கெற்ப முண்டாக மருந்து

தன்வந்திரி பகவான் அருளியது

வணக்கம் நண்பர்களே!

தன்வந்திரி பகவான் தமது வைத்திய காவியத்தில் கெற்பம் உண்டாக மருந்து என்கிற தலைப்பில், 307வது, மற்றும் 308வது பாடல்களாக, இரண்டு பாடல்களைத் தந்திருக்கிறார்.

குழந்தை பாக்கியம் என்பதும், மானுடப் பிறப்பு என்பதும்,  அளவில்லாத ஆனந்தத்தை அள்ளித் தருகிற அருள் கொடை என்றே சொல்ல வேண்டும்.  எவ்வளவு  பணமும், வீடும், நிலமும், ஆடை, ஆபரணங்களும், எண்ணிலடங்காத பொருட்களும் கிடைத்திருந்தாலும், குழந்தைகள் தருகின்ற ஆனந்தத்திற்கு அளவேயில்லை! மகளிருக்கு, கர்ப்பம் சம்பந்தமான குறைபாடுகள், மனதிற்கு எவ்வளவு துன்பத்தைத் தரும் என்பதை அந்த துன்பத்தை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்! அந்தக் குறைபாடுகளில், கர்ப்பக் கோளில், கிருமிகளின் பெருக்கத்தால், கர்ப்பம் தரிக்க முடியாத சகோதரிகளுக்கு, தன்வந்திரி பகவான் எளிய மருத்துவ பக்குவம் சொல்லித் தருகிறார்! பக்குவ முறைகளை பார்த்து, தெரிந்து கொண்டு, சித்த வைத்திய பெருமக்களின், ஆலோசனையோடும், அறிவுரையின் படியும், கடைபிடித்து வரும் போது, கர்ப்பம் தரித்து, குழந்தை பாக்கியம் கிடைக்குமென்றும், தன்வந்திரி பகவான் சொல்லித் தந்த பாடலைப் பார்த்து வரலாமா?

வாறான மங்கையர்கள்கெற்பமாக
வறையுறேன் பசும்பாலு வசம்புதானும்,
நீறானவிழுதியிலை மூலிதானும்
நிலையான குப்பமேனி சமனாய்க்கூட்டி,
காறான பால்தனிலே குழம்பியேதான்
கனமாக விருவேளை கொண்டாயானால்,
சேறான கிருமியது அற்றுப்போகும்
செனிக்கு மேபிள்ளையது செனிக்கும்பாரே  (307)

குழந்தைப்பேறு எப்போது கிடைக்கும்? என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிற மங்கையர்கள், கர்ப்பம் கொள்வதற்கு இந்த பக்குவத்தைச் சொல்லுகிறேன்! பசும்பாலும், வசம்பு தானும், விழுதியிலை மூலிகையையும், குப்பைமேனி மூலிகையையும் சம அளவு எடுத்து, காலை, மாலை இருவேளைகளிலும் எடுத்துக்கணுமாம்!

