உடம்பு மெலியறதுக்கும், வலு கூடுறதுக்கும், அருமையான பக்குவம்!
வணக்கம் நண்பர்களே!
அகத்தியரய்யா தந்தருளிய வல்லாதியில் 280 முதல் 283 வரையிலான பாடலில், ‘கருங்குருவை சூரணம்’ என்கிற தலைப்பில், உடம்பை குறைச்சு வலிமையைக் கூட்டுவதற்கான பக்குவமாக சொல்லியிருக்கிறார்.

சூலை, புண்கள், கிரந்தி, தீராத வாயுவும் குணமாக்குறதுக்குமான எளிதான பக்குவம் சொல்லித் தருகிறார். எத்தனையோ மருந்துகள் சாப்பிட்டாச்சு! ஆனாலும், உடம்பை குறைக்க முடியலையே! பாக்கெட்ல இருக்குற பணம்தான் மெலியுதே தவிர, உடம்பு மெலியறதில்லையே? ஏதாவது, மருந்தை சப்பிட்டு, பக்கவிளைவாக, வேற பெரிய, பெரிய விளைவுகளும், பிரச்சனைகளும் வந்துடுமோன்னு பயந்துகிட்டு, உடம்பை குறைக்கிற விஷயத்தில் எந்த ஒரு முடிவும் எடுப்பதற்கு யோசிக்கிறீங்களா? அகத்தியர் ஐயா சொல்லித்தந்த மூணே மூணு பாட்டு தான், சட்டுனு பாத்துட்டு வந்துடலாமா?
மாதமொன்றில் நல்லெண்ணெய் முழுகலாகு
மகத்தான சூலையொடு கிரந்திதீரும்
பேதமன்றி யின்னமொரு சூரணந்தான்
பேசுகிறேன் கருங்குருவை பச்சையாக
வேதமொன்று படியரிசி கால்தானப்பா
வெற்றிலையின் சாற்றிலிட் டிரவுமட்டும்
நீதமென்ற மறுநாளிற் சாறிறுத்து
நிழலுலர்த்தி மேல்மருந்து நிகழ்த்துவோமே
மாதம் ஒன்றில் நல்லெண்ணெய் முழுகலாகும்! மாதத்தில் நல்லெண்ணெய்யை தலையிலையும் உடம்புலயும் பூசிக்கிட்டு, தலை மூழுகி வரப்போ, சூலை நோய் ஓடும்னும், கிரந்தி நோய் தீரும்னும் இருந்தாலும், இன்னொரு சூரணத்தையும் தெளிவாக சொல்லித் தரேன்னுட்டு, அதற்கு கருங்குருவை அரிசியை, பச்சரிசியா ஒரு கால் படி எடுத்துக்கணும்! கால் படி கருங்குருவை அரிசியில் அதாவது ஒரு 250 கிராம் அளவுக்கு எடுத்துக்கிட்டு, அடுத்து, ஒரு 5 அல்லது 6 வெற்றிலையை வெட்டி தண்ணீரை விட்டு, நல்லா அரைச்சு சாறு எடுத்துட்டு,

அந்த வெற்றிலை சாற்றில், கருங்குருவை அரிசியை, ஒரு நாள் ராத்திரி முழுவதும் ஊற வைத்துவிட்டு, மறுநாள் அந்த சாற்றை இறுத்து வடிகட்டிட்டு, அந்த கருங்குருவை அரிசியை நிழல்ல காய வைக்கணும்னும், அது கூடவே என்னென்ன பொருட்களைச் சேர்க்கிறது? எப்படி சேர்க்கிறதுன்னும் சொல்லித் தரேன்னு சொல்லிட்டு,
ஓமென்ற நல்லமின்னி முசுமுசுக்கை
யோரொன்று வொருபிடி வெற்றிலைதானெட்டு
நாமென்ற நிழலிலிட்டுச் செருக்கச் செய்து
நன்றாக சூதனமுடன் தூக்கிச்சேர்த்து
தாமென்ற வெற்றிலைச்சாற் தன்னைவிட்டுத்
தான்முறித்து எல்லாமொன் றாகச்சேர்த்து
ஆமென்று இடித்துமைபோல் தூளதாக்கி
யப்பனே நிழலுலர்த்திக் கலசத்தாக்கே
உருண்டையான நல்ல மின்னிப்பயறையும், முசுமுசுக்கை செயோட இலையையும் எடுத்துக்கனும்! இந்த மின்னிப் பயறுக்கு, காட்டு பயறுன்னும் கூட சொல்றது உண்டு!

