இப்படி கிடைக்குமா?
திருவள்ளுவநாயனார் கற்பம் 300
விருத்தம் 29 வது பக்கம்
வணக்கம் நண்பர்களே!
கல்யாணம் செய்து கொள்ள பெண் பார்க்கப் போறீங்களா? இதைப் பார்த்துட்டு பெண் தேடினால், கிடைக்கிற பெண்ணால் வாழ்க்கை சிறப்பாக இருக்குமென்றும், பெண் இப்படி இருந்தால், திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று, மணமாகப் போகும் மணமகன்களுக்குச் சொல்லித் தருகிறார்,

ஆண்களின் வாழ்வில் முன்னேற்றமும், மகிழ்ச்சியும், பெருமையும், பெண்களால்தான் பெற முடியும் என்பதை மனதில் கொண்டே, மணம் செய்யப்போகும் ஆண்மக்களுக்கு, அன்பான, அழகான, வாழ்க்கை அமைந்து, நீண்ட ஆயுளுடனும், பல்லாண்டு காலம் நிறைவான வாழ்க்கை வாழ்வதற்கு, ஏற்ற மணமகளை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்லித்தருவதாக இந்த பாடல் வரிகள் அமைந்துள்ளன. பாடலைப் பார்த்து வரலாமா?
பாரிலே பிறந்த கன்னி வடிவுள்ளாளாய்
பண்புடனே வந்துதித்த காமரூபி
நேரிலே அவதரித்த மூலத்தாய்தான்
நேர்மையுடன் ஓங்காரத் துள்ளுதித்துத்
தாரிலே வன்னியேனும் வலையறுத்துத்
தகைமைபெற சிவாயமென வைத்து நீயும்
ஊரிலே கருணைகொண்ட மூலப்பெண்ணை
உண்மையுடன் காணுதற்கு வகையைக்கேளே
பாரிலே பிறந்த கன்னி, உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு மகளிரும் தமக்கே உரிய வடிவோடும், பண்புகளோடும் அழகு தெய்வங்களாகவே வந்து பிறக்கின்ற போது, அந்த பெண் உயிர்கள், ஓங்காரத்துள் உதித்தெழுந்து, அக்னியின் ஜூவாலை வலைகளை அறுத்தெரிந்து பிறவியெடுக்கின்ற ஒவ்வொரு பெண்ணின் பிறப்பும், பூமியில் சந்ததிகளைத் தோற்றுவிக்கும், மூலத்தின் தாய் தானென்றும், உருகொடுத்து, உயிர் கொடுக்கும், மூலக் கருவறைகளைத் தாங்கி நிற்கும் பெண்குலத்திற்கு, அந்த பரம்பொருளான இறைவனே தனக்கிணையான, சரிபாதி இடம் கொடுத்து, தன் அம்சமாகவே மகளிருக்கு அருள் செய்ததை மனதில் வைத்து, தனக்கான பெண்ணை வாழ்வின் துணையாக்கிக் கொள்ள விழைகிறபோது, ஊரிலே கருணை கொண்ட மூலத்தாயை, மூலப் பெண்ணை துணைகொள்வதற்கு, உண்மையுடன் அவர்களைக் கண்டு, வாழ்க்கைக்கு உடன் அழைத்து கொள்வதற்கான வகையைச் சொல்கிறேன் கேளுங்களப்பான்னு சொல்லிட்டு, அடுத்ததா,
வகையான வாலையுந்தான் பிள்ளையாகி
வந்துந்தன் னுடப்பிறப்புச் சீஷனாகி
நகையான குருவாகித் தாய்தானாகி
நலமான வேதைப்பெண் தானுமாகி
சிகையான பெண்ணாகி நீசப்பெண்ணாய்
சேருதற்கு அரிதரிது மிகவுநன்று
பகையான பெண் ணாகா நல்லபெண்ணாய்ப்
பார்த்துநீ அவளோடு கூடிவாழே
வகையான வாலையுந்தான் பிள்ளையாகி, மூலத்தாய்க் குலத்தில் பெண்ணாய் பிறந்து, தமக்காகப் பிறந்தவளாகி, நல்ல சீடனாகி, நன்மைகள் பல கற்றுத்தருகின்ற குருவுமாகி, தாயாகவுமாகி, நலம் செய்கின்ற பணிப்பெண்ணும் போலாகி, சிறந்ததொரு குணவதியான, குணம் நிறைந்த பெண்ணாகி, கூடவே, இருந்து, நல்லதுக்கும் கெட்டதுக்கும், நோயுற்ற காலத்திலும், துன்பப்படுகின்ற காலத்திலும், துணையாக வருகின்ற தோழியாகி, வாழ்நாள் முழுதும் கூடவே வருகின்ற, வாழ்க்கைத் துணையாளை, சேர்வதென்பது அரிதரிது மிகவும் அரிதானதுதான்! இன்னும் சொல்வதென்றால், இவர்களுள் பகையான, கோபம் கொள்பவளாக இருக்கின்ற பெண்களை விட்டுவிட்டு, பெண்ணாக, நல்ல குணமும், நல்ல மனமும் நிறைந்த பெண்ணாகப் பார்த்து, இறைவனின் அருளால் கிடைத்த பெண்ணாக எண்ணி, அவளைத் திருமணம் செய்து கொண்டு, நீண்ட நெடுங்காலம் இணைந்து வாழ்ந்து இன்பம் சேருங்கள் என்று சொல்லிவிட்டு, அடுத்ததாக,
