உரோமரிஷி சொன்னது
வணக்கம் நண்பர்களே!
சிவா ருத்திர கற்பம் என்று சொல்லுகிற அளவுக்கு மிக சிறப்பான கற்பம் என்று உரோமரிஷியார் தமது நூலில், 310 முதல் 313 வரையிலான பாடலில், இந்தப் பக்குவத்தைச் சொல்லித்தருகிறார்.

சீந்தில் கிழங்கில் மகத்தான பயனாக, நரைதிரையெல்லாம் மாறிப்போகும்னு சொல்வதைத் தாண்டி, மரணமேயில்லையென்றும் சொல்லித்தருகிறார். அவ்வளவு சிறப்பையும், அடக்கி வைத்திருக்கிற சீந்தில் கிழங்கைப் பற்றி பார்த்து வரலாமா?
திறமான கற்பமொன்று சொல்லக்கேளு
சிவசிவா ருத்திரனென்ற கற்பமாகும்
முறமான சீந்தியடா பெரிதாய்ப்பாரு
மோகோகோ வேரையுநீ யுள்ளே தோண்டி
நிறமான வோராண்டு மட்டுமானால்
நேரான கணேசனைப்போற் கிழங்குதோன்றுஞ்
சலமான வாசியைநீ யுள்ளே பூட்டித்
தப்பித்தே வாலையைநீ தியானம்பண்ணே (310)
சரியான கற்பம் என்று சொல்ல வேண்டுமென்றால் இந்த கற்பத்தை சொல்லலாம். ஒரு வருஷமாக வளர்ந்த பெரிய சீந்தில் கொடியை பார்த்து, அதோட வேர் பகுதியில் தோண்டிப் பார்த்தால், மஞ்சளில் பிடிச்ச பிள்ளையாரைப் போல,
சீந்தில் கிழங்கு வளர்ந்திருக்கும். அந்த கிழங்கைப் பார்த்ததும், அம்பிகையை நினைத்து பிரார்த்தனை பண்ணிக்கனும்னு சொல்கிறார். சீந்தில் இலையும்,
சீந்தில் தண்டும், வேரும் மருத்துவத்திற்கு பயன்படுவது போல,கிழங்கும் பயன்படுத்தலாம் என்பதை எளிதாக, பக்குவத்தையும்,பயனையும் உரோமரிஷியார் சொல்லித் தருகிறார். அடுத்ததாக,
சீந்தில் கிழங்கு பக்குவம் :
பண்ணவே யென்தாயார் கிருபையாலே
பதனமாய் கிழங்குதனை யெடுத்துக்கொண்டு
உண்ணவே மேற்றோலைச் சீவிப்போட்டு
வுறுதிபெறப் பாக்கதுபோற் றுண்டுபண்ணி
எண்ணவே நிழலுலர்த் தாலுலர்த்திக்கொண்டு
இடித்துமே தூளாக்கி யப்பாற்க்கேளு
சண்ணவே யெட்டிலொன்று சீனிதானுஞ்
சரிகூட்டி ரேகித்து யப்பால்வையை (311)
அம்பிகையின் அருளாலே கிடைத்த கிழங்கை, சீந்தில் கிழங்கை பத்திரமாக எடுத்து, கிழங்கோட மேல் தோலை சீவி எடுத்துட்டு, பாக்கு அளவுக்கு சிறுசிறு துண்டுகளாக வெட்டியெடுத்து நிழலில் காயவைச்சு அரைச்சுப் பொடி பண்ணிஎடுத்துட்டு, கூடவே சர்க்கரையை சேர்க்கனும்னும் சொல்றார். சீந்தில் கிழங்கு தூளாக்கினது 100 கிராம் இருந்ததுன்னா, சர்க்கரை 80 கிராம் அளவுக்கு சேர்த்துட்டு, சீந்தில்கிழங்கு பொடியையும்,சர்க்கரையையும் கலந்து ஒரு பாத்திரத்தில் வைத்து விட்டு, அடுத்ததாக,
வையென்றசூரணத்தை யந்தி சந்தி
மைந்தனேகொண்டுவர விபரங்கேளு
பொய்யென்றுபோகாதே சிந்திற்றண்டை
போக்கோடே மேற்றோலையப்பால் வாங்கி
ரையென்றுதட்டியே பலமுமொன்று
நாட்டடாபடி நீரு மளந்துவிட்டு
மெய்யென்று மனதில்வைத்துத் திபானஞ்செய்து
விரவியே யெட்டொன்றாய்க் காய்ச்சிடாயே (31 2)