அதாவது, ஒருநாளைக்கு, ஒரு வேளைக்கு, இந்த பக்குவத்தில் சாப்பிடறதுக்கு,  பசும்பால் கால் லிட்டர், பெரிய டம்ளருக்கு வர்ற மாதிரி எடுத்துக்கிட்டு, வசம்பு பொடி பண்ணிட்டு, இரண்டு ஸ்பூன் அளவுக்கும்,  விழுதியிலை மூலிகையை எடுத்து,  நிழலில் காய வைத்து, அரைச்சுப் பொடியாக்கி, இரண்டு ஸ்பூன் அளவுக்கும் எடுத்துட்டு,  அதே போல, குப்பைமேனி செடியையும், நிழலில் காயவைத்து, அரைச்சுப் பொடியாக்கி, இரண்டு ஸ்பூன் அளவுக்கும் எடுத்துக்கலாம்! விழுதியிலையை, காய வைக்காமலேயே, அரைத்து சாறு எடுத்தும்,ஒரு சின்ன டம்ளரில், அரை டம்ளர் அளவுக்கும், அதே போல, குப்பைமேனி செடியையும், காய வைக்காமலேயே, அரைத்து சாறு எடுத்துட்டு, ஒரு சின்ன டம்ளரில், அரை டம்ளர் அளவுக்கும் எடுத்துக்கலாம்.  விழுதியிலைச் சாற்றையும், குப்பைமேனி இலை சாற்றையும்,சம  அளவுக்கும் எடுத்துட்டு, வசம்பை பொடியாக்கிட்டு, 2 ஸ்பூன் அளவுக்கு எடுத்துட்டு, பசும்பாலில் கலந்து தினமும், காலை உணவுக்கு முன், வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வதும், மற்றும் இரவு  உணவுக்குப் பின்னும், தொடர்ந்து மூன்று நாட்களுக்கோ, அல்லது ஆறு நாட்களுக்கோ எடுத்துக் கொள்ள வேண்டும். கர்பப்பையில் இருந்துகொண்டு, கர்ப்பத்தைத் தடுக்கின்ற கொடுமையான  கிருமிகள் தொலைந்து போய், கர்ப்பம் தரித்து, குழந்தைப்பேறு உண்டாகும் என்று சொல்லிவிட்டு, அடுத்ததாக,

செனிக்குமது பிள்ளையது பிறக்கும்பாரு
தெளிவாகும் திரேகமது கலைக்கும்பாரு,
கனிக்குமே யிந்தமுறை பொய்யாதையா
கானியி லாருந்தான் சொல்லமாட்டார்,
வனிக்குமே முறையோடே செய்தாயானால்
மகாகோடி புண்ணியங்க ளெய்தும்பாரு,
பனிக்குமேயிக் காவியமதீத வித்தைப்
பாடினோம் தன்வந்திரி பாடினோமே  (308)

செனிக்குமது பிள்ளையது பிறக்கும் பாரு!
கர்ப்பம் தரிக்கும்! குழந்தை பிறக்கும்! உடம்பு சீராகும்! திரேகம், உடம்பில், தேகத்தில் பொலிவு உண்டாகும்! இந்தப் பக்குவம் பொய்யாகாது! இது போன்றதொரு பக்குவத்தை இந்த உலகத்தில் யாருமே சொல்லியிருக்க மாட்டார்கள். பக்குவத்தில் சொன்ன முறைகளை, சரியாக, கவனமாக, நம்பிக்கையாக, உறுதியாக செய்து சாப்பிட்டா, மகாகோடி புண்ணியங்களும், குழந்தைச் செல்வமும்  கிடைக்கும்! இந்தப் பக்குவம், காவியச் சிறப்புமிக்க கர்ப்பம் உருவாக்கும்  இந்த வித்தையை, தன்வந்திரி பகவான்  இந்த உலக மக்களுக்கு பாடியதாகச் சொல்லுகிறார்.

கர்ப்பக் கோளாறுகளைச் சரிசெய்து, குறைதீர்க்கின்ற  பக்குவங்களையும், மருந்துகளையும், சித்தர் பெருமக்கள் நிறையவே சொல்லியிருக்கிறார்கள். சரியான பக்குவத்தையும், மருந்துகளையும், தங்களின் குறைகளுக்கேற்ப, விவரமாக, தெளிவாக, சித்த வைத்தியர்களிடம் சொல்லி, அவர்களின் அனுபவத்தோடு தருகின்ற அறிவுரையையும், ஆலோசனையையும் கேட்டு, கர்ப்பக் கோளாறுகளைச் சரிசெய்து, நிச்சயமாக குழந்தை பாக்கியம் பெறலாம்! தன்வந்திரி பகவான் சொல்லித்தந்த பக்குவமும் நல்லவிஷயம் தானே!

பதிவைப் பார்த்தவர்களுக்கும், பகிர்ந்தவர்களுக்கும் கோடானுகோடி நன்றிகள்!

Leave a comment