போகர் சித்தர் சொன்னது!
வணக்கம் நண்பர்களே!
போகர்சித்தர் தமது ஏழாயிரத்தில், வேம்பைப் பற்றியும், சக்கரை வேம்பைப் பற்றியும் 640 முதல் 642 வரை பாடலாகத் தந்திருக்கிறார். உலோகங்களைப் பற்றிய விஷயத்தையும் உலகத்தைப் பற்றிய விசேஷத்தையும் நன்றாக தெரிந்தவராக இருப்பதால்தானோ என்னவோ, எல்லா பகுதிகளிலும், தன் முத்திரையை பதித்திருக்கிறார்.
வேம்புக்கு அறிவியல் பெயராக (Azadirachta indica, Neem) என்றும்,
சர்க்கரை வேம்புக்கு ஆங்கிலப்பெயர்: Scoparia weed, Licorice weed, அறிவியல் பெயர்: Scoparia dulcis என்றும் சொல்லப்படுகிறது.

மனிதர்களுக்கு துன்பம் தருகின்ற கொடிய நோய்களுக்கும், உடல் வலிமைக்கும், தலை முதல் பாதம் வரையிலான எல்லா நோய்களுக்கும் தீர்வு காணக்கூடிய அருமருந்துகளையும், பக்குவத்தையும், விளக்கத்தையும் தெளிவாக தமது ஏழாயிரத்தில் சொல்லி, அதை மறைக்காமல் உலகத்தில் ஒளி போல, மலையின் உச்சியில் ஒளிரும் தீபமாக நிறுத்தி, உலக மக்களுக்கெல்லாம் வாழ்வில் நோயில்லாது வாழும் ஒளியை, தந்திருப்பதை உள்ளம் மகிழ்வோடும், நன்றியோடும் வணக்கங்களை போகரய்யாவுக்கு சமர்ப்பித்து விட்டு, நமக்காக சொல்லி இருப்பதை, சித்த வைத்திய பெருமக்களின் வழிகாட்டுதலின் பேரில், செய்து வெற்றி கொள்ளலாம்! இந்த பாடலில் வேம்பும், சர்க்கரை வேம்பும் பற்றியும் சொல்லியுள்ள பாடலையும், விளக்கத்தையும் கேட்போமா?
போமப்பா இதுகடந்த பின்பு நீதான்
புகழ்பெறவே நூறாண்டு வேம்பைப் பார்த்து
ஆமப்பா பட்டையைத்தான் வெட்டி வந்து
அப்பனே நிழலிலே உலர்த்தி பின்பு
காமப்பா இடித்து நன்றாய்ச் சூரணம் செய்து
கரிசாலை மூலிகையின் சாறு வார்த்து
தேமப்பா ஏழுதரம் பாவனை செய்து
சிறப்பான வொருகடித்தூள் கொண்டி டாயோ (640)
போமப்பா இது கடந்த பின்பு நீதான், காலம் கடந்தாலும் பரவாயில்லை, இப்போது இந்த விஷயத்தை கேளப்பா! நூறாண்டுகளாக வளர்ந்த வேப்ப மரத்தைப் பார்த்து, அந்த வேப்ப மரத்தோட பட்டையை வெட்டி எடுத்துட்டு வந்து, நிழலில் காயவைத்து இடித்து, நன்றாக சூரணமே செய்து, சூரணம் செய்துன்னா பொடி செய்து எடுத்துட்டு, கரிசாலை மூலியோட சாறு, கரிசாலை மூலிகைக்கு கரிசலாங்கண்ணின்னும் வேறு பல பெயர்கள் இருக்கிறது. கரிசாலை செடியோட சாறை எடுத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி, கூடவே வேப்ப மரத்தோட பட்டையை பொடி செய்ததையும் சேர்த்துக் கலந்துட்டு, நிழல்ல நல்லா காயவச்சு எடுத்துட்டு, மறுபடியும் பொடியாக்கிட்டு, கொஞ்சமா ஸ்பூன்ல எடுத்து சாப்பிடணும்னும் சொல்லிட்டு, அடுத்ததா,
கொண்டிடவே அனுபான வகையைக் கேளு
குறிஞ்சித் தேன்குழைத்து நாற்பதுநாள் கொள்ளு
விண்டிடவே அந்திசந்தி நினைவாய்க் கொள்ளு
மெய்யெல்லாம் கருங்காலின் வயிர மாகும்
கண்டிடவே நரைதிரைக ளெல்லாம் போகும்
சுக்கிலந்தான் மேலிறுகிக் கீழோ டாது
கண்டிடவே ஆறுதளம் வெளியாய்க் காணும்
காலனுமே அஞ்சிடுவான் காணு காணே
