( Gold Bhasma)
பணக்காரர்களும், திரை நட்சத்திரங்களும் பளபளன்னு ஜொலிக்க வைக்கிற பக்குவம்!
வணக்கம் நண்பர்களே!
அகத்தியரின் சீடரான புலஸ்தியர் சித்தர், ஒரு இரச வாதிங்கறதில் சந்தேகமே வேண்டாம்! எத்தனையோ செந்தூரங்களையும், சுண்ணங்களையும், கற்பங்களையும், மருந்துகளையும் தமது குருவின் பெயர் சொல்லும்படி செய்து, பார்த்து, மக்களுக்கு தந்திருக்கிறார்!

இந்தப்பதிவிலும் தங்கவுறம் என்கிற தலைப்பில், புலஸ்தியர் வாத சூத்திரம் 500 -ல் 83 முதல் 90 வரையிலான பாடல்களில், ‘தங்கவுறம்’ தங்க பஸ்பம் என்கிற, ஒரு அருமையான நோய் பல தீர்க்கின்ற மருந்துப் பக்குவத்தை சொல்லியிருக்கிறார். பெரிய பெரிய செல்வந்தர்களும், திரை நட்த்திரங்களுக்கு மட்டுமே கிடைக்கின்ற தங்கபஸ்பம், எல்லா மக்களுக்கும், கிடைக்கின்ற வகையில், இந்தப் பக்குவத்தை சொல்லியிருப்பது சிறப்பானது. தங்க பஸ்பம் என்றதும், தங்கம் விற்கின்ற விலையில், தங்கத்தைப் பார்ப்பதே ஒரு ஆச்சர்யமான விஷயமாக இருக்கிறபோது, தங்கத்தைப் பஸ்பமாக தயாரித்து உண்டு, உடம்பு தேறி, நோயில்லாமல் வாழ்வதென்பது நடக்காத காரியம் என்று நினைத்துக் கொண்டிருந்த போது. புலஸ்தியரய்யா சொல்லியிருக்கும், இந்தப் பக்குவத்தில், ஒரு துளிகூட தங்கம் சேர்க்காமலேயே, தங்க பஸ்பம் செய்து, உடல் ஆரோக்கியமாகவும், நோய் நொடியே வராமலும், நரம்புகளைப் பலப்படுத்தவும், ஒரு பக்குவம் சொல்லிருப்பதைப் பார்த்துவரலாமா?
ஆகுமே தங்கவுறஞ் சொல்லக்கேளு
ஆச்சரியம் யிதுவேரு முன்னேபாரு
வாகுபெறத் தங்கவுறங் கண்டபோதே
வலுவான நோய்களெல்லா மாண்டுபோகும்
பாகுபெற நோயெல்லாம் தவிடுபொடியாக
பண்பாகச் சொல்லுகிறே னுற்றுக் கேளு
தாஷ்டிகமாயிம் முறையை வைத்திடாயே (83)
தங்கவுறம் என்கிற தங்க பஸ்பத்தைப் பற்றி சொல்கிறேன் கேளுப்பா! ஆச்சரியமான இந்தப் பக்குவத்தை, முதல்ல பாருங்கன்னு சொல்லிட்டு, நல்லபடியாக தங்கவுறத்தை பார்த்ததுமே, கொடுமையான நோய்களெல்லாம், ‘ஓடியே போகும்னும், உடம்பு நல்லாகிறதுக்கும், நோய்களெல்லாம், தவிடு பொடியாக நீங்கி, குணமாகுறதுக்கும், பண்பாக பக்குவமாகச் சொல்லுகிறேன், கவனமாக கவனித்துப் பாருங்களப்பா! தைரியமாக இந்த முறையை, கற்றுத் தெரிந்துகொள்ளப்பான்னு சொல்லிட்டு, அடுத்ததா,
வைத்திடவே யின்னமொரு சேதிகேளு
வடிவாக வெள்ளீயஞ் சுத்திசெய்ய
கைத்திடவே கரண்டிதனி லுறுக்கிக்கொண்டு
கனிவாக வெள்ளாட்டு யமுரிதன்னில்
நைத்திடவே யேழுதர முறுக்கிச் சாய்க்க
நல்லசுத்தி யாயிருக்கும் நயத்துபாரு
பைத்திடவே சுத்தி செய்த யீயந்தன்னைப்
பதிவாகப் பலமாறு நிறுத்துக்கொள்ளே ( 84)
