அகத்தியர் சொல்லித்தந்த பித்தம் சம்பந்தமான நோய்கள் தீருவதற்கும் மருந்தாகப் பயன்தரக்கூடியது!
வணக்கம் நண்பர்களே!
அகத்தியர் தமது, பன்னிருகாண்டம் 200ல், நான்காவது செந்தூரக்காண்டத்தில், இரும்பு செந்தூரம் பற்றி விளக்கமாக பாடலாகத் தந்துள்ளார். அயச்செந்தூரம், இரும்புச் செந்தூரம், இரும்பின் சக்தியை உடலுக்கு எளிதாக தந்திடும் ஒரு காரணியென்றுகூடச் சொல்லலாம்!

இரும்புசத்து உடலிலுள்ள பல குறைகளை சரி செய்கின்ற சிறந்த பணியை செய்கிறது என்பதால் தான், சித்தர்கள் பலரும் தங்களது வைத்திய முறைகளில், அயச்செந்தூரம் செய்கின்ற முறைகளையும், பயன்களையும் பாடல்களாக தந்திருக்கிறார்கள். ‘அயம்’ என்றால் இரும்பு! ஆதித் தமிழர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இரும்பு, போர்க் கருவிகள் செய்ய மட்டுமல்ல, மனித உடலுக்கு உயிர் காக்கும், இரும்புச்சத்தின் அவசியத்தையும் அன்றே உலகுக்குச் சொன்னவர்கள்! அதனாலேயே, சித்தர்கள் பலரும், தமது பாடல்களில். செந்தூரம் பற்றிய பகுதியில், அயச்செந்தூரமான இரும்புச் செந்தூரத்தைப் பற்றி பதிவிட்டிருக்கிறார்கள். அதைப் போலவே, தாமிரத்தின் செந்தூரமும், மனித உடலுக்குத் தேவையான, தாமிரச்சத்தை அளித்திடும் சிறந்த காரணியாக விளங்குகிறது. அகத்தியரய்யா சொல்லித்தந்த, அயச்செந்தூரத்துடன், தாமிரச்செந்தூரத்தின் பக்குவமான பாடலைப் பார்த்துவரலாமா?
சாற்றக்கேள் அயலோகச் செந்தூரத்தைத்
தான்கேளு அரபொடியைப் பலந்தான்வாங்கி மாற்றில்லா நெத்தான தேங்காய் நெய்யில்
மண்டலம் வைத் திருந்தெடுத்தால் சத்தியாச்சு நாற்றமுட னூறலும்போம் கருப்புமாகும்
நன்றான அரபொடிக்குச் சரியாம்கெந்தி
போற்றரியப் பழச்சாற்ற லரைத்து வாங்கிப்
புதுச்சட்டி தன்னில் வைத்து ஓடுமூடே (2)
அயலோகச் செந்தூரமான இரும்புச் செந்தூரத்தைப் பற்றி சொல்கிறேன்! அரப்பொடியைப் பலந்தான் வாங்கி, அரப்பொடின்னா, இரும்புத்தூள்! வார்ப்பு இரும்பு தொழிற்சாலைகளில், வார்ப்பிரும்பை வடிவு செய்யும்போது, கிரைண்ட்டிங் மிஷினில் கழிவாக சிதறுகின்ற இரும்புப் பொடியை பார்த்திருக்கலாம்! அதுபோன்று கிடைக்கின்ற இரும்புப் பொடிதான், அரப்பொடி! அந்த அரப்பொடியை வாங்கிட்டு, அதிலிருந்து ஒரு பலம் 35 அல்லது 40 கிராம் அளவுக்கு எடுத்துட்டு, ஒரு பாத்திரத்தில் சுத்தமான தேங்காய் எண்ணெய் 100 கிராம் அளவுக்கு எடுத்துட்டு, அரப்பொடியை அதற்குள் போட்டு வைத்து, 48 நாட்கள் வைத்திருந்தால், அப்பொடியானது சுத்தமாக கிடைக்கும். தேங்காய் எண்ணெய்யின் வாசனை போய், அரப்பொடி கருமை நிறமானதாக மாறிக் கிடைக்கும். அப்படிக் கிடைக்கின்ற அரப்பொடியை எடுத்து, அரப்பொடியின் எடைக்கு, கெந்தி சேர்க்கணும்! (கெந்தி : Sulphur – கந்தகம்) கெந்தி என்கிற கந்தகத்தையும், அரப்பொடியையும் எடுத்து எலுமிச்சம் பழச் சாற்றை சேர்த்து, நன்றாக அரைத்து எடுத்த விழுதை, ஒரு மண்சட்டியில் வைத்து, மேலே ஒரு மண்சட்டியை வைத்து மூடி, நீளமான துண்டாக்கின பருத்தித்துணியை, ஈரமான களிமண்ணில் முக்கி எடுத்து, மண்சட்டியும், மண்மூடியும் நன்றாக சேர்ந்திருக்கும்படி, வாய்ப்பகுதியைச்சுற்றி, மண்ணால் பூசி, மெழுகி, நிழலில் காய வைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, அடுத்ததாக,
