கருவூரார் வாத காவியம் 700 ல் சொல்லப்பட்டது!
வணக்கம் நண்பர்களே!
கருவூரார் சித்தர் தந்தருளிய வாதகாவியம் – 700 என்கிற நூலில், நீலிகற்பம் என்ற தலைப்பில், நீலி செடி கொண்டு செய்கிற கற்பத்தால், கிடைக்கின்ற பலனையும், கற்பத்தை செய்கின்ற முறைகளையும், மிகவும் எளிதான பக்குவத்தில், நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்துடனும் வாழ்வதற்கான குறிப்புகளையும் இந்தப் பாடல்களில் தந்திருக்கிறார். சித்தர்கள் தந்த பற்பல கற்பங்களும், மனித குலத்திற்கு நன்மைகள் தருவதற்காகவே அருளப்பட்டவைகளாக இருந்த போதிலும், எளிதான கற்பமுறைகளை எளிதான பக்குவத்தில், செய்து பயன் பெற உதவுகின்ற கற்பங்களில், இந்த நீலிக்கற்பமும் ஒன்று! நீலிக்கற்பத்தால், காயசித்தியும், நீண்ட ஆயுளும், கூன் விழுந்த கிழவரையும், இளைஞன் போல நிமிர்ந்து நிற்கச் செய்யும் வலிமையும் கொண்டது என்று கருவூரார் உறுதியாகச் சொல்லித்தருகிறார்.

அவுரியின் வேறு பெயர்
நீலிக்கற்பம் செய்யறதுக்கு, நீலி என்கிற அவுரிச் செடியை எடுத்துக்கணும், அவுரி அல்லது நீலி என்னும் செடி அறிவியல் பெயராக, இண்டிகோஃவெரா டின்க்டோரியா (Indigofera tinctoria) என்று அழைக்கப்படுகின்றது. நெடுங்காலமாக உலகெங்கிலும் ஊதா நிறச் சாயத்திற்கு இச்செடியைத்தான் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நீலி செடி, சாயத்திற்கு மட்டுமல்ல, மருத்துவத்திலும் பயன்படுகிறது. கருவூரார் சொன்ன இந்த பாடலில்,
நல்குவோம் நீலிகற்பங் கொள்வாயப்பா
நலமாக அவுரியது சமூலம் வாங்கிச்
செல்குவாய் நிழலுலர்த்திச் சூரணஞ்செய்
திரமாஞ்செந் தூரமுடன் சீனிகூட்டி
வல்லதொரு கெந்தகந்தான் சுத்திசெய்து
வந்தகுருச் சக்கரையுங் கூட்டிக்கொண்டு
அல்லதொரு கற்பமிது வெல்லாமொன்றாய்
அப்பனே சரிசமன தாகச்சேர்த்தே
அவுரி செடியை பயன்படுத்துவது எப்படி?