பெரிய கடைகளில் இந்த மின்னி பயிறு கிடைக்க வாய்ப்பு இருக்கு, கொஞ்சமாக ஒரு 20 கிராம் அளவுக்கு எடுத்துக்கிட்டு, முசுமுசுக்கை செடியையும் ஒரு கைப்பிடி, அதுவும் ஒரு 20 கிராம் அல்லது 25 கிராம் அளவுக்கு எடுத்துக்கிட்டு, வெற்றிலையில் ஒரு எட்டு வெற்றிலையா எடுத்துக்கிட்டு, எல்லாத்தையும் நிழல்ல காய வச்சுட்டு பொடியாக்கிட்டு, சூரணமாக எடுத்து சேர்த்துக்கிட்டு, முன்னமே சொன்ன வெற்றிலை சாற்றில் ஊற வச்சு, நிழலில் காய வச்சு எடுத்த கருங்குருவை அரிசியோட சேர்த்து இடிச்சு பொடியாக்கி எடுத்தா, அதுதான் கருங்குருவை அரிசி சூரணம்னு சொல்றார் அகத்தியர் ஐயா! இந்த சூரணத்தை பத்திரமாக பாத்திரத்தில் போட்டுக்கணும்னும் சொல்லிட்டு,
கலசமது புதிதாகு மதிலேயிட்டு
கழற்சிக்காய்ப் பிரமாணம் நாளொன்றுக்கு
நிலைபசுவின் தயிர்தன்னில் குழைத்துநன்றாய்
நீயுருட்டிக் கொடுபத்தியந் தயிறுஞ்சோறாம்
நலமாக விருபத்தோர் தினமுந்தானும்
நல்காதே புளிப்புகையுந் தூரத்தள்ளு
பிலமாக வுதிரமது வதிகங்கண்டால்
பிரியமுடன் தயிர்வெல்லஞ் சேர்க்கப்போமே
பாத்திரத்தில் போட்டு வைத்திருக்கிற கருங்குருவை அரிசி சூரணத்தை எடுத்து, ஒரு கழற்சிக்காய் அளவுக்கோ அல்லது, ஒரு சின்ன இலந்தைப்பழம் அளவுக்கோ எடுத்து, பசுந்தயிரில் போட்டு குழைச்சு எடுத்து, ஒரு நேரம் காலைலையோ, அல்லது ராத்திரியிலேயோ சாப்பிடணும்னும், அப்படியே 21 நாளைக்கு தினமும் ஒரு நேரம் சாப்பிட்டு வரணும்னும், இந்த சூரணத்தை சாப்பிட்டு வரப்போ பக்குவமா இருக்குறதுக்கு, தயிர் சாதம் மட்டும் சாப்பிட்டு வரணும்னும், புளிப்பும், புகையோ, காரமோ கூட சேர்த்துக்க கூடாதுன்னும், இந்த கருங்குருவை சூரணத்தைச் சாப்பிட்டு வர போது, மலத்தோடு ரத்தம் கலந்து வந்துச்சுன்னா, தயிரோடு வெல்லம் சேர்த்து சூரணத்தை சாப்பிடணும்னு கேட்டுக்கிட்டு, அடுத்ததா,
தூரப்போம் யேரண்டத் தெண்ணெய்சேர்த்து
சுகமாகுங் குளிர்ந்த சலந்தன்னில் மூழ்கு
பாரிப்போம் பத்திமுழு கப்பாசொன்னேன்
பறக்குமடா சூலைபதினெட்டுப்புண்கள்
சாரிப்போங் கிரந்திபதினெட்டுந் தீருந்
