தாம்பூலச்சுண்ணம்
சட்டமுனி சித்தர் வெற்றிலையோடு சேர்க்கின்ற சுண்ணாம்பைப் பற்றிதான் சொல்லியிருக்கிறார்!
வணக்கம் நண்பர்களே!
சட்டமுனி சித்தர் என்றும், சாட்டை முனி சித்தரென்றும், சட்டை முனி சித்தரென்றும் பரவலாக அறியப்படுகின்றவர். பெரிய வைத்திய சில்லறை கோவை என்கிற தொகுப்பில், சட்டமுனி கற்ப விதி 100 ல், இந்த தாம்பூலச்சுண்ணம் என்ற தலைப்பில், 34 மற்றும் 35 வது பாடலாக, இந்தப் பாடலை தந்திருக்கிறார். வெற்றிலையோடு சேர்க்கின்ற சுண்ணாம்பைப் பற்றிதான் சொல்லியிருக்கிறார்.

சாதாரணமாக, வெற்றிலை பாக்குடன், சுண்ணாம்பு சேர்த்து தாம்பூலம் மெல்லுகின்ற வழக்கம் இருந்தாலும், வெற்றிலை நல்லாயிருக்கணும்! அதிலேயும், கும்பகோணத்து கொழுந்து வெற்றிலையாக இருக்கனும்னும், இல்லேன்னா, சோழவந்தான் வெற்றிலையாக இருக்கனும்னும், கடைகடையாக தேடித் தேடி வாங்குகிறவர்களையும் பார்த்திருக்கலாம்! வெற்றிலையோட காரம், சுவையை நன்கு அறிந்தவர்கள் வெற்றிலையில் விவரம் அறிந்தவர்கள், பழுத்த வெற்றிலையையும், பழுதான வெற்றிலையையும் தூக்கிப் போட்டுட்டு, நடுநரம்பையும், காம்பையும், நுனியையும் லாவகமா கிள்ளிப்போட்டுட்டு, சுண்ணாம்பை விரல்ல படாமல் தடவி, மீதி இருக்கிற சுண்ணாம்பை, பக்கத்தில் இருக்கிற சுவற்றிலோ, மின்சாரக் கம்பத்திலோ, அல்லது அருகிலிருக்கும் எதன் மீதோ தடவி விட்டு, கண்டு கொள்ளாமல், வெற்றிலையை சுருட்டி வாய்க்குள்ளே அனுப்புகிற வித்தையைப் பார்க்குறதே தனியழகாக இருக்கும்! எதிரே இருந்து பார்க்கிறபோதே அட! அட என்ன அழகுன்னு சொல்லி, வாயில எச்சில்ஊற வைக்கும்!, இந்தப் பதிவிலே, வெற்றிலையோட கூட சேர்க்கிற சுண்ணாம்பு எப்படி இருக்கணும்? எப்படி இருந்தா, என்ன செய்யும்னு விளக்கமாக விவரமாகச் சட்டமுனி சித்தரய்யா சொல்லித் தருகிறார். பாடலைப் பார்த்து வரலாமா?
