பெரியாரைத் துணைக்கோடல்
திருமூலர் தந்தருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம்!
வணக்கம் நண்பர்களே!
சித்தர் பெருமக்களின் வரிசையில் மூத்தவராகவும், மூதறிஞராகவும் விளங்குகின்ற திருமூலர் நாயனார் தந்தருளிய பத்து தந்திர பாடல்கள் வரிசையில், இரண்டாம் தந்திரத்தில் தந்தருளிய, பெரியாரைத் துணைக்கோடல் பாடலின், பொருளையும், விளக்கத்தையும், திருமூலரை வணங்கி விட்டு, பதிவு செய்ய விரும்புகிறோம்! மிகவும் எளிமையாக இனிய தமிழில் இந்த பாடல்களைத் தந்திருக்கிறார். எத்தனையோ தமிழ் சான்றோர்கள் படித்து, ரசித்து, பொருளுரை வழங்கச் செய்த அழகுத் தமிழ் திருமந்திரத்தில், பெரியாரைத் துணைகோடல் பற்றிய பாடல்கள், இன்றைய இளைய தலைமுறையினர்க்கும், எதிர்கால சந்ததியினருக்கும், வாழ்வை நிறைவுபடுத்தச் சொல்லுகிற தந்திரமாகவே இருக்கிறது. பெரியார் யார்? எதற்காக பெரியார்களை துணைக்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்? பெரியாரோடு ஏன் சேர வேண்டும் என்பதையும், இனிய உவமையோடு, எளிமையான உட்கருத்தோடும் சொல்லப்பட்டிருக்கிற பாடலைப் பார்த்துவரலாமா?
543. ஓடவல் லார்தம ரோடு நடாவுவன்
பாடவல் லாரொலி பார்மிசை வாழ்குவன்
றேடவல் லார்க்கருள் தேவர்பி ரானொடுங்
கூடவல் லாரடி கூடுவன் யானே. (1)
ஓட வல்லார் தமரோடு நடாவுவன், ஓட வல்லார் என்பதை ஓதவல்லார் என்று பொருள் எடுத்துக் கொண்டால், இறைவனின் பெயரை எப்போதும் உச்சரித்துக் கொண்டேயிருப்பவர்கள், உரைத்துக் கொண்டேயிருப்பவர்களோடு, இறைவனானவன் கூடவே வருவான் என்றும், ஓடவல்லார் என்பதற்கு, கோயில் கோயிலாகத் இறைவனைக் காண்பதற்கு ஆவலாய் ஓடுகின்ற எளிய மக்களோடு எப்போதும் இறைவன் கூடவே நடந்து வருவான் என்றும், பாடலில், இசையில், இனிமையான பேச்சில் வல்லவர்களோடு அவர்கள் தருகின்ற இசையாக, இசை மொழியாகவே இறைவன் வாழ்ந்து வருகிறானென்றும், றேடவல்லார்க்கருள், இறைவன் எங்கேயிருக்கிறான்? என்ற கேள்வியோடும் அன்போடும், ஆவலோடும் காணும் இடங்களிலெல்லாம் இறைவனைத் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கும், இறைவன் ஒருவனேயென்று, எந்த உறவும், எந்த சொந்தங்களும், பணமும், ஆள் பலமும் இல்லாத, யாருமே உதவாத நிலையில் வாடுகின்றபோது, இறைவனே காப்பாற்று! இறைவன் மட்டுமே தம்மை காப்பாற்றுவான்! என்று முழு நம்பிக்கையோடு, தன் தலைமேல் கையை உயர்த்தி, வணங்கி நிற்கின்ற ஏழை மக்களின் துயர்களைத் துடைத்தெறிகின்ற இறைவனை, தமது உயிராகவே கருதி, வணங்கி, எல்லாம் அவனேயென்று நன்றியோடும், அன்பு செலுத்துகின்ற வல்லோருக்கும், பெரியாருக்கும், இறைவன் உடனே கூடவே வந்து உதவுவான் என்றும், இறைவனே அன்பு செலுத்துகின்ற, இறைவனோடும், பக்தியோடும், அன்பார்ந்த பெரியவர்களோடும், அவர்கள் சொன்ன நல்ல அறிவுரையையும், கருத்தையும் துணையாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும். அப்படிப்பட்ட பெரிய உள்ளங்கொண்ட அடியவர்களோடு சேர்ந்து விட வேண்டுமென்றும் சொல்லிவிட்டு,
544.தாமிடர்ப் பட்டுத் தளிர்போற் றயங்கினு
மாமனத் தங்கன்பு வைத்த திலையாகு
நீயிடர்ப் பட்டிருந் தென்செய்வாய் நெஞ்சமே
போமிடத் தென்னொடும் போதுகண் டாயே. (2)