அவுரியை முழுச் செடியாக எடுத்துட்டு, நிழலிலேயே காய வைத்து எடுத்துட்டு, பொடியாக்கிடணும்! அடுத்து, சிறிதளவு செந்தூரத்தையும், சுத்தம் செய்த கந்தகத்தையும் கொஞ்சமா எடுத்துட்டு கூடச் சேர்த்து, சர்க்கரையையும் கூடவே சரிசமமான அளவோட கலக்கணும்னும் சொல்றார். அதாவது, ஒரு முழு அவுரிச் செடியை எடுத்து நிழலில் காயவைத்து அரைச்சுத் தூளாக்கினது 100 கிராம் அளவுக்கு இருந்தால், கூடச்சேர்க்கிற செந்தூரம் 5 கிராம் அளவுக்கும், சுத்தம் செய்த கந்தகம் 5 கிராம் அளவுக்கும் எடுத்துட்டு, ஒன்றாக கலந்து எடுக்கிறபோது, எவ்வளவு எடையிருக்குதோ அதே எடைக்கு சர்க்கரையை கூடச் சேர்த்துக்கணும்னு சொல்றார். அடுத்ததாக,
சேர்த்தகற்பம் வெருகடிய தாயெடுத்துச்
செப்பமுட னரைவருடங் கொண்டாயாகில்
வார்த்தைபிச கில்லைகூன் கிழவன்றானும்
வாலையாய்ப் பதினாறு வயதேயாவான்
கார்த்தவனு மொருவருடங் கொள்வானாகிற்
கருணை பெருஞ் சகலசித்தி யுண்டாமப்பா
பார்த்ததொரு கற்பமிது கொள்ளவாண்டு
பாரில் முந்நூறென்றுதான் பகர்வார்தானே
அவுரியின் மருத்துவ பயன்கள்
அப்படி சேர்த்து தயாரித்தெடுத்த நீலிக்கற்பத்தை ஒரு வெருகடி அளவுக்கு, அதாவது, ஐந்து விரலையும் கூட்டிப் பிடித்து எடுக்கின்ற அளவுக்கு, இல்லேன்னா, ஒரு சிறு ஸ்பூன் அளவுக்கு எடுத்து, தினமும் காலையில் சிற்றுண்டிக்கு முன்னதாக, ஒரு 6 மாசத்துக்கு தொடர்ந்து எடுத்துக்கிட்டா, கூன் போட்ட கிழவராக இருந்தாலும், இளமையான 16 வயது வாலிபப் பருவத்துக்கு மாறிப்போவார்னும், இந்த வார்த்தையை சும்மா சொல்லலை, இது தப்பாகாதுன்னும் கருவூரார் உறுதியா சொல்லித் தருகிறார். இந்த நீலி கற்பத்தை ஒரு வருஷத்துக்கு சாப்பிட்டு வந்தால், சகல சித்திகளும் கிடைக்கும்கறார். உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும் போது, உடம்பில் அழகும், தேஜஸும் கூடி பளபளன்னு வாசியும், யோகமும் கூடிவருவதினாலே, ஆயுளும் கூடிடும், உடல்ல பலமும், ஆரோக்கியமும் இருந்தால் காய சித்திகளும் வராமலா போகும்? இந்த நீலிக் கற்பத்தை ஒரு வருஷம் தொடர்ந்து சாப்பிட்டு வர்றவங்களுக்கு, ஆயுள் நூறில்லை! முந்நூறுன்னும் சொல்கிறார் கருவூரார். அவுரிச் செடியை நிழல்ல காயவைத்து பொடி பண்ணிட்டு எடுத்ததோட, செந்தூரம் சேக்கணும்னு சொன்னாரே! அந்த செந்தூரத்தை எப்படி செய்யுறதுன்னு அவரே சொல்றதையும் பாத்துட்டு வந்துடலாமா?
செந்தூரம் எப்படி தயாரிப்பது?
செந்தூர வகைசொல்வேன் கேளுகேளு
செவ்வரளிக் கிழங்கரைத்துப் பொதிந்துதானே
செந்தூரம் முப்புடமாம் முருக்கம்பூப்போற்
தேறுமே யொருமாத்து வெள்ளிநூறு
செந்தூரங் கொடுத்திடவே வேதையாகும்
தீர்க்கவர்ணஞ் சதபேதி திட்டமப்பா
செந்தூரம் பணவிடையாய் மண்டலந்தான்
தின்றாக்கால் மலமூத்திர வேதையாமே
செவ்வரளி பூ செடியோட வேரை மட்டும் வெட்டி, தோலை உரித்துவிட்டு துண்டாக்கி அரைத்து உருட்டி ஈரமண்ணால் பொதிந்து வெயிலில் காய வைத்து, 6 எருவரட்டிகளை அடுக்கிவைத்து, அதன்மேல் வைத்து நெருப்பை எரித்து. புடம் போட்டு எடுக்க வேண்டும். புடம் போட்டு எடுத்த செவ்வரளி வேரானது முருங்கைப் பூ போல வெந்து செந்தூரமாகக் கிடைக்கும். அப்படிக் கிடைக்கும் செந்தூரத்தைத்தான் அவுரிச் செயோடு சேர்க்க வேண்டுமென்று சொல்கிறார்

செவ்வரளி செந்தூரத்தின் பயன்கள்:
கருவூரார். அது மட்டுமல்ல! செவ்வரளி வேரின் செந்தூரத்தை பணவெடையாக, 1 கிராம் அளவுக்கு, ஒரு மண்டலம், 48 நாட்களுக்கு காலையில் சாப்பிட்டு வருகிறபோது, வயிற்றுக் கோளாறினாலே வருகின்ற மலம் சம்பந்தமான நோய்கள், சிறுநீரகம் சம்பந்தமான நோய்களுக்கும் சிறந்த மருந்தாக பயன்படுமென்றும், ஒரு மாத்து தங்கத்தோட, 100 பங்கு வெள்ளி சேர்த்து, கூடவே இந்த செந்தூரத்தையும் ஒரு பங்காக சேர்த்து உருக்கினா, வெள்ளியானது தங்கத்தோட நிறமாக மாறி, சரிசமமான திட்டமான வேதையாகும்கறார்.
