புலிப்பாணி சித்தர் சொன்ன மலைதாங்கி செடி வேரின் அற்ப்புதங்கள்!

கண்களை வைத்து என்னவெல்லாமோ பண்ண முடியும்னு கொஞ்சம் தான் நமக்கு தெரிந்திருந்தாலும், புலிப்பாணி சித்தர் ஐயா அதுக்கும் ஒரு படி மேலே போய் இன்னும் என்னெல்லாம் செய்ய முடியும்னு இந்த ஜாலதிரட்டு நூலில் 31 முதல் 33 வரையிலான மூன்று பாடல்களாக சொல்லியிருக்கிறார்.
கண்களாலேயே பேசிக்கிறதும், கண்களாலேயே சேதி சொல்றதும் இருந்தாலும், நாட்டியத்தில நவரசங்களையும் காண்பிக்கிற முக பாவத்துக்கு கண்கள் தான் முக்கியமா இருக்குதுன்னு நாட்டியும் தெரிஞ்சவங்களுக்கும், நாட்டியத்தை பார்க்கிறவங்களுக்கும் தெரிஞ்சி இருந்தாலும், கண்களால் கனமான பொருளையும், ஏன்! யானையை கூட அடக்க முடியும் என்று புலிப்பாணி சித்தர் ஐயா சொல்லித்தர இந்த பாடலை பார்த்தா ஆச்சரியமா தானே இருக்குது! புலிப்பானியார் சொல்லித்தந்த, நோக்கு வித்தையா? இல்ல நோக்கு வர்மமா? அப்படின்னு பாடலை பார்க்கலாமா?
பாடினே னின்னமொன்று சொல்லக் கேளு
பண்பான குன்றுடைய தாங்கி மூலம்
நாடியே கொழிஞ்சியது போலே யப்பா
நாட்டிலே மெத்தவுண் டறியார் பாரு
கூடியே யதைச்சுருட்டி மேலே யப்பா
குணமான ஆள்பாரங் கல்லை வைக்க
ஆடியே பார்த்திருக்க அந்தக் கல்தான்
அப்புரத்திற் போய்விழுங் கண்டு பாரே (31)
மலைதாங்கி செடியின் வகைகள்:
பாடினேன் இன்னும் ஒன்று கேளு! இன்னொரு வித்தை சொல்றேன் கேளுப்பா, பண்பான குன்றிடை தாங்கி மூலம், மலை தாங்கின்னும் குன்று தாங்கின்னும், கிரி தாங்கின்னும், மழை ஏந்தின்னும், வட்ட வள்ளின்னும், வட்டோளின்னும் இதை சொல்லுவதுண்டு!
குறிஞ்சிச் செடி மாதிரியே இருக்கும்னு சொல்லப்படுகின்ற இந்த குன்றி தாங்கி செடி, மலைகளிலும், குன்றுகளுக்கு இடையிலும் குன்றுகளைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு நிற்பது போல அடர்ந்து கொடியாக வளர்ந்திருக்கும் குன்று தாங்கி செடியோட வேரைப்பற்றி நிறையப் பேருக்கு தெரிஞ்சிருக்காது! மலை தாங்கிக்கு பங்கம்பாளைன்னும் இன்னுமொரு பெயரும் உண்டு. கிராமங்களில் பிரசவ காலத்திலிருக்கின்ற பெண்களுக்கு, இந்த மலைதாங்கியோட இலைகளைப் பறிச்சு, கூடவே பச்சரிசி, தேங்காய் பால், சர்க்கரை இதெல்லாம் சேர்த்து, லேகியம் மாதிரி கிண்டி அவங்களுக்கு கொடுப்பதுண்டு. இடுப்பு வலிக்கு கூட இந்த மலை தாங்கி இலை சிறந்த மருந்தாக இருக்கு!
