சட்டமுனி கற்பவிதியில் சொன்னது!
வணக்கம் நண்பர்களே!
பெரிய வைத்திய கோவை என்னும் தொகுப்பில், அண்டகற்பம் என்கிற தலைப்பில் மூன்று பாடல்களாக சட்டமுனி சித்தர் தந்தருளியுள்ளார். கருங்கோழி முட்டையை சரியான பக்குவத்தில் செய்து சாப்பிட்டு வரும் போது, உடம்பு கல்தூண் மாதிரி வலுவாகிடும்னும், விந்து கீழே விழாம இறுகி, ஆரோக்கியமா, சந்தோசமா இருக்கலாம்னும், ரொம்ப எளிமையான பக்குவத்தில் சொல்லியிருக்கிறார்.

கோழிகளின் இனத்தில், கருமையான நிறத்தில் இருக்கிற, கோழி வகை ஒன்று இருக்கிறது! இன்றும் கூட கிராமங்களில் இந்த வகை கோழிகளை வளர்த்து வருகிறார்கள். இந்த வகை கோழிகள் உணவுக்கும், மருந்திற்கும் மிகவும் பயன்படுகின்றன. சட்டமுனி சித்தரைப் போன்ற பல சித்தர் பெருமக்களும், கருங்கோழியை தமது மருந்து பக்குவத்தில் சொல்லியிருக்கிறார்கள். இத்தனை சித்தர் பெருமக்களும் கருங்கோழியையும், முட்டையையும் பற்றிச் சொல்லியிருக்கிறதைப்பார்க்கும்போது, உண்மையிலேயே கருங்கோழியில் ஏதோ மகத்துவம் இருக்கத்தான் வேண்டும்மென்று எண்ணத் தோன்றுகிறது. பாடலைப் பார்த்துவரலாமா?
பாடினதோர் கற்பத்தை கடந்தபின்பு
பார்மைந்தா அண்டத்தின் கற்பஞ்சொல்லே நீடினதோர்கருங்கோழி சாவலுடன் பேடு
நிலையாக வளர்த்ததின் முட்டையெல்லாம்
ஊடினதோர் கல்லுப்புக் குள்ளேவைத்து
வுத்தமனே கல்லுப்பு மேலேமூடித்
தேடினதோரிரண்டு திங்கள் கடந்தபின்பு
சிவசிவா அண்டமெல்லாங் கட்டிப்போச்சே
முதல் பாடலில், கருங்கோழியோட முட்டையில் கற்பம் செய்கிற பக்குவத்தை சொல்லியிருக்கிறார். முதலாவதாக, கருங்கோழியும், கருங்கோழி சேவலும், சேர்ந்து வளர்கின்ற இடங்களில் கிடைக்கிற, கலப்பினமில்லாத முட்டைகளாக பார்த்து, எடுத்துக்கிடனும். கருங்கோழியோட முட்டைகள் கருமை நிறத்தில் இருக்காது. இலேசான வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும்!

அடுத்ததா, ஒரு வாயகன்ற மண் பாத்திரத்தில், கல்லுப்பைப் போட்டு, அந்த கல்லுப்புக்கு இடையில், கருங்கோழி முட்டைகளை வைத்து கல்லுப்பால் நிரப்பி, மூடி வைத்து விட வேண்டும். அப்படியே இரண்டு மாதங்கள் கழிந்த பின்பு மூடியைத் திறந்து, கல்லுப்புக்குள் வைத்த கருங்கோழி முட்டைகளை எடுத்துப் பார்த்தால், முட்டைகளெல்லாம் கட்டிப்போயிருக்கும்னும் சொல்கிறார். அடுத்த பாடலில்,
கட்டியதோரண்டமெல்லா மெடுத்துக்கொண்டு கைமுறையாலைக்கெருடனுட கிழங்குச்சாற்றில்
மட்டியதோ ரண்டமிட்டி ரண்டுசாமம்
வாகாகயெடுத் தெரித்து வைத்துக்கொண்டு
தட்டியல்லோ மேலோடு தள்ளிப்போட்டுச்
சாதகமாய்த் தினமொன்று அண்டமொன்று
துட்டியல்லோ யிரண்டாகிப் பேர்பாதிகொள்ளு
துயர் தீருஞ்சுகமாகக் கொள்ளுகொள்ளே
கல்லப்புக்குள்ளே இரண்டு மாசம் வச்சு எடுத்த கருங்கோழி முட்டையெல்லாம், கட்டிப்போயிருக்கும்னும் சொன்னோம்! அந்த கட்டிப் போன கருங்கோழி முட்டைகளையெல்லாம் எடுத்து வச்சுக்கிட்டு, ஆகாசக்கருடன் கிழங்கை வாங்கி. வெட்டி சாறு எடுத்துட்டு,