தாமிடர்ப் பட்டுத் தளிர்போற்ற றயங்கினு, இடர்பட்டு, துன்பப்பட்டு, அடிபட்டு, வெட்டுண்டு, துவண்டு கிடக்கின்ற போதும், துளிர்க்க முயல்கின்ற தளிர் போல துன்பப்பட்டுக் கொண்டிருந்தாலும், மாமனத் தங்கே, மனதிற்குள்ளே இறைவன் மேல் அன்பு வைத்ததை, அன்பு வைப்பதை மறந்துவிட்ட போதும், இடர்பட்டிருந்தாலும், என்ன செய்வாய் நெஞ்சமே, துயரைத் துடைக்க வேண்டிப் போகின்ற இடத்திலாவது, இனிமேலாவது, இறைவனை நாடுகின்ற போது, இத்தனை துயர்களையும், இடர்களையும், இறைவனானவன் பார்த்துக்கொள்வான் என்று நம்பிக்கையோடு, அன்போடு இறைவனைப் பணிந்து விட்டால், இதுவரைக்கும் பட்ட துன்பமும், வேதனைகளும், துயரமெல்லாம் துடைத்தெறியப் படும்போது, காணுகின்ற இடங்களிலெல்லாம் இறைவனை நினைத்த நொடியிலேயே, இறைவனைக் காணத்தான் போகின்றாய் மனமே என்று சொல்லிவிட்டு,
545. அறிவா ரமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர் சிவதத் துவத்தை
நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்
பெரியா ருடன்கூடல் பேரின்ப மாமே. (3)
அறிவாரமரர் தலைவனை நாடிச், யாரை, எவரை, எப்படிப்பட்டவரை நாடிச்செல்லவேண்டுமென்று அறிவுடையோர்க்கு மட்டுமே தெரியும்! கூட்டமாகச் சென்று, இவர் இன்ன சாதிக்காரர், இன்ன மதத்துக்காரர், பெரிய பணக்காரர், நிலமும், பொன்னும், பொருளும் மிகுதியாக வைத்திருப்பவர்கள், மிகவும் கவர்ச்சியானவர்கள், கவர்ச்சியாகப் பேசக் கூடியவர்கள், அழகானவர்கள், சிவப்பானவர்கள் என்ற சில குறுகலான தரத்தை மட்டுமே வைத்துக் கொண்டிருப்பவர்களை அறிவுடையோர்கள் அறிந்து கொண்டு, விலகி நின்று விடுவார்கள். அறிவுடைய சான்றோர்கள், அன்பு கொண்டவர்களையும், ஒழுக்கத்தோடும், உயர்வான எண்ணத்தோடும், மனிதம் என்கிற நேயத்தை உயர்வாகக் கொண்டவர்களும், இல்லாது பிறந்த ஏழைகளெல்லாம், மாறாத அன்பு கொள்ளுகின்ற இறைவன் ஒருவனைத் தவிர, வேறு அமரர்கள் இங்கே இல்லையென்பதை அறிந்து கொண்டு, அந்த அமரனான இறைவனை நாடிச் செல்வார்கள் என்றும், அப்படி, நாடிச் செல்லுகிறபோது, அன்புயென்கிற, அமைதியென்கிற சிவத்தை, அன்பின் தத்துவத்தை உணர்ந்து கொள்ளும் போது, அறிவின் துணையோடு, இறையினை அறிந்து கொண்டு, இறைவனின் அருள் கிடைக்கச் செய்கின்ற பெரியவர்களுடன், பெரியாருடன் சேருவது பேரின்பமானது என்று சொல்லிவிட்டு,
546. தார்சடை யான்றன் றமரா யுலகினிற்
போர்புகழா வெந்தை பொன்னடி சேருவர்
வாயடை யாவுள்ளந் தேர்வார்க் கருள்செய்யுங்
கோவடைந் தந்நெறி கூடலு மாமே. (4)
தார்சடை யான்றன் றமரா யுலகினிற், தார் சடை என்பதற்கு, வாழைத் தார்போல சீரான வரிசையில், அழகாக வடிவான சடையைக் கொண்ட இறைவன், என்று எடுத்துக்கொண்டாலும் சரி! அண்ட, பேரண்டங்களையும், வரிசையாகச் சுற்றிச் சுழலுகின்ற கோள்களையும், தன் சடைக்குள் அடக்கியாளுகின்ற இறைவன் என்று கருத்தில் கொண்டாலும் சரிதான்! அந்த இறைவனை, தலைவனாகக் கொண்ட அமரமான உலகத்தில், போர்புகழா வெந்தை, எதிர்க்கின்ற பேர்களே இல்லாத புகழுக்குச் சொந்தக்காரனான, எல்லாம் வல்ல இறைவனின் பொற்பாதங்களைச் சரணாகதி அடைந்தவர்களோடும், அதாவது, இறைவனைத் தலைவனாகக் கொண்ட, அமரர்கள் குழுமியிருக்கிற, சேர்ந்திருக்கிற அறிவுலகத்தில் இறைவனைத் தேடிச் சென்று, இறைவன் மேல் அன்பையும், நம்பிக்கையையும், அவனின் பொற்பாதங்களில் வைத்து, அவனோடு சேந்து விட்டவர்களையும், வாயடையாவுள்ளந் தேர்வார்க் கருள் செய்யும், என்றுமே அடைக்காத, அன்பான வாசல் கொண்ட, அருள் மழை பொழிகின்ற இறைவனைத் தேர்ந்தெடுத்தவர்களின் அன்பான, பண்பான, பகுத்தறிவான இறையன்போடு வாழ்கின்ற பெரியவர்களுடன், சேருவதே சிறந்த நெறியாகும் என்று சொல்லிவிட்டு,
