ஆரோக்கியத்தைலம்! தேய்ச்சுக் குளிக்கலாமா?

இதைத் தலைக்குத் தேய்ச்சு குளிச்சா,

 உடம்பு கல்லு மாதிரி ஆகிடுமாம்!

வணக்கம் நண்பர்களே!

ஒரு ஆரோக்கியமான விஷயத்தை, மிக அழகாக, அருமையாக  நந்தீசர் ஞானம் – 100 -ல் 33 முதல் 34 வரையிலான பாடல்களில் தந்திருக்கிறார். குளிக்கறதைப் பற்றியும், குளிக்கிறதாலே கிடைக்கிற நன்மைகளுக்காகவும், நச்தீசரைய்யா பாடலையும், முறைகளையும் சொல்லியிருக்கிறாரோ தெரியவில்லை!

 உடம்பு சுத்தமாக இருந்தால், ஆரோக்கியம் கிடைக்கும்! மனதில் சுத்தம் இருந்தால், மனதிற்கு அமைதியும், இறையருளும் கிடைக்கும் என்பது பெரியோர்கள் சொல்லித்தந்தது! நந்தீசரய்யா சொல்லித்தந்த ஆரோக்கிய குளியலைப் பார்த்துவரலாமா?

சார்ந்துபார் தலைமுழுக்கு விபரங்கேளு

தப்பாது நெல்லியொடு மிளகுமஞ்சள்

கூர்ந்துபார் வேப்பரிசி கடுக்காயோடு

குறையாமலமுரியிலே குளிரப்போட்டு

ஆர்ந்துபாரா வின்பால் விட்டரைத்து

அப்பனே அக்கினியில் வைத்துவாங்கித்

தேய்த்துபார் சிரசிலே சீராய்தேய்த்துத்

திரமாகசுவடு வென்னீர் முழுகுவாயே  (33)

நெல்லிக்காய் சேர்த்து தயிலம் செய்வது எப்படி?

சார்ந்து பார், கவனமாகப் பாருப்பா ! எப்படி தலை முழுகுறதுங்கற விபரத்தைக் கேளு! இந்த விவரம் தப்பாகாது, நெல்லிக்காயோட மிளகு, மஞ்சள், வேப்பரிசி,  வேப்பரிசின்னா, வேப்பங்கொட்டை, கடுக்காய் இதையெல்லாம் சேர்த்து, உப்புத்தண்ணியில்  ஒருநாள் முழுவதும்,  நன்றாக ஊறப்போட்டு எடுத்துட்டு, பால் சேர்த்து அரைச்சுட்டு, பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கிண்டி எடுத்துட்டு, தலையில் தேய்ச்சுட்டு, லேசான சூடு வெந்நீரில் குளிச்சுட்டு வரணும் என்கிறார்.

 தேவையான பொருட்கள்:

அதாவது, நெல்லிக்காய் 10 எண்ணம்,

மிளகு 50 கிராம், 

மஞ்சள் 50 கிராம், 

வேப்பங்கொட்டை 100 கிராம்,

கடுக்காய் 3 எண்ணம்,

ஒரு கால்படி அளவுக்கு உப்பு

எல்லாத்தையும் எடுத்துட்டு, ஒரு மண் பாத்திரத்தில், ஒரு 2 லிட்டர் தண்ணீரை ஊற்றி ஒரு கால்படி அளவுக்கு உப்பை போட்டு, கரைச்சுட்டு, மேலே சொன்ன நெல்லிக்காய், மிளகு, மஞ்சள், வேப்பங்கொட்டை, கடுக்காய் இவைகளையெல்லாம் சேர்த்து, போட்டு ஒரு நாள் முழுவதும், ஊறவைத்து மறுநாள் உப்புத் தண்ணீர் இல்லாமல் எடுத்து,  உரல்ல போட்டு அரைக்கும் போது, கொஞ்சம் பாலை ஊற்றி அரைச்சு எடுத்துட்டு, பாத்திரத்தில் போட்டு, அடுப்பில் வைத்து கிண்டி எடுக்கணும். அவ்வளவுதான்! அதை தலைக்கு தேய்ச்சு, ஒரு மணி நேரம் கழிச்சு  வெந்நீரில் தலை முழுகணும்னும் சொல்கிறார். அடுத்ததா,

