உடலைத் தேற்றும் உன்னதமான உப்பு!

சட்டமுனி சித்தர் சொன்ன இந்த உப்பை விஞ்ஞானிகள் பரிசோதனை செய்து பார்த்தால் நல்லது!

வணக்கம் நண்பர்களே!
சட்டமுனி சித்தரய்யா கற்ப விதியில் சொல்லித்தந்த 57 முதல் 59 வரையிலான மூன்று பாடல்களில், உண்ணுகின்ற அன்னத்திலும், உணவுப் பண்டங்களிலும், சுவைக்காக சேர்க்கப்படுகின்ற உப்பு எப்படியிருக்க வேண்டும்? எப்படியிருந்தால் உடலுக்கு நன்மை தருமென்பதையும், உப்பை கற்பமாக செய்து உண்ணுகின்ற பக்குவத்தை சொல்லித் தருகிறார்.

உண்ணுகிற உணவில் உப்பு பிரதானமானது! சுவைக்காக
மட்டும் உப்பு உதவுவதில்லை, உடலுக்கும் தேவையான ஒன்று! சட்டமுனி சித்தர் சொன்ன இந்த உப்பு பற்றிய பக்குவத்தை உணவு பற்றியும், உப்பு பற்றியும் ஆராய்ச்சி செய்கின்ற பெருமக்களும், சித்த வைத்திய ஆராய்ச்சி செய்கின்ற பெருமக்களும், சித்தரவர்கள் சொன்ன பக்குவத்தில், கிடைக்கின்ற உப்பு பற்றிய தகவல்களை ஆராய்வதோடு, மக்களுக்கு தெரிவிக்கவும், அதனால் உலக மக்கள் நலம் பெற்று, ஆரோக்கிய பயன்பெறுவதற்கும் அரிய வாய்ப்பாக அமையும்! சட்டமுனி சித்தர் சொன்ன பாடலுக்குள் போகலாமா?

பண்ணப்பா யன்னத்தி லுப்பொடுங்க
பாடுகிறே னாதாக்கள் பாடாதெல்லாம்
கண்ணப்பா யண்டமைந்து கல்வத்திட்டுக்
கல்லுப்பு பலம்பத்து மதிலேபோடு
விண்ணப்பா வெடியுப்பு பலந்தானைந்து
மேவியதோர் நவாச்சாரம் பலந்தான் ரெண்டு
ஒண்ணப்பா சீதமது பலந்தான் மூன்று
வொக்கான்றாயரைத்துலர்த்த மெழுகுமாடும் (57)

சோற்றிலே உப்பை சேர்த்து உண்பதற்கு, யாரும் சொல்லித்தராத பக்குவத்தை சொல்கிறேன்! கேளப்பான்னுட்டு, முதலாவதாக, ஒரு கல்லுரலை எடுத்துக்கணும்! ஐந்து முட்டைகளை உடைத்து ஊற்றிட்டு, சாதாரண கல்லுப்பு பத்து பலம், பத்து பலம்னா சுமாரா 350கிராம் அளவுக்கும், வெடியுப்பு ஐந்து பலம், சுமாரா 175 கிராம், வெடியுப்புக்கு ஆங்கிலத்தில் saltpetre அல்லது nitre என்று பெயர். நவச்சாரம் இரண்டு பலம், சுமாரா 70 கிராம் அளவுக்கும், நவச்சாரம் என்றால் ஆங்கிலத்தில் “அம்மோனியம் குளோரைடு” (ammonium chloride) அல்லது “சால் ஆமினியாக்” (sal ammoniac) என்றும் சொல்லப்படுகிறது. சீதமதுன்னா, குளிர்ந்த தண்ணீர் அல்லது புளித்த காடித் தண்ணீர்னும் (toddy)  அர்த்தப்படுத்திக்கலாம். தண்ணீர் மூன்று பலம், சுமாரா 95 மில்லி அளவுக்கும் எடுத்துட்டு, ஒன்றாகப் போட்டு அரைச்சு எடுத்தா மெழுகு பதத்துக்குக் கிடைக்கும்னும் சொல்லிவிட்டு, அடுத்ததா,

மெழுகெடுத்துப் பாறையுப்பை யுடைத்துப்பூசி வெய்யிலிலே யுலரவைத்துக் காய்ந்தபின்பு
உழுகெடுத்த ஊஷரத்தை சீழ்மேலிட்டு
ஓடிலேமூடி நன்றாய்ப் புடத்தைப்போடு
நழுகடுத்துப் போகாது உப்புகட்டும்
நலமாக வுடைத்தவாய் வயிரமின்னும்
தழுகெடுத்த வுப்பையல்லோ கரிசோத்திலிட்டுச்
சாப்பிடவே மிகநன்றுசாப்பிடாயே (58)