மழைப் பிரதேசங்களில், அதுவும் கேரளா போன்ற மலைப்பிரதேசங்களில், இந்த செடி நிறைய மலைகளின் ஓரமாக அப்படியே வளர்ந்து கிடக்கும். இது கொடி வகையை சேர்ந்தது, இதோட பழங்கள் சிறு இலந்தைப்பழம் போல இருக்கும்.மலைதாங்கி செடியை பிடுங்கியெடுத்து பந்து போல சுருட்டி வைத்து, அதுக்கு மேல ஆள் எடைக்கு கல்லை தூக்கி வைத்தால்கூட, இந்த செடி அசைந்து அசைந்து அந்த கல்லையே புரட்டி, அப்பால் போடும்ங்குறது அந்த மலை தாங்கி செடியோட பண்புன்னும் அதை கண்கூடாக பார்க்கலாம்னும் சொல்லிட்டு,
பாரடா கிராணமது தீண்டும் போது
பண்பாக நெருப்பிட்டுப் பொங்கலிட்டு
சீரடா பலியிட்டுத் தூப தீபஞ்
ஜெயமாகக் கொடுத்துமிக வேரை வாங்கி
தீரடா குளிசமா யாடிக் கொண்டு
திரமாக சிரசுதனில் வைத்து நீயுங்
கூரடா பாரமதை யேற்றிப் பாரு
குணமாகத் தானெடுக்க கனக்கா தென்றே (32)
மலைதாங்கியின் பயன்கள்:
பாரடா கிராணமது தீண்டும்போது, சூரிய கிரகணம் வர்ற நேரத்திலே, பக்தியா, சுத்தபத்தமா இருந்து, பண்பாக நெருப்பிட்டு பொங்கல் வைத்து, தீபம் ஏற்றி, கற்பூரம் கொழுத்தி, தேங்காய் பழம் வைத்து சாமியை கும்பிட்டு இந்த மலைதாங்கி செடியோட வேரை எடுக்கணுமாம்! வேரைஎடுத்து சுருட்டிட்டு, தலைக்கு மேல வெச்சிக்கிட்டு, நிறைய பாரத்தை, அளவுக்கு அதிகமாக பாரத்தை தலையிலே ஏத்துனாலும், கணமா இருக்காதுன்னும், இன்றும்கூட கிராமங்கள்ல மக்கள் தலைக்குமேலே தூக்க முடியாத பாரத்தையும் எளிதாக தூக்கிட்டுப் போகிறதையும் பார்த்து இருக்கலாம்னும், மலைதாங்கி செடியோட வேரை தலையிலே வைத்துக்கொண்டு எவ்வளவு பாரத்தையும் சுமக்கமுடியும்னா, அது அந்த வேரோட மகிமைதான்னும் சொல்லிட்டு,
கனக்காது உலக்கை முதல் கட்டிலையா
கனிவாகப் பல்லாக்கு கொம்பி னோடு
அனக்காது யதுகளெல்லாம் நோக்கும் போதில்
அப்பனே வாயிலிட்டு நோக்கிப் பாரு
இனக்காது ஆனையைத்தான் வாலைப் பற்றி
இழுத்தாக்கால் பின்னகர்ந்து வரும் நீ பாரு
நினைக்காது கல்லைத்தான் உதைத்தா யானால்
நகருமப்பா பெரும்பாரம் பின்னைத் தானே (33)
மலைதாங்கி செடி வேரின் பயன்கள்:
கணக்காது உலக்கை முதல் கட்டில் ஐயா, உலக்கையாக இருந்தாலும் சரி, கனமான கட்டிலாக இருந்தாலும் சரி, பல்லக்காக இருந்தாலும் சரி! கணக்கவே கணக்காதுன்னும், அசைக்க முடியாத பல்லக்கைக் கூட, இந்த மலைதாங்கி வேரை கொஞ்சமாக எடுத்து வாயில் போட்டு அடக்கிக்கொண்டு, அப்படியே கண்ணாலே பார்த்தாலே போதும், அது அப்படியே அசைந்து கொடுக்கும்ன்னும், அடங்காத யானையாகக்கூட இருந்தாலும் இந்த மலைதாங்கி வேரை கொஞ்சமாக எடுத்து வாயில் போட்டு அடக்கிக்கொண்டு, யானையோட வாலை பிடித்து இழுத்தால், அந்த யானை அடங்கி பின்னாலேயே நகர்ந்து வரும்ன்னும், அவ்வளவு சக்தியை இந்த மலைதாங்கி வேர் கொடுக்கும்னும், அவ்வளவுயேன், பாதையிலே கிடக்கிற பெரிய பாறாங்கல்லாக இருந்தால்கூட, காலாலே லேசா தட்டினாலே வெகுதூரம் போய் விழும்னும், பெரிய பெரிய பாரமான எதையுமே, கண்களாலே பார்த்தாலே சுலபமாக நகரக்கூடிய அளவுக்கு, இந்த மலைதாங்கியோட செடியோட வேர் மகிமையானதுன்னும் புலிப்பாணி சித்தரையா சொல்லித்தந்த இந்த நோக்கு வித்தைங்கிறது நோக்கு வர்மம் போலதானே வேலை செய்யுது! மலைதாங்கி செடியோட வேரின் மகிமையானது ஆச்சரியம்தானே? நல்ல விஷயம் தானே!
பதிவை பார்த்தவர்களுக்கும், பகிர்ந்தவர்களுக்கும் கோடானுகோடி நன்றிகள்!