வேப்பமரத்தோட பட்டையை நிழல்ல காயவச்சு தூளாக்கினதோட, கரிசாலை செடியோட சாறையும் சேர்த்து, கலந்து நிழல்ல காய வச்சுட்டு, மறுபடியும் தூளாக்கிட்டு எடுத்துவச்சாச்சு! சரி! அந்தப் பொடியை எப்படி சாப்பிடணும்னு சொல்றேன் கேளுப்பான்னுட்டு, குறிஞ்சி தேனில் குழைச்சு 40 நாள் சாப்பிடனும்னும் சொல்றார். 40 நாட்களுக்கு, காலையிலயும், மாலையிலும் ஞாபகமா சாப்பிட்டு வரணும். குறிஞ்சித்தேன் கிடைக்கலைன்னா பரவாயில்லை!. வீடுகளிலேயும்,பண்ணைகளிலேயும், தேனீக்களை வளர்த்துக் கிடைக்கிற தேனாக இருந்தாலும் சாப்பிடலாம்! அப்படி சாப்பிட்டு வந்தா, மெய்யெல்லாம், உடம்பெல்லாம் கருங்காலி மரத்திலே வைரம் பாய்ஞ்ச பகுதி மாதிரி இறுகிடும்னும், சுக்கிலம் இறுகி, கீழே விழாதுன்னும், வயதாகிப் போறதும், கண்களில் ஏற்படும் நோய்களும் போயிடும்னும், வானத்தில் இருக்கிற ஆறு தளத்தையும் கூட, வெட்ட வெளியிலேயே வெறும் கண்ணாலேயே பார்க்க முடியும்னும், காலனுமே அஞ்சிடுவான்! இறப்பு வருவதற்கான எந்த நோயின் அறிகுறியும் இல்லாததால், எமனே கிட்ட வர்றதுக்கு பயப்படுவான்னும், வெறும் வேப்பமரத்துப்பட்டையும், கரிசலை செடியோட சாறும், இவ்வளவு பலனைத் தருகிறது அப்படின்னா, இந்த பக்குவத்தை தினமும் சாப்பிட்டு வந்தா, உடம்பு கெட்டுப்போச்சுன்னு சொல்றதுக்கு வழியே இல்லைன்னும், சொல்லிட்டு, அடுத்ததாக,

காணவே மலைதோறும் சர்க்கரைவேம் புண்டு
காய்தின்றால் கற்கண்டு போலே தோன்றும்
பூணவே இலைதின்றால் மண்டலத்தில் சித்தி
புகழான காய்தின்றால் பட்சத்தில் சித்தி
தோணவே பூதின்றால் வாரத்தில் சித்தி
தொகுத்ததொகை சித்தருக்கு இதுவே யாகும்
ஆணவே கீழ்வழி பார்க்கு மப்பா
ஆச்சரியம் இதுதேடி அறிந்து கொள்ளே
காணவே மலை தோறும் சர்க்கரை வேம்புண்டு மலைப்பிரததேசங்களில், சர்க்கரை வேம்பு அப்படிங்கற ஒரு மூலிகையிருக்கு! அந்த சர்க்கரை வேம்பு செடியோட காயை சாப்பிட்டுப் பார்த்தால், கற்கண்டு போல இனிக்கும்னும், இலையைத் தின்றால், ஒரு மண்டலத்துக்கு இலையை கொஞ்சமா, தினமும் சாப்பிட்டு வரும் போது, உடம்புல இருக்கிற நோய்களெல்லாம் ஓடியே போகும்னும், ஆரோக்கியமான உடல் நலம் கிடைக்கும்னும், அது மட்டுமல்ல, ஓரிரு வாரத்திலேயே சித்தி கிடைக்கும்னும், சித்தர்களைப் போன்ற ஞானமும், சிந்தனையும் கிடைக்கும்னும், வாசியோகப் பயிற்சியின் போது, மூச்சையடக்கி, வாசியோகம் செய்கிறபோது, வாசியை அதிக நேரம் அடக்குகிற பலம் கிடைக்கும்னும், ஆச்சர்யப்பட வைக்கிற இந்த கருவேம்புச் செடியோட இலை, பூ காய் எதை சாப்பிட்டு வந்தாலும் உடல் நலம் தேறும்னும், பொதுவாக, இந்த கருவேம்பு செடியை சித்தர் பெருமக்கள் எப்போதுமே, தங்களது கையில் வைத்திருப்பார்களென்றும், இந்தச் செடியின் நன்மையையும், பலனையும் அறிந்ததால் தான் உடல் நலம் காக்கும் அருமருந்தாகவே எடுத்துக் கொள்வார்களென்றும், கருவேம்புச்செடியையும், வேம்பையும், போகரய்யா தமது ஏழாயிரத்தில் வேம்பும், சர்க்கரை வேம்பும் என்கிற தலைப்பில் பாடலைத் தந்தது நல்ல விஷயம் தானே!
பதிவைப் பார்த்தவர்களுக்கும், பகிர்ந்தவர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்!