முழுகிவர மண்டலத்தில் தேகங் கல்லாம்

முக்கியமாய் வாதபித்தம் நிலையில் நிற்கும்

கழுகிவர ஆவின்னெய் கூட்டிவா நீ

கமலமெனக் கண்குளிரும் விந்துகட்டும்

புழுகிவரப் பிண்ணாக்கார் ஞானம் நூற்றிற்

புகழ்பெறவே கற்பமுறை பாடிவைத்த

தழுவிவரமுறைகள் தவறாமல் செய்தால்

தங்கமடா தேகமது நோய்வாராது    (34)

நெல்லிக்காய் தயிலத்தின் பயன்கள்:

முழுகி வர மண்டலத்தில் தேகங் கல்லாம், மேலே சொன்ன பொருட்களைக் கொண்டு, ஒரு 48 நாட்களுக்கு, தலைக்குத் தேய்ச்சு, முழுகிட்டு வர்றபோது, உடம்பு கல்லு மாதிரி இறுகிடும்னும், முக்கியமாய் வாதமும், பித்தமும் நிலையில் நிற்கும்! வாதமும், பித்தமும், அதிகமாகி, உடம்பில் வருகிற எந்தவித பிரச்சினைகளையும் தடுத்து நிறுத்திடும்னும், வரவிடாதுன்னும், தலைமுழுகிட்டு வருகிற நாட்களில், பசுநெய்யை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்கிறார். அதனால், கண்கள் தாமரை போல மலர்ந்து, கண்கள் குளிர்ச்சியாகி கண்பார்வை தெளிவாகும்ணும், விந்து கட்டும்! தண்ணீர் போல கசிந்து வருகின்ற விந்து கட்டியாகிடும்னும், நந்தீசர் ஞானம் – 100 ல் கற்ப முறையில் சொன்னபடி வரை முறைகள் தவறாமல் செய்தால், உடம்பு தங்கம் போல பளபளன்னு ஜொலிக்கும்னும், நோயே வராதுன்னும் உறுதியாகச் சொல்கிறார் நந்தீசரய்யா.

நந்தீசரய்யா சொன்ன மாதிரியே நெல்லிக்காயை வெட்டி, மிளகு, மஞ்சள், வேப்பங்கொட்டை, கடுக்காய் எல்லாம் வெட்டி உப்பில் ஒரு 2 நாட்கள் ஊற வச்சு எடுத்து, வெயிலில் காயவைத்து, நன்றாக காய்ந்ததும் எடுத்து, அரைத்து பொடியாக்கி எடுத்து வச்சுக்கிட்டு, ஒரு கின்ணத்தில் கொஞ்சமாக எடுத்து, அதோட பாலை சேர்த்து, பிசைந்து, கலக்கிட்டு, தலையில் தேய்ச்சு, தலைமுழுகிட்டு வந்தாலும், நல்ல பலன் கிடைக்கும்! நந்தீசரய்யா தம்மோட அனுபவத்தில் கிடைத்த பாடமாகத்தான் இந்த ஆரோக்கிய தைலத்தைப்பற்றி சொல்லிக்கணும்!  தலைக்குத் தேய்ச்சுப் பார்க்கலாமே! எத்தனையோ விதவிதமான ஷாம்புகளையெல்லாம் தலைக்குத் தேய்க்கறபோது நந்தீசரய்யா சொல்லித்தந்த இந்தப் பக்குவத்தையும், செய்து பார்த்தால் நல்லது தானே!. நல்ல விஷயம் தானே!

பதிவைப் பார்த்தவர்களுக்கும், பகிர்ந்தவர்களுக்கும் கோடானுகோடி நன்றிகள்!

Leave a comment