இந்த முறையில் செய்யறதுக்கு, ஒரு விஷயம் சொல்கிறேன்! முதல்ல வெள்ளீயத்தை சுத்தி செய்ய வேண்டும்! அதற்கு, வெள்ளீயத்தை 300கிராம் அளவுக்கு எடுத்துக்கனும், ஒரு பாத்திரத்தில், வெள்ளாட்டோட மூத்திரத்தை பிடிச்சு வச்சுக்கணும்! வெள்ளீயத்தை இரும்பு கரண்டியில் போட்டு, உருக்கிட்டு அப்படியே எடுத்து, வெள்ளாட்டு மூத்திரத்தில் ஊற்றி எடுக்கும் போது, வெள்ளீயம் சுத்தமாகும்னும், இதுபோல ஏழு தடவை, வெள்ளீயத்தை உருக்கி, உருக்கி வெள்ளாட்டு மூத்திரத்தில் ஊற்றி எடுத்து, வெள்ளீயத்தை சுத்தம் செய்துட்டு, சுத்தம் செய்த வெள்ளீயத்தை, ஆறு பலம் (210 கிராம்) அளவுக்கு எடுத்துக்கணும்னும் சொல்விட்டு, அடுத்ததா,
கொள்ளவே கரண்டி தனி லுறுகும்போது
குணமாக யெண் ணெய்குத்திக் குளகுளக்க
துள்ளவே சூதமது பலமு மாறு
துடிவா கயுறுகும்போ திரதம்வாறு
விள்ளவே ரெண்டுமொன்றா யுறுகி நிற்கும்
விதமாக யாறவிட்டெடுத்துக் கொள்ளு
தள்ளாமற் கல்வத்தில் போட்டுடைத்துத்
தாஷ்டிகமாய்ப் பிட்டாகுஞ் சார்ந்துபாரே (85)
வெள்ளீயத்தை சுத்தம் செய்திட்டு, ஒரு இரும்புக் கரண்டியில் போட்டு உருக்கணும்! வெள்ளீயம் உருகி எண்ணெய் மாதிரி பதத்தில் உருகி வர்றபோது, ஆறு பலம் (210 கிராம்) பாதரசத்தை விட்டு இரண்டையும் சேர்த்து உருக்கி எடுத்து, ஆறினதும் எடுத்துப்பார்த்தால், கல்லு மாதிரி இறுகிக் கிடைச்சிருக்கும். அதை உரல்ல போட்டு இடிச்சு, தூளாக்கி எடுத்துக்கணும்னும் சொல்லிட்டு, அடுத்ததாக,
பாருநீ கெந்தகந்தான் பலமுமாறு
பதிவாகச் சீனமது பலமுமாறு
காருநீ சாரமது பலமுமாறு
கனிவாக விதுவைந்தும் நிறுத்துக் கொண்டு
தாருநீ வாய்நீனர விட்டுக்கொண்டு
சாதகமாய்ச் சாமமது வரைத்துநீயும்
சாரு நீ காயவைத்துப் பின்புதானுஞ்
சரியான கை பாக வரிசைகேளே (86)
வெள்ளீயத்தையும், பாதரசத்தையும் சேர்த்து உருக்கி, கெட்டியாகக் கிடைச்ச பகுதியை உரல்ல போட்டு மாவு பதத்துக்கு, நல்லா இடிச்சுப் பொடியாக்கி எடுத்துட்டு, கெந்தகம் (Sulphur) ஆறு பலம் (210 கிராம்), சீனம் (alum) ஆறு பலம் (210 கிராம்), சாரம்(நவச்சாரம் – Sal ammoniac) ஆறு பலம் (210 கிராம்)
எல்லாத்தையும் சேர்த்து எடுத்துக்கிட்டு, கல்வத்தில் போட்டு, கொஞ்சமா தண்ணீரை ஊற்றி நன்றாக அரைக்க வேண்டும்! நல்லா மை போல அரைச்சு எடுத்ததை, நிழல்ல காயவைக்கனும், அடுத்து என்ன செய்யனும்னு சொல்லப் போகிறதை, வரிசையாகக் கேளுப்பான்னுட்டு,
வரிசையா மறைப்புட்டி குப்பி தன்னில்
வாகாக வடைத்து நீ பின்பு கேளு
உரிசையாய்க் கோணிதான் சவுக்கமாக
உகந்துமே வலுவாகச் சீலைசெய்து
நரிசையாய்க் காயவைத்து சட்டியொன்று
நலமாக நடுவிலே பொதிந்துகொண்டு
கரிசையாய்க் குப்பிதனை நடுவிலிட்டுக்
கனிவாக நாலுவிர லடியிற்றானே (87)