தனியாத வாய்வெல்லாந்தான் கெட்டோடும்
பூரிப்போ முடம்புரிக்கிப் பிலக்குஞ் சொன்னேன்
பேசாதே லுத்தர்களே யின்னங்கேளே
ஏரண்டத் தயிலம்னா, விளக்கெண்ணெய்யைத்தான் சொல்றது! விளக்கெண்ணெய்யைத் தலையில் தேய்ச்சுக்கிட்டு, குளிர்ந்த தண்ணியில குளிக்கணும்! நல்லா உடம்பு நனையிற மாதிரி குளிக்கணும்னும், இப்படி செய்றபோது சூலை நோயும், 18 வகையான சூலை நோயும், புண்கள், கிரந்தி நோய்கள் அத்தனையும் குணமாகும்னும், தனியாத வாயுவும் ஓடியே போயிடும்னும், உடம்பு இறுகி, உருகி பலமாகிடும்னும், உடம்பு இன்னும் இளைக்கலையேன்னு வருத்தப்பட்டு, இன்னும் பேசுவீங்களான்னும் அகத்தியரய்யா கேட்கிறார்.
கருங்குருவை அரிசி எடுத்துட்டு வந்து வெற்றிலை சாற்றுலே ஒரு ராத்திரி பூராவும் கருங்குருவை அரிசியை போட்டு ஊற வச்சு, மறுநாள் காலையில வெற்றிலை சாற்றை வடிகட்டி எடுத்துட்டு, நிழல்ல காய வச்சுட்டு அடுத்ததா, மின்னிப் பயறும் ஒரு 20 கிராம் அளவுக்கும், முசுமுசுக்கை செடி ஒரு கைப்பிடி அளவுக்கும், கூடவே ஒரு எட்டு வெற்றிலையையும் எடுத்து நிழல்ல காய வச்சுட்டு, காயவைத்து எடுத்திருக்கிற கருங்குருவை அரிசியையும் சேர்த்து இடிச்சு, பொடியாக்கி சூரணமா எடுத்துக்கிட்டு, 21 நாளைக்கு தினமும் ஒரு தடவை, சிறு உருண்டை அளவுக்கு எடுத்து, பசுந்தயிர்ல கலந்து சாப்பிட்டு வரணும்னும், அப்படி சாப்பிட்டு வருகிறபோது, பத்தியமாக புளிப்பும், புகையும், காரமும் சாப்பாட்டுல சேர்த்துக்கக் கூடாதுன்னும், கருங்குருவையரிசிக் சூரணம் சாப்பிட்டு வர்ற நாட்கள் ல ஒரு வேளை மலத்தோடு ரத்தமும் கலந்து வர்ற மாதிரி இருந்ததுன்னா, தயிரோட வெல்லம் சேர்த்து சாப்பிட்டால், ரத்தம் வருவது நின்று விடும்னும் சொல்லிட்டு, சூலை நோய்கள், கிரந்தி புண்கள், தீராத வாயுத்தொல்லையும் குணமாகி, உடம்பு இறுகி, எடை குறைத்து, உடலும் வலுவாகி ஆரோக்கியமா இருக்கலாம்னும் கருங்குருவையரிசி சூரணத்தைப் பற்றி அகத்தியரய்யா அருமையா சொல்லித்தந்தது நல்ல விஷயம் தானே!
பதிவைப் பார்த்தவர்களுக்கும், பகிர்ந்தவர்களுக்கும் கோடானுகோடி நன்றிகள்