பசலைக் கீரை அகத்தியரய்யா சொல்லித்தந்த பக்குவம்!

வணக்கம் நண்பர்களே!
அகத்தியரய்யா எந்த பாடலைச் சொன்னாலும், அது மக்களுக்கு ஏதாவது விதத்தில் பலன் கொடுக்கிற மாதிரியான பொருட்களையோ, பக்குவத்தையோ தான் சொல்லுவார்! அதே போல கற்பமுப்புக்குரு நூல் என்கிற நூலில், 48 முதல் 55 வரையிலான, இந்தப் பாடலிலேயும் பசலைக்கீரையைப் பற்றி சொல்லிட்டு, பசலைக்கீரையோட பலனாலே, பிரம்மன் எழுதி அனுப்பியிருக்கிற தலையெழுத்தையும் மாற்றிடலாம்னு சொல்லித்தர்றார்.

பசலைகீரையின் வகைகள்:

பசலைக்கீரையில், குத்துப்பசலை, தரை பசலை, கொடிப்பசலை, சிவப்புப் பசலைன்னு பல வகைகள் உள்ளன. பசலைக் கீரைக்கு (Green spinach) என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது.

பசலைகீரையின் நெய்:

அருமையான, மிக எளிமையான பக்குவத்தில் பசலைக் கீரை நெய்யின் பலனை அகத்தியரய்யா சொல்லியிருப்பதைப் பார்க்கலாமா?

மதியமுத முண்டாக்கால் காயசித்தி
வல்லாரை கொண்டாக்கா லெல்லாஞ்சித்தி
உதவுகின்ற விதுரெண்டு முண்டாயானால்
உள்ளபடி கற்பமுறையுனக்கேகிட்டும்
ததிகாலம் வந்தாக்காற் பார்த் துவாங்கி
சங்கையிலாதே புசித்தாற் சித்தனாவாய் உதயாதியானாக்கால் மெத்த நன்று
உத்தமனே மாலையென்றால் பட்சம்ரெண்டே. (48)

மதியமுர்த லேகியம்ன்னு சித்தர் பெருமக்கள் பலரும் செய்து மக்களுக்கு தந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட மதியமுர்த லேகியம் சாப்பிட்டா காயசித்தி கிடைக்கும்னும், வல்லாரை சாப்பிட்டு வந்தா எல்லாமே சித்தியாகும்னும், இரண்டையும் சாப்பிட்டு வந்தால் கற்பத்தோட பலனெல்லாம் ஒன்று சேர்ந்து கிடைக்கும்னும், சரியான காலம் வரும் போது, இவைகளை பார்த்து வாங்கி, சந்தேகமேயில்லாமல் சாப்பிட்டால் சித்தனாவானென்றும், காலையில் எடுத்துக் கொள்வது மிகவும் நன்று! மாலைவேளையென்றால் இரண்டாம் பட்சம் தான் என்று சொல்றார். இதை எதுக்காகச் சொல்லணும்னு கேட்கலாம்! அடுத்து வர்ற பாடலுக்குத் தொடர்பிருக்குது! அடுத்ததா,

பட்சமென்றால் நல்லதடா பார்த்துவாங்கு
பசளையென்று பேராச்சு பாவிமக்காள்
அச்சமொன்றும் நினையாதே கோரைபோக்கி அருந்திடுவாய் வாளாலே அறுத்துவல்ல
எச்சான கல்லுரலிற் பசளைபோட்டு
இருப்புலக்கை யதனாலே இடித்துக் கொண்டு மெச்சுமிந்த பானையிலே தோண்டும்போது
மேலானவமுரி படிநாலுவாரே     (49)

பசலைகீரையை தெரிந்து கொள்ள வேண்டும்:

வல்லாரைக்கீரையை இரண்டாம் பட்சமென்று சொன்னாலும், நல்லதுதான் சாப்பிடலாம்! நல்லதா பார்த்து வாங்கு! அதற்கும் பசலைன்னு ஒரு பெயரிருக்குது? அதனாலே, பசலைக்கீரையான்னு தெரிஞ்சுகிட்டு, இல்லேன்னா, தெரிஞ்சவங்களிடம் காண்பித்து தெரிந்து கொண்டு பசலைக்கீரையை வாங்கிக் கொள்ளவேண்டும். பசலைக்கீரையைப் பார்த்து ஒரு கீரைக் கட்டு அளவு வாங்கிட்டு, பயப்படாமல், வேரை மட்டும் வெட்டி எடுத்துத் தூரப் போட்டுட்டு, வெறும் இலையை மட்டும் எடுத்து நறுக்கி, கல்லுரலில் போட்டு, இரும்பு உலக்கையாலே இடிக்கணும்னு சொல்றார். இந்தக் காலத்தில், ஆட்டு உரலிலோ, மிக்ஸியிலோ அரைச்சு எடுத்துக்கலாம். அப்படி அரைச்சு எடுக்கறப்போ, உப்பு கலந்த நீர் ஒரு டம்ளர் ஊற்றி அரைச்சு எடுக்கணும்னும் சொல்லிட்டு,  அடுத்ததா,

நாலுபடி அமுரிவிட்டு அடுப்பிலேற்றி
நலமான பசளைக்கிப் பாதிசூடம்
மேலுமதைப் பொடித்துவதில் கலக்கி நல்ல
விநாயகர்க்குப் பூசைபண்ணி அனலைமூட்டி
பாலடுப்புப் போலாக அனல்மீறாமல்
பத்திரமாய்ப் பிடியாமற் றுடுப்பாற்கிண்டு
வாலுகை யாமடுப்போடே இருக்கும்போது
மளமளென்று கொதியெழும்பிவருமே நெய்யே (50)

பசலைகீரை நெய் செய்வது எப்படி?

பசலைக்கீரையை அரைச்சு எடுத்து, உப்புத்தண்ணீரையும் கூடச்சேர்த்து பாத்திரத்தில எடுத்து வைத்திருக்கறதோட, கொஞ்சமா பச்சைக்கற்பூரத்தை பொடி பண்ணி கூடச் சேர்த்து கலந்துட்டு, அடுப்பில் வைத்து, விநாயகருக்கு பூசை போட்டு, நெருப்பை மூட்டி சிறு தீயா அடுப்பை எரியவிட்டு, பத்திரமா பாத்திரத்துக்கு அடியில் பிடிக்காம லேசாக கிண்டனும்னும்! அடுப்பில் வச்சிருக்கிற பாத்திரம் சூடாகி, பசலைக்கீரையும், உப்புத் தண்ணீரும், பச்சைக் கற்பூரமும் சேர்ந்து கொதிக்கும் போது நெய்யா வருமாம்! அடுத்து என்ன சொல்றார்னு பார்க்கலாமா?

வருகிறதைப் பதம்பாரு கடுகின்மேலே
வருகுமடா நெய்மிதக்கும் வடித்து வாங்கு
முருகாமற் புஷ்டியெல்லாம் வேறேவாங்கு
முளிக்காதே யிரண்டுமொன்றாய்ச் செய்திடாதே
நிருவான பூசையது நினைவாய்ச்செய்து
நீங்காத சிவயோக நிஷ்டைகூடும்
பெருவாழ்வு பெருகுவர் இதையிரண்டும்
பிசகாமற் பீங்கானிற் பதனம்பண்ணே (51)

நெய் போல கொதிச்சு மளமளன்று வர்ற நெய்யை, கரண்டியில் எடுத்து நெய் பதத்துக்கு வந்திருக்கிறதான்னு பார்த்து, அப்படி நெய்யா மிதக்கிறதை கலக்கிடாமல் கரண்டியில் வடித்து எடுத்து தனியா பத்திரப்படுத்திக்கணும்! பாத்திரத்தில் தங்கியிருக்கிற பசலைக் கீரையெல்லாம், கருகிப் போயிடாமல் எடுத்து அதையும் தனியே எடுத்து வச்சுக்கணுமாம்! நெய்யையும், கீரை பிப்பியையும் கலக்காம தனித்தனியே வச்சுட்டு, மனதை ஒரு நிலைப்படுத்திட்டு, பூசை பண்ணிட்டு, சிவயோக நிஷ்டையோடு பீங்கான் பாத்திரத்தில் தனித்தனியே எடுத்து பத்திரப்படுத்திக்கணும்னும் சொல்லிட்டு அடுத்ததா,