முதலில், ஒரு மறை இருக்கிற கண்ணாடி குப்பியை எடுத்து, அதற்குள்ளே நிழலில் காயவைத்து, அரைச்சு மாவு பதத்துக்கு எடுத்து வச்சிருக்கிற கலவையை, அந்த கண்ணாடி குப்பிக்குள்ளே போட்டு அடைச்சுட்டு, குப்பியை இறுக்கமா மூடி போட்டு மூடிட்டு, சணல் கோணித் துணியை எடுத்து, அந்த கண்ணாடி குப்பி முழுவதுமாக சுற்றிக் கட்டிட்டு, களிமண்ணையும், துணியையும் சேர்த்து நனைச் சுட்டு, அந்த கோணி சுத்தின கண்ணாடிக்குப்பி மேலே சுற்றிவிட்டு, தண்ணீர் தொட்டுப் பூசி, நல்லா காய வைச்சு எடுத்துட்டு, ஒரு அகலமான மண்பானையை எடுத்து, பானையின் மேற்புறத்தில் பாதியாக பிரித்து எடுத்து விட்டு, அடிப்பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு, அந்த மண்சட்டிக்கு நடுவிலே, கண்ணாடிக் குப்பியை வைத்து, சுற்றிலும் நாலு விரல் கனத்துக்கு, மண்சட்டிக்குள்ளே மண்ணை நிரப்பிடனும்னும் சொல்லிட்டு, அடுத்ததாக,
தானென்ற வடிதனிலே தெரியச் செய்து
தாஷ்டிகமா யுள்ளே தான் மணலையிட்டு
வானென்ற குப்பி வாய் தெரியவிட்டு
வடிவாக நால்சாமம் கமலம்போலே
கானென்ற தீயிட்டுச் சிலாக்கை யாலே
கனிவாகக் குத்தியே யெரித்துப்பாரு
நானென்ற வடுப்பாற்றி பிரித்துத் தானும்
நலமாக மெள்ளவே யெடுத்திடாயே (88)
மண்சட்டிக்குள்ளே நடுவிலே சீலை செய்த கண்ணாடிக்குப்பியை வைத்து, கண்ணாடிக்குப்பியோட வாய் பகுதியை மட்டும் வெளியில் தெரியும்படி விட்டுட்டு, சுற்றிலும் மணலைக் கொட்டிட்டு அடுப்பில் வைத்து, அதிகமான நெருப்பை எரிக்காமல், லேசான நெருப்பில் வைத்து, நாலு சாமம் எரிக்கனும்னும், நாலு சாமம்கறது, சுமாரா பத்து மணி நேரம் அடுப்பை எரிச்சு, பிறகு, சூடு ஆறினதும், சீலை செய்து, கோணியால் சுற்றியதைப் பிரித்து, கண்ணாடிக் குப்பியை மெல்ல வெளியே எடுக்கணும்னும் சொல்லிட்டு, அடுத்ததா,
எடுத்திடவே குப்பிதான் நொறுங்கிப்போகும் ஏழைமதிபோ காதே யெடுத்துப்பாரு
அடுத்துமே தங்கம்போல நிறமுமாகும்
அன்பாகத் தங்கவுறப் பொடியேகாணும்
தடுத்துநீ சீனத்தைத் தன்னில் மைந்தா
சரக்குந்தான் நாலு சேர்த்தரைத்து
விடுத்துநீ முன்போலே யெரித்துப் பார்த்தால் விதமாக வெள்ளியறப்பொடி போலாமே (89)
அடுப்பில் வைச்சு, நான் சாமம் எரிச்ச பிறகு, சூடு ஆறினதும், கண்ணாடிக் குப்பியை மெல்ல எடுக்கிறபோது, வெப்பத்தினால் கண்ணாடிக்குப்பி நொறுங்கிப் போகும்னும், பயப்படாமல், கண்ணாடிக்குப்பியோட சிதறல்களை அப்புறப்படுத்திட்டு பார்த்தால், கண்ணாடிக்குப்பிக்குள்ளே, வைத்த வெள்ளீயம், பாதரசம், கெந்தகம், சீனக்காரம், சாரம் எல்லாம் சேர்ந்த கலவையானது, தங்கம் போல நிறமாக மாறியிருக்கும்னும், அதுதான் தங்கவுறம்னு சொல்கிற தங்க பஸ்பம்னும் சொல்றார். தங்கபஸ்பம் கிடைச்சிடுச்சு! அடுத்து, சீனக்காரத்தை மட்டும் விட்டுட்டு, மத்தபடி நாலு பொருட்களான வெள்ளீயம், பாதரசம், கந்தகம், சாரம் மட்டுமே சேர்த்து, முன்பு போலவே, கண்ணாடிக்குப்பிக்குள்ளே போட்டு, அடுப்பில் வைத்து, லேசான தீயில் எரிக்கும் போது, கிடைக்கிற கலவை வெள்ளியுறமாக வெள்ளிப் பஸ்பமாகக் கிடைக்கும்னும் புலஸ்தியரய்யா சொல்லித்தர்றார். தங்க பஸ்பம் செய்தாலும், வெள்ளிபஸ்பம் செய்தாலும், இந்த முறையை கவனித்து செய்யற போது, கேட்டது கிடைக்கும்னும் சொல்லிட்டு, அடுத்ததாக,