சாதிக்க இவ்வளவும் பத்தியத்தைக் கேளு
தாம்பூலந் தின்பதற்குச் சுன்னஞ் சொல்வேன்
ஒதிக்கக்கற்பூரச் சீலையைவாங்கி
வுத்தமனே வெண்கருவா லரைத்துக்கட்டிப்
பேதிக்கக் கரியோட்டி லூதுவூது
பேரானசுண்ணாம்பாம் பன்னுங்கேளு
வாதிக்கக்கன்னாரை யிப்மடியேயூது
மகத்தானயண்டத்தோ லூதிடாயே (34)
சாதிக்கறதுக்கு இதுவும் கூட பத்தியம்தான், விவரத்தைக் கேளுங்க! வெற்றிலைபாக்கு கூட தாம்பூலமாகப் போட்டுக் கொள்வதற்கு சுண்ணாம்பை பற்றின விபரம் சொல்றேன்னுட்டு, கற்பூரச்சீலையை வாங்கி, கற்பூரச் சீலை என்பது, பச்சைக்கற்பூரம்தான்! உணவு பண்டங்களில் வாசனைக்காகவும், மருந்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. அந்த பச்சைக் கற்பூரத்தை, முட்டையோட வெண்கருவை சேர்த்து அரைத்து கலந்து, ஒரு மண்சட்டியில் போட்டு, அடுப்பில் வைத்து நெருப்பை மூட்டி எரிக்க வேண்டும். மண்சட்டியில் உள்ள பச்சை கற்பூரமும், வெண் கருவும் சேர்ந்து வெந்து, சுண்ணாம்பாக தெளியும் வரை அடுப்பை எரித்து சுண்ணாம்பை எடுக்க வேண்டும் என்றும், இதே பக்குவத்தில் முட்டைத் தோலையும் அடுப்பில் வைத்து எரித்தும், சுண்ணாம்பு எடுக்க முடியும் என்றும் சொல்லிவிட்டு, அடுத்ததாக,
ஊதிடவே சுன்னமா மொவ்வொன்றப்பா வுத்தமனேபழுத்தருந்து
வெத்திலையில்பூசிக் கோதிடவேகொட்டைப்பாக் கதனைச் சீவி
ஊதிடவே சுன்னமா மொவ்வொன்றப்பா வுத்தமனேபழுத்தருந்து
வெத்திலையில்பூசிக் கோதிடவேகொட்டைப்பாக் கதனைச் சீவி
குமரவே தாம்பூலந் தின்னா நன்று
ஓதிடவே முன்சாற்றை யுமிழ்ந்துப்போட்டு
உண்ட பின்புதாம் பூலந்தின்று துப்பு
வாதிடவே சேற்றுமத்தை யறுத்துப்போடு
மகத்தான யரசத்தின் சுன்னந்தானே (35)
பச்சை கற்பூரத்தையும் வெண்கருவையும் கலந்து அடுப்பில் வைத்து நெருப்பெரிக்கும் போது, சுண்ணாம்பாக கிடைக்கும், அதை பொறுமையாக சேகரித்து எடுத்து வைத்து, வெற்றிலையில் பூசி, கொட்டைப் பாக்கும் சீவியெடுத்து, சேர்த்து தாம்பூலம் தின்பது நல்லதென்றும், வெற்றிலையை வாயில் போட்டதும், முதலில் சுரக்கின்ற எச்சிலை உமிழ்ந்துவிடனும்னும், அதற்குப் பிறகு, மென்று துப்பிவிடணும்னும் சட்டமுனி சித்தர் சொல்கிறார். இப்படி சுண்ணாம்பு தயாரித்து, வெற்றிலை பாக்கோடு சாப்பிட்டு வர்ற போது, ரொம்ப நாளா தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிற கபம் சம்பந்தமான நோய்களிலிருந்து குணம் கிடைக்கும்னும் சொல்கிறார்!
சாதாரண சுண்ணாம்பை வாங்கி தாம்பூலம் போட்டுக்கற போது, சுண்ணாம்பு எப்படிப்பட்டதென்று பார்ப்பதேயில்லை. வாய் சிவப்பாச்சுதாவென்று மட்டுமே பார்க்கிறதால, சுண்ணாம்பில் கிடைக்கிற பலன்கள் கிடைக்காமலே போயிடும், தாம்பூலச் சுண்ணம் பற்றி தெரிஞ்சுக்கிடறது முக்கியமானதுதான், தேவையானதும் கூட, சட்டமுனி சித்தரய்யா சொல்லித்தந்தது நல்ல விஷயம் தானே!
இந்தப் பதிவை பார்த்தவர்களுக்கும், பகிர்ந்தவர்களுக்கும் கோடானுகோடி நன்றிகள்!