பதனம்வெகுபதனமடா சூதானந்தான்
பத்திரமாய் வைத்தபின்பு பாகங்கேளு
விதமென்ன வீரமொடு சாரஞ்சேர்த்தால்

மேலானகற்பமடா விண்கொள்ளாது
அதுவென்ன இதுவென்னவென்றுயெண்ணி

அலையாதே மலையாதே ஐயாஐயா
விதியென்ன இதுதாண்டா அறிவாய் நீயும்
வெளிவிடாதே யிருந்தால் வேதையாமே (52)

பசலைக்கீரையில் கிடைத்த நெய் சாதாரணமான பொருளல்ல! கவனமாக பக்தியாக தயரித்து எடுத்து வைத்த பசலை நெய்யினால், இன்னும் பலவிதத்தில் பாகம் செய்யலாம்னும், சொல்லிட்டு, இப்படி தயாரித்த பசலை நெய்யோடு பலவிதமான தாதுப்பொருட்களையும், பருப்பு வகைகளையும், வீரத்தையும், சாரத்தையும் சேர்த்து செய்யலாம்னு நினைச்சுக்கிட்டு, இதைச் சேர்க்கலாமா? அல்லது அதைச் சேர்த்திருக்கலாமோ? அப்படின்னு அலையாதீங்க! மலைச்சுப் போயிடாதீங்க! சந்தேகமேயில்லாமல் இந்த கற்பம் வானத்தை விட உயர்ந்ததுன்னும், இது தான் விதின்னு நினைக்காமல், இது தான் சரியானதென்று உறுதியா இருப்பா! இந்த பக்குவத்தை கேட்பதற்கே விருப்பமில்லாதவர்களுக்கும். கேட்டுட்டு கேலி செய்கிறவர்களுக்கும், இந்த பசலைக்கீரையோட அருமையைத் தெரியாதவர்களிடமும், வெளியில் சொல்லாம இருக்கறதே நல்லதுன்னும் சொல்லிட்டு, அடுத்ததா,

ஆமென்ற ரேசகபூரகந்தான் பண்ணு
அசையாமற் கும்பகத்தில் நின்றுகொண்டு தாமென்றதைலத்தை கரண்டிவீதம்
சாதகமாய்ப் புஷ்டிநெல்லிக் காயின்வீதம்
ஓமென்ற இருவேளை கொள்வதற்கு
உண்மையுடன் சொல்லுகிறேன் நன்றாய்க்கேளு காமென்ற காலையிலே தைலமுண்ணு
கடந்தபின்பு மாலையிலே புஷ்டிகொள்ளே(53)

பசலைக்கீரையை எப்படி செய்து சாப்பிடவேண்டும்?

அமைதியாக மனதிற்குள்ளே ஓம் என்று சொல்லியபடி,  ரேசகமும், பூரகமும் செய்வதோடு, அசையாமல் கும்பகத்தில் இருந்து கொண்டு வாசியோகம் செய்து வருவதோடு, தயாரித்து வைத்திருக்கும் பசலை நெய்யை ஒரு கரண்டி அளவுக்கும், பசலை கீரையை ஒரு நெல்லிக்காய் அளவுக்கும், ஒரு நாளைக்கு இருவேளைக்கும் சாப்பிடறதுக்கு சொல்லித்தர்றேன் கேளுப்பான்னுட்டு, காலையில் பசலை நெய் எடுத்துக்கலாம், மாலை வேளைகளில் பசலை கீரையை சாப்பிடலாம்னும், தினசரியும் சாப்பிட்டுக்கிறதும் நல்லதுதான்! இல்லேன்னா, மூணு நாளைக்கு ஒரு முறையோ, அல்லது வாரத்துக்கு இரண்டு முறையோ கூட தொடர்ந்து சாப்பிட்டுவரலாம்! அடுத்ததா சொல்லப்போறது தான் ரொம்ப முக்கியமானது!