547. உடையா னடியா ரடியா ருடன்போய்ப்
படையா ரழன்மேனிப் பதிசென்று புக்கேன்
கடையார நின்றவர் கண்டறி விப்ப
வுடையான் றருகென வோலமென் றாரே (5)
உடையா னடியா ரடியா ருடன் போய், அன்புடையவன், அருளுடையவன், கருணையுடையவன் பேரரறிவாளனான இறைவனின் அடியார்களின், அடியார்களுடன் கூட்டமாகப்போய், பொன்மேனியனின் அருள் உருவை, ஒளிமுகத்தை தரிசிக்க வேண்டி கோவிலுக்குள் சென்ற போதும், கூட்டதில் கடைசியாக நின்று இறைவனின் அருள் முகம் காண்பதற்குக் கிடைக்குமோ? என்று, ஏங்கி நின்று கொண்டு வணங்குபவர்களுக்கு, இன்னும் கொஞ்சதூரம், கொஞ்சதூரம் தான்! என்று, செல்லும் பொருட்டு, இறைவனின் நாமத்தை உரக்கச் சொல்லி, உற்சாகப்படுத்தி, இறைவனைக் காண்பதற்கு காத்திருக்கின்ற காலத்திலும், அடியார்களின் மனதில், இறைவனின் நாமத்தையே உரக்கவே காதில் படும் வண்ணம் சொல்லிச் சொல்லி, நம்பிக்கையோடு இறைவனைக் கண்டு மனம் குளிர சொல்லி அருள் பெறச் செய்கின்ற பெரியவர்களோடும் சேரவேண்டுமென்றும் சொல்லிவிட்டு,
548. அருமைவல் லான்கலை ஞாலத்துட் டோன்றும்
பெருமை வலோன்பிற விச்சுழி நீந்து
முரிமைவல் லானுணர்ந் தூழி யிருக்குந்
திருமைவல் லாரொடுஞ் சேர்ந்தனன் யானே (6)
அருமைவல் லான்கலை ஞாலத்துட் டோன்றும், எல்லாம் வல்ல இறைவனின் பிரமிக்க வைக்கும், வியக்க வைக்கும், பேருலகையே ஆட்டுவிக்கும் கலையில் வல்லவனான, பெருமைமிகு இறைவனைப் பணிந்து, அன்பும், பக்தியும் கொண்ட அடியவர்களாகி, இறைவனின் அருளால் கிடைத்த இந்த பிறவியில், ஒழுக்கத்தோடும், நற்பண்புகளோடும், மக்களோடும், மற்ற உயிர்களோடும் அன்போடும், இரக்கத்தோடும், பகுத்தறிவு கலந்த பக்தியோடும், இந்தப்பிறவியின் பயனை அறிந்து வாழ்ந்து, இனிமேல் பிறவி என்கிற வினை தீர்த்து, இறைவனையே எக்காலத்தும் நினைவில் உணர்ந்திருக்கும் பெருமைமிகு பெரியார்களோடு உண்மையோடு சேர்ந்துகொண்டேன் என்றும், திருமூலர் நாயனார் சொல்லித் தருகிறார்.
பெரியாரை, பெரியவர்களை, அவர்களின் கற்றுணர்ந்த கருத்தோடும், கலையோடும், வாழ்வியலின் நிறையோடும் துணைகொண்டு, இறையின் மேலும், அன்போடு, மகிழ்ச்சியோடு, வாழ்வதற்கு பொருள் செய்கின்ற துறையின் மேலும், தொழிலின் மேலும், ஒழுக்கத்தோடும், நேர்மையுடனும், உயர் பண்போடும், எல்லோரும் சமம் என்கிற உன்னதமான நோக்கோடும், மனிதநேயத்தோடும் வாழ்ந்து, இப்பிறவிப் பணியை நிறைவாக செய்து, உலகில் மறவாத பெயர் பெற்று, நிலையாக வாழ்கின்ற பெரியவர்களின் அனுபவத்தையும், ஆற்றலையும் துணையாகக் கொண்டு, அந்த பெரியாருடன் சேர்ந்து வாழ்வதே, முழுமையான நல்ல வாழ்க்கை என்று திருமூலர் நாயனார் நமக்கெல்லாம் திருமந்திரமாகச் சொல்லித்தந்தது, நல்ல விஷயம் தானே!.
பதிவைப் பார்த்தவர்களுக்கும், பகிர்ந்தவர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்!