ஓடுமே தங்கவுறங் கண்டபோதே
ஓதரிய குஷ்டமுதல் கருங் குஷ்டந்தான்
கூடுதற்கு முன்னேதான் குணமாய்வைத்து
கூடுமே கைபாக மாகச்செய்து
நலமாகச்செய்திடவே சகலசித்தி
நாடுமே யிதைவைத்து ஜீவனத்தை
தேடுநீ நவலோகந் தன்னிலீயத்
திட மாக மாத்தென்ன பத்துமாமே (90)
தங்கபஸ்பம் கிடைச்சிடுச்சுன்னா, அதனால், கொடுமையான குஷ்டம் முதல், கருங்குஷ்டம் போன்ற எல்லாவித தோல் நோய்களுக்கும், அந்த நோயின் ஆரம்பத்திலேயே, அறிகுறி தெரியும் போதே, மேலே சொன்ன முறையில் கைபாகமாக, கவனமாக தங்கபஸ்பத்தை செய்து உபயோகிக்கும் போது, நல்ல பலனைத்தரும்னும், இந்த முறையில் தங்கபஸ்பம் செய்து, வாழ்க்கையை நடத்துறதுக்கான தொழிலாகக்கூட செய்யலாம்னும், இந்த தங்க பஸ்பத்தை, நவலோகத்தோட சேர்த்து உருக்கி எடுக்கறப்போ, பத்து மாத்து தங்கமா மாறிக் கிடைக்கும்னும், புலஸ்தியரய்யா சொல்லித்தர்றார்.
ஆமேதா னனுபோகஞ் செய்யும்போது
அடவான விந்துதான் கீழ்நாடாது
தாமேதான் பெண்களெல்லாம் மயங்கிப்போவார்
தயவாகத் தங்கவுற முண்டதாலே
வாமேதான் பத்தியத்தைச் சொல் லக்கேளு
வடிவாகப் பாலண்ணம் புசித்துத்தீரு
காமேதான் பச்சை நரம் பிறுகிக்காணுங்
கனிவாக நோய்களெல்லா மோடிப்போமே
தங்க பஸ்பம் சாப்பிட்டு வர்ற போது, விந்தானது கெட்டியாகி, சீக்கிரம் வெளிவராதுன்னும், பச்சை நரம்பெல்லாம் முறுக்கேறி, உடம்பு இறுகி, ஜொலிக்கிற இளமையாகி, நோய்களெல்லாம் ஓடியே போகும்னும், இந்த தங்கபஸ்பம் சாப்பிடறபோது, பாலும் சோறும் கலந்து சாப்பிட்டு வரணும்னும் பத்தியத்தையும் சொல்லித்தர்றார். புலஸ்தியரய்யா!
தங்கபஸ்பம் செய்யுற முறையை, 2500 வருடங்களுக்கு முன்னதாகவே, இந்தியாவிலேயும். சீனத்திலும், அரேபியாவிலும் தயாரிக்கப்பட்டதாக, சொல்லப்படுகிறது. தங்க பஸ்பத்தில், பல மருத்துவ நன்மைகள் இருப்பதால், பரவலாகவே சித்த வைத்திய பெருமக்களால் பெரிதும் செய்யப்படுவதுண்டு. புலஸ்தியரய்யா சொன்ன இந்தப் பக்குவம், சரியாக, கவனமாக செய்கிறபோது, இந்த முறைகளில் சொன்னபடி செய்வதற்கு சித்த வைத்தியப் பெருமக்களின் ஆலோசனையோடும், அறிவுரையோடும், செய்து பார்ப்பது நல்லது. சித்த வைத்தியப் பெருமக்கள் சொல்லித்தந்த மருந்துகளை, அளவோடும், பக்தியோடும் எடுத்துக் கொள்வதும், உடலிலுள்ள நோய்கள் பூரணமாக குணமாகவும், உடல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் சிறப்பான பலனைத் தரும். புலஸ்தியரய்யா சொல்லித் தந்த, தங்க பஸ்பம் செய்கிற முறையை சரியாக செய்து, பலன் அடையச் செய்கின்ற இந்தப் பதிவும் நல்ல விஷயந்தானே!
இந்தப் பதிவைப் பார்த்தவர்களுக்கும், பகிர்ந்தவர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்!