புஷ்டிதனைக் கொண்டதினாற் பலமுண்டாச்சு
புகழான தைலத்தால் அழகுண்டாச்சு
எட்டிவந்த நரைதிரையு மோடிப்போச்சு
ஏமனென்ற வார்த்தையது மிறந்துபோச்சு
வட்டுப்போல திரேகமெல்லாஞ் சட்டைவாங்கும் மனோன்மணி சொல்லிது யார்க்குந்தோணா
மட்டில்லாச் சட்டையது உரிந்துதானால்
வைரமடா உன்திரேகம் வலுத்துப்போச்சே(54)

பசலைகீரையின் நன்மைகள்:

முதலாவதாக, பசலைக் கீரையை சாப்பிடறதால உடல் பலம் கிடைக்கும். இரண்டாவதாக, பசலைக்கீரையில் கிடைக்கிற நெய்யினாலே அழகுண்டாச்சு! மூன்றாவதாக, வயசாகுதுன்னு நினைவு படுத்துகிற நரைத்தலும், திரையும் ஓடிப்போகும்னும், நான்காவதாக, நோய், பிணி என்கிற வார்த்தையே மறந்து போயிடும்னும், உடம்பு நிறமாகி, உடம்பு இறுகி ஆரோக்கியமா இளமையா இருக்கலாம்னும், ஐந்தாவதாக, உடம்பு இறுக ஆரம்பிச்சுட்டாலே உடம்பு வைரம் போல வலிமையாகிடும்னும் சொல்லித்தர்றார். அடுத்ததாக,


போச்சுதே பிரமனிட்ட லபியும்போச்சு
பொன்போலத் திரேகமெல்லா மின்னலாச்சு
வாச்சுதே திரேகசித்தி வாய்த்துபோச்சு
மரணமொரு நாளுமில்லா மார்க்கமாச்சு
ஆச்சுதே அந்திசந்தியுண்டதாலே
அச்சாணி கம்பமெலா மிறுகிப்போச்சு
பேச்சொன்று மில்லையடா இனிமேலென்ன

பேரின்பக்கூத்தாச்சுபேணிப்பாரே (55)

பசலைகீரையின் மருத்துவ பயன்கள்:

பசலைக்கீரையாலேயும், நெய்யாலேயும் உடம்பு வைரம் போல ஆயிடும்ன்னு அகத்தியரய்யா சொல்லித்தந்தார். அதுமட்டுமில்ல, இன்னும் சொல்றார். பிரம்மன் தலையில் எழுதியதாக  நம்புகிற தலையெழுத்தே மாறிப்போயிடும்னும் சொல்றார். உடம்பு பொன் போல தேஜஸ் கூடி பளபளன்னு மின்னும்னும், சிறப்பான தேகம் கிடைக்கிறதுக்கு வரம் கிடைச்ச மாதிரியிருக்கும்னும், மரணம் என்பது தானாக ஒரு நாளும் வரவே வராதுன்னும், காலையில் பசலைநெய்யையும். மாலையில் பசலைக்கீரையையும் சாப்பிட்டு வர்றதாலே உடம்பில் இருக்கிற நரம்புகள்லாம், கம்பம் போல நிமிர்ந்து நிற்கும், இனி மேலென்ன பேரின்பமும், பெரும் கூத்தும், கொண்டாட்டமுமாக வாழ்க்கையிருக்கும்னும் அகத்தியரய்யா சொல்லித்தர்றார்.

கீரை வகைகளை மக்களை சாப்பிடச்சொல்லி, எத்தனையோ சித்தர்களும், பெரியேரர்களும் ஆதிகாலத்திலிருந்தே சொல்லியிருக்கிறாா்கள். அகத்தியரய்யா சொல்லித்தந்த பசலைக்கீரையையும், சரியான முறையில் சித்த மருத்துவர்களிடம் தெளிவாகச் சொல்லி, ஆலோசனைகளை பெற்று, சாப்பாட்டில் சேர்த்து எடுத்துக்கொள்வதும், மருத்துப் பக்குவமாக எடுத்துக் கொள்வதும் சரியானதும், நலமானதாக இருக்குமென்றும் நம்புகிறோம்! அடுத்தவொரு, அருமையான பதிலில் சந்திப்போமா?


பதிவைப் பார்த்தவர்களும். பகிர்ந்தவர்களுக்கும், பலன் பெற்றவர்களுக்கும், பெறப்போகின்றவர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்!

Leave a comment