மெழுகு பதத்துக்கு வந்ததும், பாறையுப்பை எடுத்து உடைச்சு தூளாக்கி, அந்த மெழுகோட சேர்த்து பிசைந்து, உருட்டி உருண்டைகளாக்கி, வெயிலில் காயவைக்கணும்!
வெயில்பட்டு, உருண்டைகள் நன்றாக காய்ந்ததும்  எடுத்து, அந்த உருண்டைகளை, உழுகெடுத்த ஊஷரத்தை, அதாவது, ஈரமான உலர்மண் அல்லது களிமண்ணால் கவசம் போல பூசி காயவிட்டு, எரு வரட்டிகளை அடுக்கி வைத்து, அதன் மேல் காய்ந்த உருண்டைகளை வைத்து, நெருப்பை மூட்டி எரிய விட்டு, மண்சட்டி மூடியாலே மூடிவைத்து,புடம் போட வேண்டும்னும்,  எருவரட்டியெல்லாம், எரிந்து சாம்பலாகி, ஆறினதும் புடம் போட்டு எடுத்த உருண்டைகளை உடைத்துப் பார்த்தால், உப்பாகக் கட்டிப் போயிருக்கும்னும்
கவனமாக உருண்டைகளை உடைத்துப் பார்க்கும் போது,  உப்பு வயிரம் போல மின்னும்னும், அந்த உப்பை எடுத்து,  குழம்பில், அன்னத்தில் இட்டு சாப்பிட்டால் மிகவும் நல்லதென்றும் சட்டமுனி சித்தரய்யா சொல்லிவிட்டு, அடுத்ததாக இந்த உப்போட பயனையும் சொல்லித்தருகிறார்.

சாப்பிட்டா லிந்தவப்புச் சட்டைதள்ளும்
சமாதிக்கு உருவமைந்த மாதிறக்குமய்யா
கூப்பிட்டா லுன்மத்தாய் வாவாவென்பாள்
கூசாதே கட்டோடே மேலேபேற்றும்
வேப்பிட்டய முரியிலே யிறங்காதுப்பு
யிதுவுமொரு கற்பமுமா யிருக்குந்தோஷ [றால் வாய்ப்பட்டகொழுப்பாலே பச்சையுப்பைத்தின்
வாய்த்திருத்தி சித்தியெல்லா மண்ணாய்ப்போமே (59)

இப்படி தயாரித்த உப்பை சாப்பிட்டு வர்ற போது, உடம்பு இறுகி, நீரெல்லாம் வெளியேறி உடம்பு கல்தூண் போல் வலிமையா இருக்கும்னும், சமாதிநிலையை அடைந்தாலும் உடம்பு கெட்டுப்போகாதுன்னும், பக்தியோடு அம்பாளை துதித்தாலும், அந்த அம்பிகையே அன்போடு, வாவாவென்று அழைப்பாளென்றும், நோய்களும், பிணியும் கிட்டவே நெருங்காமல் உயரத்தில் அமர வைக்குமென்றும், வேறு எந்த உப்பும், இந்த உப்பு போல வராது, அவ்வளவு சிறப்பான உப்புன்னும் சொல்லிட்டு, விளையாட்டாக, வாய்க் கொழுப்பில் இந்த உப்பை எடுத்து வெறுமனே தின்றால், கிடைத்த உடல் நலமும், ஆரோக்கியமும், சித்தியும் வீணாகிப் போகும்னும் சொல்லித்தர்றார். உணவோடு கூட சேர்த்து கலந்து உண்ணாமல், வெறும் உப்பை மட்டும் எடுத்து உண்பது கூடாது என்றும், சட்டமுனி சித்தரய்யா கற்பமான உப்பாக, மருந்தான உப்பாக, இந்த உப்பு இருக்குமென்று உறுதியாகச் சொல்லித்தருகிறார்.

உண்மையாகவே இந்த உப்புக்கு மகத்தான ஆரோக்கியத்தை மக்களுக்கு அளிக்குமென்றால், இது போன்ற உப்பை தயாரித்து, முறையாக ஆய்வு செய்து, இந்த உப்பின் பலனையும், ஆரோக்கியத்தையும் மக்களுக்குத் தந்துதவ, நம் தாய் நாட்டின் பெருமைமிகு விஞ்ஞானிகளால் முடியும் என்பதில் சந்தேகமில்லை!
சட்டமுனி சித்தரய்யா சொல்லித்தந்த உப்பு நல்ல விஷயம் தானே!


இந்தப் பதிவைப் பார்த்தவர்களுக்கும், பகிர்ந்தவர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்!

Leave a comment