(ஆகாச கருடன் கிழங்கு, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். குறிப்பாக, வீடுகளில், திருஷ்டிக்காக வாசலில் கட்டித் தொங்க விடுவதும் உண்டு.)
அந்த சாற்றை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் ஒரு முட்டையைப் போட்டு, இரண்டு சாமம் அடுப்பில் வைத்து எரித்து, அவித்து எடுக்கணும்! அப்படி அவித்து எடுத்த முட்டையோட ஓட்டை, தனியே எடுத்து தூரப்போட்டு விட்டு, முட்டையை சரிபாதியாக வெட்டி எடுத்துட்டு, ஒரு பாதி காலையிலயும், இன்னொரு பாதி மாலையிலயும் தினமும், ஒரு முட்டை வீதமா சாப்பிட்டு வந்தால், உடலிலுள்ள அத்தனை துன்பங்களும் தீர்ந்து விடும்னும் சொல்லிவிட்டு, அடுத்ததா,
கொள்ளப்பாயிருபதுநாள் காயந்தானுங்
குறுகாது நெடுகாது கற்றூணாகும்
விள்ளப்பா சுக்கிலத்தைக் கட்டிநிற்கும்
மேலேற்று மல்லாது கீழோடாது
துள்ளப்பா யடங்கிற்றுக் காமவித்தை
சகபோகஞ்செய்தாலும் விந்துவீழா
தள்ளப்பா யிவ் வளவிற் சன்னமாகச்
சட்டைபோஞ் சட்டைபோஞ் சாதித்தேறே
எத்தனை நாளைக்கு இப்படி கருங்கோழி முட்டையை, அவித்துச் சாப்பிடனும்னும், அதனால் என்னென்ன பலன் கிடைக்கும்னும் சொல்லித்தர்றார். கருங்கோழி முட்டைகளை கல்லுப்புக்குள்ளே வைத்து விட்டு, இரண்டு மாதத்திற்குப் பிறகு கட்டியாகிப் போனதும் வெளியே எடுத்து, பத்திரப்படுத்தி வச்சுட்டு, தினமும் ஒரு முட்டை வீதம் எடுத்து, ஆகாசக் கருடன் கிழங்குச் சாற்றில் போட்டு அவித்து எடுத்துட்டு, அந்த முட்டையை, சரிபாதியாக வெட்டி காலையிலேயும், மாலையிலேயும் ஒரு இருபது நாளைக்குத் தொடர்ந்து, சாப்பிட்டு வந்தால், உடம்பு குறுகாது, பெருக்காது, அப்படியே கல்தூண் போல் ஆகி விடுமென்றும், விந்து கட்டியாகிடும், அதனால் மேலே ஏறிப்பாயும்! கீழே வழிந்து விடாதுன்னும், இந்த கருங்கோழி முட்டைக் கற்பத்தாலே, உடம்பு ஆரோக்கியத்தால் பளபளன்று தேஜஸ் கூடிக் கிடைக்கும்னும், சட்டமுனி சித்தர் சொல்லித்தர்றார்!
கருங்கோழி முட்டையை, சாதாரண முட்டை மாதிரி நினைச்சுக்கக் கூடாது! ஒருகாலத்தில், கோழி முட்டையெல்லாம் நினைச்சதும் கடையில் போய் வாங்கறதுக்குக் கிடைக்காது. இதில் நாட்டுக்கோழி முட்டைகூட கிடைக்கறதும் கஷ்டம்தான்னு இருந்துச்சு! இப்போது, எந்த முட்டையையும், வாங்கறதுக்கான வசதிகள் வந்திருச்சு! கருங்கோழி முட்டைகளை இனிமேலாவது கவனமாக, பார்த்து வாங்கிட்டு, சட்ட முனி சித்தரைய்யா சொன்னது போல, பக்குவமாகச் செய்து சாப்பிட்டு வந்தால், உடம்பு கல்தூண் போல் ஆகிடும்னும், உடம்பு ஆரோக்கியம் தானாகவே வந்துடும்னும் சொல்லித்தந்தது, நல்ல விஷயம் தானே!
பதிவைப் பார்த்தவர்களுக்கும், பதிவை மற்ற நண்பர்களோடு பகிர்ந்தவர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்!