பாரேதான் சித்தர்முனி ரிஷிகள்தேவர்
பண்புடனே சாத்திரங்கள் அனேகஞ்செய்தார்
நேரேதான் சிடிகையென்ற வேதையப்பா
நேர்மையுடன் கைகண்ட வேதைதன்னை
தீரேதான் வையகத்து மாண்பருக்கு
சிறப்புடனே பாடியல்லோ மறைத்துவைத்தார்
கூரேதான் மாணாக்கள் பிழைக்கவென்று
கூறினேன் சிடிகையென்ற வேதைதானே

பாருப்பா! மற்ற சித்தர்களும், ரிஷிகளும், தேவர்களும் சாஸ்திரங்களையும். சம்பிரதாயங்களையும் புதிது புதிதாக எத்தனையோ செய்து கொடுத்தார்கள். பார்க்கப் போனா, இது ரொம்பவே எளிதாகச் செய்யக்கூடிய வித்தையப்பா!  இந்த அருமையான வெண்கடுகுமை செய்கிற விதத்தையும், வித்தைகளையும், உலக மக்கள் தெரிந்துகொள்ளாதபடிக்கு, அவர்களெல்லாம் மறைத்து வைத்துவிட்டார்கள். இது போன்ற சிடிகை வித்தைகளை, சிடி கை வித்தைன்னா, எளிதாகச் செய்து முடித்து, பலன் பெறுகிற வித்தைகளையெல்லாம், என் மாணவ சீடர்களும் இந்த உலகத்தில் பிழைக்க வேண்டி, இந்த வசியமை வித்தையை சொல்லித்தருகிறேன் என்று, இந்த வெண்கடுகு வசியமை வித்தையை, போகரய்யா தம் சீடரான புலிப்பாணி சித்தருக்கும், உலக மக்களுக்கும்  சொல்லித்தந்தது நல்ல விஷயம் தானே!


பதிவைப் பார்த்தவர்களுக்கும், பகிர்ந்தவர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்

Leave a comment