ஆமப்பா வச்சிரமிட்ட காயமாகும்
அட்டசித்தி கெவுனமுண்டா முமிழ்நீராலே
ஆமப்பா சூதத்தைக் கட்டிவைக்கும்
அறுபத்து நாற்சரக்குங் கட்டிவைக்கும்
ஓமப்பா அவர்களுட அமுதத்தாலே
உச்சிதமாம் வேதைகளும் பொய்யா தப்பா
காமப்பா கற்பத்தின் விபரஞ் சொன்னோம்
நாதாந்தக் கியானமுற்று நல்குவானே
பாதரசத்தை கட்டுவதற்கு பயன்படுவது :
வேதைன்னா ஏமம்ன்னு பொருள்! ஏமம்ன்னா பொன் அப்படின்னு பொருள்! அது மட்டுமல்ல! இந்த செந்தூரத்தை சாப்பிட்டு வந்தவர்களோட உமிழ்நீரே மருந்தாக மாறியிருக்குமாம்! உடம்பில் நோய் நொடி வராமல் காயசித்தியும், அஷ்டமா சித்திகளும் கிடைக்கும்னும், உமிழ்நீராவே பாதரசத்தையே கட்டியாக்க முடியும்னும், 64 சரக்குகளையும் கட்டிடலாம்னும், இந்த செந்தூரத்தால் செய்கிற மருந்துகளெல்லாம் நல்ல பலனைத்தருமென்றும், கற்பத்தையும், செந்தூரத்தையும் பக்குவத்தையும் தெளிவாகச் சொல்லித்தந்துவிட்டேன்! பாத்து பக்குவமாக, புத்திசாலியாக இருந்தால் நல்லபடியா வருவார்களென்றும் கருவூரார் சொல்கிறார்.
நீலிக்கற்பத்தைப் பற்றி சொல்லி, அதன் பயன்களையும், பக்குவத்தையும் சொல்லி, கூடச் சேர்க்கின்ற செந்தூரத்தைப் பற்றியும் சொல்லிவிட்டு, புத்திசாலியாகயிருந்தால் பிழைத்துக்கொள்வார் என்று கருவூரார் சொல்வது, தெரிந்துகொண்டு, தெளிவாக்கிக் கொண்டு, எதையும் செய்யும் போது எந்தவொரு செயலிலும் வெற்றி கிடைக்கும் என்பதை நாசூக்காக சொல்கிறார். சிறந்த சித்த மருத்துவர்களின் ஆலோசனையோடும், அறிவுரையோடும் இது போன்ற கற்பங்களையும், செந்தூரங்களையும் செய்து பலன் பெறுவதே நல்லது! அடுத்து வருகிற இது போன்றதொரு பதிவில் சந்திக்கலாமா?
பதிவைப் பார்த்தவர்களுக்கும், பகிர்ந்தவர்களுக்கும் கோடானுகோடி நன்றிகள்!