சீந்தில் கொடி தண்டுத்தோலை பயன்படுத்தும் முறை:
சீந்தில் கிழங்கும், சர்க்கரையும் கலந்து பொடி பண்ணி வச்சிருக்கிற சூரணத்தை, காலையிலயும், மாலையிலேயும் சாப்பிட்டு வர்றதுக்கு முன்னாடி, இன்னொரு விவரம் சொல்றேன் கேளுப்பான்னுட்டு, இந்தப் பக்குவத்தை பொய்யின்னு நினைச்சுக்காம, சீந்தில் கொடியோட தண்டை வெட்டியெடுத்து, தோலை சீவியெடுத்து, நைய்ச்சுத் தட்டிட்டு, ஒரு பலம் அதாவது, 41 கிராம் அளவுக்கு எடுத்துட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு, ஒரு லிட்டர் அளவுக்கு, தண்ணீரை விட்டு கொதிக்க விடனும். தண்ணீரை நன்றாக எட்டிலொன்றாக வற்ற வைக்கவேண்டும்னும் சொல்கிறார். சீந்தில் தண்டோட தோலையும், நிழலில் காய வைத்து பொடியாக்கிட்டு, சீந்தில் கிழங்கும் சர்க்கரையும் சேர்த்த கலவையோட சேர்த்து கொதிக்க வைத்து பருகலாமே என்றுகூட யோசனை வரலாம்! நிச்சமாக அப்படியும் செய்யலாம்! அடுத்ததா, இதனால் என்ன பயன் கிடைக்குமென்றும் சொல்லித்தருகிறார்.
காய்ச்சியதோர் கியாழத்திற் சூரணத்தோடொக்க
கருதியே கொண்டுவர மண்டலந்தானப்பா
பாய்ச்சிய தோர்நனாதிரைக ளெல்லாபபோகும்
பக்குவமாய்க் காயசித்திக்கிது வேயாகுக்
தாழ்ச்சியில்லை பொருளைநீ கண்டாயானால்
சாவில்லை யுந்தனுக்குத் தாழ்வராது
வாய்ச்சியெனு மென்தாயார் கிருபையாலே
வருண் மீறும்பொருண்மீறு மறிந்துபாரே (313)
சீந்தில் கிழங்கு கற்பம் உண்ணும் முறை:
சீந்தில் கொடியோட தோலை உரித்து நைய்யத் தட்டி கொதிக்க வைத்த தண்ணீரோடு, சீந்தில் கிழங்கையும், சர்க்கரையும் சேர்த்து தூளாக்கி வைத்திருக்கிற சூரணத்தை ஒருஸ்பூன் அளவுக்கு சேர்த்து, கலந்து தினமும் காலையிலயும், மாலையிலயும், ஒரு டம்ளர் அளவுக்கு எடுத்து ஒரு மண்டலம், அதாவது, 48 நாட்களுக்கு பருகிட்டு வர்ற போது, நரை திரை எல்லாம் போயிடும்னும், உடம்பில் இருக்கிற நோய்களெல்லாம் குணமாகி, உடம்பில் தேஜஸ் கூடி காயசித்தியாகி, ஆரோக்கியமா ஆகிடலாம்னும், அது மட்டுமில்ல, எந்த குறையும் வாழ்க்கையில் வராதுன்னும், சொல்லப்போனால், மரணமே நெருங்காதுன்னும் அம்பிகையின் அருளாலே வருமானமும் கிட்டும், பெருமானமும் கிட்டும்னும் சொல்லித்தர்றார். உரோமரிஷியார்.
உண்மைதானே! ஆரோக்கியம் இருந்தாலும், கிடைச்சாலும், நல்ல பண்போட, நல்ல குணத்தோட, நல்ல அறிவோட எந்தத் தொழில் செய்தாலும், முன்னேற்றம் கிட்டும் ! ஆரோக்கியத்தை கடைபிடித்தால், மரணம்கூட வர்றதுக்கு பயப்படும் தானே! சீந்தில் கிழங்கு சூரணம் சிறப்பான சிவசிவா ருத்ர கற்பம்னு சொன்னது சரிதானே!
இந்தப் பதிவைப் பார்த்தவர்களுக்கும், பகிர்ந்தவர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்!