தாது பெருகவும், கை, கால் நடுக்கம் குணமாகவும்,

யாக்கோபு சித்தர் சொன்னது!

வணக்கம் நண்பர்களே!
யாக்கோபு சித்தர், தமது வைத்திய சிந்தாமணி 700 என்கிற நூலில், 447 முதல் 448 வரை உள்ள பாடல்வரிகளில், மிக எளிதாக செய்து, உண்டு, பலன் சேர்க்கக் கூடிய விதத்தில், கை, கால் எல்லாம் நடுங்குகிற  வியாதிக்கு, ஒரு மருந்துப் பக்குவம் சொல்லித் தருகிறார். கால் கைக்கு மட்டுமல்ல தாது கெட்டு, நரம்பும் தளர்ந்து போயிருந்தாலும், இந்த பக்குவம் பலன் கொடுக்கும் என்று, யாக்கோபு சித்தர் சொல்லித் தருகிறார்.


யாக்கோபு சித்தரய்யாவே இந்தப் பக்குவத்தைச் செய்து, உண்டு, பார்த்து பலனை இந்த நாட்டு மக்களுக்கு வெளிப்படையாகக் சொன்னேன் என்று சொல்லிவிட்டு,  இந்த பக்குவத்தை மருந்தாகச் சாப்பிட்டாலும் பலன் கொடுக்கும். விருந்தாகச் சாப்பிட்டாலும் பலன் கொடுக்கும்னும் சொல்லித்தந்த பாடலுக்குள் போகலாமா?

எக்கியத்திற் பலிகொடுக்குங் கொழுப்பினோடு

இந்திடைக்குத் திரிகடுகு பரங்கிப்பட்டை

ஒக்கயெடு உள்ளியுடன் சேர்த்திடித்து

ஒருபானை தன்னிலீட்டுப் பாணியெட்டு

தக்கயெரி யெட்டொன்றாய் வற்றக்காய்ச்சித்

தனியாக நல்லெண்ணெய் எடையேசேர்த்து

பக்குவமா யெரித்து சிறு கரண்டிகொள்ள

பாக்கியவான் யாகோபு பலன்சொன்னாரே   (447)

எக்கியத்தில் பலி கொடுக்கும், எக்கியம்னா வெள்ளாடு! வெள்ளாட்டை பலி கொடுத்து, அந்த வெள்ளாட்டோட  கொழுப்பை ஒரு 100 கிராம் எடுத்துக்கிட்டு, திரி கடுகு, அதாவது சுக்கு மிளகு திப்பிலி அதோட  பரங்கிப் பட்டையும், வெங்காயமும் தனித்தனியே ஒரு 100 கிராம் சேர்த்து, அரைச்சு அல்லது இடிச்சோ எடுத்துக்கிட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு, ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு, அடுப்புல வச்சு சூடாக்கி, எட்டுக்கு ஒன்னு தண்ணி வத்துற மாதிரி கொதிக்க வச்சு, கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு பக்குவமா எடுத்து, கொஞ்சமா சின்ன டம்ளர்லயோ,  கரண்டிலையோ எடுத்து  வாரத்துக்கு ஒரு முறையோ, வாரத்துக்கு ரெண்டு தரமோ வெள்ளாட்டு கொழுப்பை, பரங்கிப் பட்டையும், வெங்காயத்தையும் சேர்த்து அரைச்சு,  நல்லெண்ணெய்யும் விட்டு, சூப் மாதிரி செய்து சாப்பிட்டு வந்தால், அதோட பலன் என்னன்னு சொல்றேன்னும் சொல்லிட்டு, அடுத்ததா,

சொல்லடங்கா விந்துகட்டுந் திறமுமாகும்

சோர்வையுள்ள கைநடுக்கம் நசலும்போகும்

நல்லறிவு போலவே தேகமாகும்

நானுண்ட எண்ணெய்யிது நாட்டிற்சொன்னேன்

வெல்லரிது தாததுவுங் கெட்டுப்போகா

வீதமிகும் நாம்பிறுகிப் பலமுண்டாகும்

புல்லறிவு யில்லையிந்த எண்ணெய் நேர்மை

போக்கோடே யாகோபு பலன்சொன்னாரே  (448)


சூப்’ எப்படி இருக்க வேண்டும்:
வெள்ளாட்டுக் கொழுப்பினால் செய்த சூப்பினாலே, ‘சூப்’ அப்படின்னு சொல்றத விட, மருந்துன்னு சொல்லி கூட, சாப்பிட்டு வந்தா, சொல்ல முடியாத அளவுக்கு வீரியமும், விந்து கட்டுகிற திறமையும் கிடைக்கும்னும், சோர்வாக இருக்கிறதோ கை, கால் நடுக்கம் இருக்கிறதையோ குணமாக்கும்! நல்லறிவு போலவே தேகமாகும்! நல்ல அறிவு எப்பொழுதும், நல்லதையே நினைத்து, நல்ல விஷயமே செய்கிற மாதிரி, உடம்பு நல்ல விதமா, ஆரோக்கியமா ஆகிடும்னும், நான் உண்டு பார்த்து, இந்த வெள்ளாட்டு கொழுப்போட சூப்பின் நலனை, தெரிந்து கொண்டும், உணர்ந்து கொண்டும் தான் இதை, நாட்டு மக்களுக்கு சொல்றதாகவும், வெல்லரிது தாததுவும் கெட்டுப்போகா! தாது கெட்டுப்போன தெல்லாம் சரியாகி, தரமான தாதுவாக மாறிப்போகும்னும், நரம்புகள் எல்லாம் வலுவாகி, வீரம் பெருகி, நல்ல பலமாகி, எல்லா வேலைகளையும் எளிதாகவும், திருப்தியாகவும்  செய்வதற்கும்,  இந்த பக்குவத்தை சொல்றதாகவும், இந்த பக்குவத்தை போகிற போக்குல இந்த விவரத்தை உலக மக்களுக்கு யாக்கோபு சித்தரய்யா குறிப்பாகச் சொல்லிட்டு பேயிருக்கிறார்.

சூப் செய்யும் நன்மைகள் என்ன?

நம்ம கிராமங்கள்ல விருந்து வைக்கும் போதும். இல்ல, நல்ல நாள் பொழுதுமா, கறி எடுத்து சமைக்கும்போதும், வெள்ளாட்டுக் கொழுப்பை மட்டும் தனியா எடுத்து, வெங்காயம், மஞ்சள், மிளகு எல்லாம் சேர்த்து, சூப்புன்னு கொடுத்து சாப்பிடற பழக்கம் இருந்தாலும், இந்த பக்குவத்துல இவ்வளவு பலன்கள் இருக்குதுன்னு தெரிஞ்சா, இனிமே வெள்ளாட்டுக் கறி எடுத்து குழம்பு செய்யுற போது, மறக்காமல், இந்த கொழுப்பையும் வச்சு சூப்பு செய்து சாப்பிட்டு, கை கால் நடுக்கத்தையும் போக்கி, நரம்பையும் பலப்படுத்தி, தாதுவையும்,  வீரியத்தையும் கூட்டி, சந்தோஷமாகவே ஆரோக்கியமா இருக்கலாமில்லையா? யாக்கோபு சித்தரய்யா சொல்லித்தந்தது நல்ல விஷயம் தானே?

பதிவைப் பார்த்தவர்களுக்கும், பகிர்ந்தவர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்!

Leave a comment