மூடியே சீலைசெய்து சாமம் நாலு
முடங்காமல் தீயெரித்து யெடுத்துப்பாரு
வாடியே திரியாதே பித்தநோய்கள்
மாண்டுபோ மிஞ்சிச்சார் மண்டலமேகொண்டால்
தேடியே அலையாதே தாம்பிரச் செந்தூரம்
செம்பினுட அரபொடியும் பலந்தான்வாங்கி
காடியுடன் புளிமலமும் ரெண்டுஞ் சேர்த்துக் கரைத்துமே அரபொடியையதிலேயிட்டே (3)
தேங்காய் எண்ணெய்யில் ஊறவைத்து எடுத்த அரப்பொடியையும், கந்தகத்தையும் சம அளவு கலந்து, எலுமிச்சம்பழச்சாற்றால் அரைத்து, மண்சட்டிக்குள் வைத்து, மூடி சீலை செய்த பிறகு, நெருப்பை மூட்டி, அதன் மேல் வைத்து நன்றாக நாலு சாமம் எரியவிட வேண்டும். நாலுசாமம்னா, சுமாரா, 10 மணி நேரம் தொடர்ந்து, நெருப்பை எரித்து, பின்பு, நெருப்பை அணைய விட்டு, மண்சட்டியைப் பிரித்து பார்த்தால், அரப்பொடியும், கந்தகமும் கலந்து, வெந்து, செந்தூரமாக மாறி இருக்கும். இப்படிக் கிடைக்கின்ற அயச்செந்தூரத்தை, சிறிதளவு எடுத்து, இஞ்சிச்சாற்றில் கலந்து 48 நாட்களுக்கு, காலையில் உண்டு வந்தால், பித்தசம்பந்தமான நோய்களெல்லாம், ஓடியே போகும் என்று அகத்தியரய்யா சொல்லித் தருகிறார்.
இரும்புசெந்தூரம் பித்த நோய்களான, தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்ற நோய்களையும் குணமாக்குகிறது.
இரும்புச்சத்து உடலில் குறைகின்ற காரணத்தால்,
உடல் பருமனுக்கும், உடல் இளைத்து போவதற்கும்கூட காரணமாகின்றது. வாதநோய்களுக்கும், வாதத்தினால் ஏற்படுகின்ற கை, கால் பிடிப்பு மற்றும், பித்தத்தால் ஏற்படுகின்ற பிரமை, உடல் நடுக்கம், எலும்புருக்கி, நேத்திரவாயு போன்ற பிரச்சனைகளுக்கும் அயச்செந்தூரம் பயன் தருகின்றது.
அயச் செந்தூரத்தை, இஞ்சிச்சாறு, துளசிச்சாறு, வெற்றிலைச்சாறு, தேன், சர்க்கரை, வெல்லம் போன்ற வெவ்வேறு பொருட்களுடன் கலந்துண்ணவும், சித்த வைத்தியப் பெருமக்களால் வெவ்வேறு வியாதிகளுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.
அயச்செந்தூரத்தில் இரும்பின் அளவு அதிகமாக இருப்பதால் பல நோய்களைக் குணமாக்கும் என்று பயன்படுத்தப்படுகிறது.
இரும்புசத்து மிக்க, காய்கறிகளும், கனிவகைகளும் நிறைய இருக்கின்றன. தொடர்ந்து, உண்டு வருகிற போது, இரும்புத்து கிடைக்கிறதென்றாலும், அதிகமான இரும்புத்து குறைபாட்டால், வருகின்ற நோய்களை குணமாக்குவதற்கு, அயச்செந்தூரம் பெரிதும் உதவுகிறது. அயச்செந்தூரத்தை, சித்த வைத்திய பெருமக்களின் அறிவுறுத்துதலின் பேரிலும், ஆலோசனையின்படியும் அவர்கள் சொன்னி முறையில், அளவில் பயன்படுத்தும் போது, நோய்கள் முற்றிலும் குணமாகி, ஆரோக்கியமாக வாழலாம்! அகத்தியரல்லா சொல்லித்தந்தது நல்லவிஷயம் தானே!
பதிவைப் பார்த்தவர்களுக்கும், பகிர்ந்தவர்களுக்கும் நன்றிகள்!