வச்சிராதி லேகியம்

பொற்கம்பி
போலிருக்குந் தாதுவிர்த்தி!

வணக்கம் நண்பர்களே!
சித்தர்களால் பாடப்பட்ட பல வைத்திய பக்குவங்களும், பலருக்கும் பலனளித்து, ஆரோக்கியத்தையும், உடல்நலத்தையும் தந்திருக்கும் என்பதில் ஐயமில்லை!
உரோமரிஷி கருமானச் சுருக்கம் என்கிற நூலில், வஜ்ராதி லேகியம் என்கிற தலைப்பில் 15 முதல் 18 வரையில், சொல்லப்பட்ட இந்த பாடலில், நிறைய மருத்துவக்குறிப்புகளைக் சொல்லியிருக்கிறார்.

Thanks to Pixabay

சித்த மருத்துவத்தில் நோயுற்றவர்களுக்கு சிகிச்சையளிப்பதென்பதும், அவர்களை அந்த நோயிலிருந்து காப்பது என்பதும், சித்தர்களுக்கும், சித்த வைத்திய பெருமக்களுக்கும் பெரிய சவாலாகத்தான் இருந்திருக்கும்! நோயுற்றவர்களை ஆரோக்கியமாக்குவதற்கு எண்ணற்ற மூலிகைகளையும், மளிகைப் பொருட்களையும், நறுமணப்பொருட்களையும் கொண்டு, மருந்துகள் தயாரித்தும், பரிசோதனை செய்து பார்த்து, நோயுற்றவர்களுக்குக் கொடுத்து நோயை விரட்டியும், குணப்படுத்தியும் வெற்றி கண்டுள்ளார்கள். இன்றும் கூட மருத்துவத்தில் எத்தனையோ வசதிகளும், வாய்ப்புகளும் இருந்த போதிலும், புதிய நோய்களும், புதிய மருந்துகளும், நோயை குணமாக்குவதற்காக மருத்துவ உலகம் போராடி வருவதை பார்க்கிறோம்! இந்தப் பதிவிலும், உரோமரிஷியார் சொன்ன  வஜ்ஜிராதி லேகியம் என்கிற தலைப்பிட்ட பாடலை பார்த்து வரலாமா?

ஆச்சப்பா வுடலினுள்ள மந்தவாய்வு

கெத்தான குன்மமெட்டு மேகச்சூலை

மூச்சப்பா வுள்மூலம் புரமூலந்தான்

ஓய்ந்துயிரு முன்னூற் றிருபத்தைந்து

போச்சப்பா யிப்படியே ஆயனிங்கொண்டாற்

பொற்கம்பி போலிருக்குந் தாதுவிர்த்தி

போச்சப்பா லேகியத்தின் விபரமெல்லாம்

பெருமையுடன் பேசுகிறேன் வகையாய்க்கேளே (15)

உடலிலுள்ள மோசமான மந்தவாய்வு, எட்டு விதமான குன்ம நோய்களும். மேகநோய், சூலை நோய், உள் மூலம், புரமூலம் து வரிசையாக சொல்லிவிட்டு, மேலே சொன்ன நோயெல்லாம் ஓய்ந்து போகும்னும், இந்த வஜ்ஜிராதி லேகியத்தை சாப்பிட்டு வந்தவர்களுக்கு, முன்னூற்றிருபத்தைந்து வயசானாலும், தாது பொற்கம்பி மாதிரி கெட்டியாக, இளமையாக, ஆரோக்கியமாக இருப்பார்கள்னும், இந்த லேகியத்தை பத்தின விவரத்தையெல்லாம், பெருமையாக வகையாகக் சொல்லுகிறேன் கேளப்பான்னு சொல்லிட்டு, அடுத்ததா,

கேளப்பா ஜாதிக்காய் பலந்தானொன்று

கெடியான ஏலமது பலந்தான்ரெண்டு

நாளப்பா வால்மிளகு பலந்தானொன்று

நலமான லவுங்கப்பூ பலந்தானென்றுது

நீளப்பா சீரகந்தான் பலந்தானைந்து

நியமானக் கொடிவேலி பலந்தான்ரெண்டு

நாளப்பா கோஷ்டமது பலந்தான்ரெண்டு

நலமான அதிமதுரம் பலந்தானைந்தே     (16)


வஜ்ஜிராதி லேகியத்திற்கு தேவையான பொருட்கள்:


ஜாதிக்காய் (Nutmeg) 1 பலம்

சுமாரா 41 கிராம்,

ஏலம் (cardamom) 2 பலம், சுமாரா 80 கிராம்,

வால்மிளகு (tail pepper) 1 பலம், 41 கிராம்,

லவங்கப் பூ (Clove) 1  பலம், 41 கிராம்,

சீரகம் (Cumin) 5 பலம், சுமாரா 200 கிராம்,

கொடிவேலி (ceylon leadwort) (சித்திர மூலம்) 2 பலம்,  சுமாரா 80 கிராம்,

கோஷ்டம்  (Costus Speciosus) 2 பலம், 80 கிராம்,

அதிமதுரம் (liquorice) 5 பலம், 200 கிராம், அடுத்ததாக,

அஞ்சாதே அக்கிராரம் பலந்தாநொன்று

அடவான பறங்கின்வேர் பலந்தான்பத்து

துஞ்சான குங்குமப்பூ அரைக்கால்போடு

சுகமான கோரோசனை பலந்தான்காலே

மிஞ்சாதே ரவியில்வைத்து இடித்துக்கொண்டு

வியநாகத் திருத்தியதை பிடித்துக்கொண்டு

மஞ்சான பசுவினெய் யுலையாய்வைத்து

வகையோடே மெழுகுபோல் தூவிக்கிண்டே    ( 17)

மேலே சொன்ன பொருட்களோடு,

அக்கிராரம் (pellitory root, Anthemis Pyrethrum) 1 பலம், 41 கிராம்,

பறங்கி வேர் (white gourd, Pumkin)  10 பலம், 400 கிராம்,

குங்குமப்பூ (saffron ) அரைக்கால் பலம், சுமாரா 17.5 கிராம்,

கோரோசனை (Calculus Bovis,Cow stone, Cow bezoar, Ox gall)  கால் பலம், சுமாரா 20 கிராம்,

எல்லா பொருட்களையும் சேர்த்து, வெயிலில் வைத்து காயவைத்து, இடித்துப் பொடியாக்கி எடுத்துட்டு,  ஒரு பாத்திரத்தில் பசுநெய்யை விட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்சி, அதோடு  எடுத்து வைத்திருக்கிற பொடியையும் லேசாகத் தூவித் தூவி, கிளறிவிடனும்னும் சொல்லிட்டு, அடுத்ததா,

கிண்டையிலே பழச்சாற்றில் சக்கரையைப்போட்டு

கிருபையுடன் கிண்டையிலே வார்த்துவார்த்து

பண்டாரும் பதமாக யிளகொட்டாமல்

பதறாமற் கலசத்தில் வைத்துக்கொண்டு

வண்டாரும் பூங்குழலாள் மாதுபூசை

வகையோடே செய்தபின்பு வுண்டு வா நீ

தண்டாருந்தாய்தந்தை மறந்தாயானால்

தவறிவிடும் வித்தையெல்லாஞ் சாற்றுறேனே   (18)

மேலே சொன்ன பொருட்களையெல்லாம், வெயிலில் காய வைத்து இடிச்சுப் பொடியாக்கிட்டு, பசுநெய்யை காய்ச்சி அதோடு, தூவி கிளறி வரும் போது, எலுமிச்சம்பழம் சுமாரா 5 எடுத்து வெட்டி சாறு பிழிந்து, எடுத்துட்டு, ஒரு 300 கிராம் அளவுக்கு சக்கரையையும் கலந்து சேர்த்துட்டு, அதையும் கிளறிக் கொண்டிருக்கிற நெய்யோட கொஞ்சம் கொஞ்சமாகக் கலந்து, கருக்கிடாமல், லேகியப் பதத்துக்கு வந்ததும், எடுத்து பாத்திரத்தில் வைத்து பத்திரப்படுத்திட்டு, அம்பிகையை மனதில் வைத்துத் தியானித்து, லேகியத்தை  காலையில் ஒரு சிறு உருண்டையளவுக்கு எடுத்து, சாப்பிட்டு வரணும்னும், சாப்பிட்டு வர்ற போது, உடலில் இருக்கிற நோயெல்லாம் குணமாகிடுச்சு! உடம்பு ஆரோக்கியமாகிடுச்சு!  எல்லாம் சரியாகிடுச்சு! இனிமேல், நம்மையாரும் அசைக்க முடியாதுன்னு நினைச்சுட்டு, தாயையும், தந்தையையும் உதாசீனப்படுத்தினால், மறந்துபோனாயானால், செய்திருக்கிற,  மருந்துப் பக்குவம் பலன் தராதுன்னும் சொல்லித்தருகிறார் உரோமரிஷியார்.

அந்த காலத்திலேயும், தாய் தந்தையரை மதிக்காமலும்,  மறந்தும் போயிருக்கிறார்கள் போலும்! மருந்துப் பக்குவம் சொல்கிற போதும், தாய் தந்தையரை மறக்கக் கூடாதென்கிற கருத்தையும், உரோமரிஷியார் சொல்லியிருப்பது பெருமைக்குரியது! பல நோயையும், விரட்டும், தாது விருத்தியையும், ஆயுளையும், ஆரோக்கியத்தையும் தருகிற இந்த வேகியத்துக்கு, வக்கிராதி லேகியம், உடலை வைரமாக்கும் வேகியம்னு பெயர் வைத்தது சரிதானே! நல்ல விஷயம் தானே!

பதிவைப்பார்த்தவர்களுக்கும், பகிர்ந்தவர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்!

Leave a comment