கூடிவாழ்ந் திருப்பதற்கு வகையைக் கேளு,
குலப்பெண்ணு தானாகும் பரவாயில்லை
தேடியே சா திவகை பார்க்கவேண்டாம்
சிற்பரையி னருளாலே கிடைத்தபெண்ணை
நாடியதோர் அகார உகாரத்தில்நாட்டி
நலமான தேவிபதம் பூசைசெய்து
நீடியதோர் பூரணத்தில் மனதைநாட்டி
நீணிலத்தி லிருக்கும்வரை உண்டுதேரே
கூடி வாழ்ந்திருப்பதற்கு வகையைக் கேளு, மூலத்தாயான குலத்தில் அவதரித்த எந்தப்பெண்ணையும் திருமணம் செய்து கொண்டாலும் நல்லது! எனவே, தேடித் தேடி, சாதியையும், வகையையும் பார்க்கவேண்டாம்! பரம்பொருளின் அருளாலே கிடைத்த பெண்ணை, மனமகிழ்ச்சியுடன், மனநிறைவுடன், அன்பு காட்டி அரவணைத்து, வாழ்க்கையின் துணையாக்கிக் கொண்டு, அகாரத்திலும், உகாரத்திலும் வாசியை நாட்டி, அம்பிகையாம் தேவியவள் பாதம் பூசை செய்து, நீண்ட ஆயுளை அள்ளித்தரும், இறைவன்மேல் பக்தியை மனதில் நாட்டி, இப்பூவுலகில் வாழ்கின்ற காலம் வரைக்கும், இன்பத்தையும், இறையருளையும், இன்பமான வாழ்க்கைத் துணையோடு அனுபவியுங்கள்! என்று திருவள்ளுவ நாயனார் சொல்லித் தருகிறார்
ஏன் பெண்கள் மட்டும் இப்படி யெல்லாம் இருக்க வேண்டும்? ஆண்களுக்கு இப்படியெல்லாம் இருக்க ஒன்றுமே சொல்லவில்லையா? என்றுகூட கேட்கத் தோன்றும்! பொதுவான குணங்கள், ஆணுக்கும், பெண்ணுக்குமாகச் சமமாகவே சொல்லப்பட்டிருக்கிறது. எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்று, ஆணுக்கும், பெண்ணுக்கும் தெரியாததல்ல! ஆண்மகனால் தேர்ந்தெடுக்கப்படும் பெண்ணும், பெண்மகளால் தேர்ந்தெடுக்கப்படும் ஆண்களும், சமூகத்தின் கட்டமைப்புக்கும், இன்பமான வாழ்க்கை வாழ்வதற்கும், யாரை யார் சார்ந்திருக்க வேண்டுமென்பதும் தெரியாததல்ல! நல்ல பண்பும், குணமும், அன்பும் கொண்ட ஆண்மகனுக்கு, அவனைப் போல பண்பும், குணமும், அன்பும் உள்ள பெண், மணப்பெண்ணாய் அமைய வேண்டுமென எதிர்பார்ப்பதும், கோருவதும் இயல்புதான்! இந்த எதிர்பார்ப்பும், கோரிக்கையும் பெண்மக்களும் வேண்டுவதுதான்! ஆண்மகனின் கோரிக்கைகள் எவ்வளவோ, அவ்வளவும் பெண்மகளாலும் கோரப்படும் என்பதை நினைவில் கொண்டு மணமுடிப்பதும், நல்ல இன்பமான வாழ்க்கையை அமைத்துத் தரும் என்பதில் சந்தேகமேயில்லை! அன்பைக் கொடுத்து வாழ்வதும், அன்பைக் கெடுத்து வாழ்வதற்கும், இடையில் துணைக்கால் தான் பாலமாக இருக்கிறதென்றால், துணையே பலமாக இருக்க வேண்டும். அந்த அன்புத் துணைக்காக, எதையும் விட்டுக் கொடுத்து வாழ்வதிலும் நிறைவான இன்பம் இருக்கிறது. பண்பைக் கெடுத்து விட்டு, அன்பை எதிர்பார்பதும், அடக்கி வைத்து அன்பை பெற முயற்சிப்பதும், அடங்கி அன்பை ஏற்றுக் கொள்வதும், நிலையான நீண்டகால இன்பமான வாழ்வு தரும் என்பது கேள்விக்குறிதான்!
வாழ்க்கை நிறைய பாடங்களையும், பக்குவங்களையும் சொல்லிக் கொடுக்கும். சார்ந்து வாழ்வதென்பதை விட, சேர்ந்து வாழ்வதற்கு மனமும், குணமும், ஒன்றியிருப்பதை ஒருவருக்கொருவர், உணர்ந்து கொண்டு, புரிந்துகொண்டு, வாழ்வதும் நிறைவான வாழ்க்கை அமைவதற்கும், அமைத்துக் கொள்வதற்கும் சரியான துணையைத் தேர்ந்தெடுக்கவும், ஆண்மகனுக்கானது மட்டுமல்ல, பெண்மகளின் தேவையையும், மனதையும், புரிந்து கொள்ளவும் ஒரு தூண்டுகோலாக அமைவதற்காகச் சொல்லித்தரப்பட்ட பாடலாக, திருவள்ளுவ நாயனாரின், இந்தப் பாடலின் வரிகள் எந்த நூற்றாண்டில் சொல்லப்பட்டிருந்தாலும், இன்றைய காலகட்டத்திலும் வேண்டியிருக்கிறது என்பதும் நல்லவிஷயம்தானே!
பதிவைப் பார்த்தவர்களுக்கும், மற்றவர்களோடு பகிர்ந்தவர்களுக்கும் கோடானுகோடி நன்றிகள்!