பெருங்காயம்,

லேகியமா செய்ய முடியுமா?

பிரமாதமாக செய்யலாம்னு அகத்தியர் சொல்கிறார்!

வணக்கம் நண்பர்களே!

அகத்தியர் கன்ம சூத்திரம் 150ல், 136 முதல் 142 வரையிலான பாடலில் பெருங்காய லேகியம் என்கிற தலைப்பில் ஏழு பாடல்களில், பெருங்காயத்தை லேகியமாக செய்வதற்கும், அதை எடுத்துக்கொள்ளும் போது, பத்தியமாக எதையெல்லாம் உணவாக எடுத்துக் கொள்வது என்பதையும் தெளிவாக சொல்லியிருக்கிறார். பெருங்காயத்தை எல்லோரும் அறிந்திருப்பீர்கள்!

பெரிய உடம்பாக இருந்தாலும் பெருங்காயம் என்று சொல்வதுண்டு. சிலர் பெருங்காயத்தின் பெயரை உச்சரிக்கவே மாட்டார்கள். இதையெல்லாம் விட, சமையலில் சுவைக்காகவும், செரிமானத்துக்காகவும். வாசனைக்காகக் கூட சேர்த்தாலும், வயிற்றில் வாய்வுத் தொல்லை வந்து, மேலேயும் போகாமல், கீழேயும் போகாமல் இடையில் நின்று விடக்கூடாது என்கிற மூல காரணத்திற்காகவும் பெருங்காயம் பயன்படுத்தப் படுகிறது. வாய்வு தொல்லைக்கும், வாதத்திற்குமான சிறந்த மருந்தாக இந்த பெருங்காய லேகியத்தை அகத்தியரய்யா சொல்லித்தருகிறார். பாடலை பார்த்துவரலாமா?

ஏகுமேகாயந்தன்னை

யியம்புறோமின்னங்கேளு

பாகுசேர்சோமனாதி

பலமதுயிருபத்தைந்து

வாகுமே தூணிநீரில்

வாட்டியேயெட்டொன்றாக்கி

யாகுமேசீனிபத்தும்

பலமதுவி தனிற்பாச்சே  (136)

ஏகுமே காயந்தன்னை யியம்புறோமின்னங் கேளு, பெருங்காயத்தைப் பற்றின விவரத்தைச் சொல்கிறோம் கேளுங்களப்பான்னு சொல்லிட்டு, பெருங்காயம் 25 பலம், சுமாரா 875 கிராம் அளவுக்கு எடுத்துட்டு, ஒரு பாத்திரத்தில்  20 லிட்டர் அளவுக்கு தண்ணீரில், பெருங்காயத்தை கலந்து, அடுப்பில் வைத்து நெருப்பை எரியவிட்டு, சுமாரா 350 கிராம் அளவுக்கு, சர்க்கரையைக்கூட சேர்த்து கலந்து அடுப்பை எரிய விடணும்னும் சொல்லிட்டு, அடுத்ததாக,

பாச்சியேபாகுசெய்து

பரிந்திடுமருந்துகேளு

வாச்சியேவெள் வெங்காயங்

கடுகுடன்மிளகுஞ்சுக்கு

வாச்சியே திப்பிலியோமம்

சீரகம்மதுரங்கோஷ்ட

மாச்சியேபலமொன்றாக

வாவினெய்படிகால்வாரே  (137)

பாச்சியே பாகு செய்து பரிந்திடு மருந்து கேளு, பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து, கூடவே சக்கரையை யும் சேர்த்து  அடுப்பில் வைத்து கிண்டி பாகுபோல வர்றபோது, சேர்க்கக் கூடிய மருந்துப் பொருட்களைச் சொல்கிறேன் கேளுப்பான்னுட்டு, வெள்ளைப்பூண்டு, கடுகு, மிளகு, சுக்கு, திப்பிலி, ஓமம், சீரகம், அதிமதுரம், கோஷ்டம் இந்தப் பொருட்களையெல்லாம், தனித்தனியே ஒரு பலம் வீதம், இடித்துப் பொடியாக்கினதையும், அதாவது, 315 கிராம் அளவுக்கும் எடுத்து சேர்த்துட்டு, கூடவே பசு நெய் ஒரு கால்படி சேர்த்துக்கணும்னும் சொல்லிட்டு, அடுத்ததாக,

பாலதுவார்த்துக்கிண்டி

காய்ந்துமேமெழுகதானால்

சாலவே வழித்துவைத்துத்

தான் தினங்கழஞ்சிவீதம்

ஏலவேகொள்வீரானா

வியம்புரோந் தீரும் நோயை

வோலமாய்வாய்வுவாத

மோடிடுமுண்மைதானே  (138)

பாலது வார்த்துக் கிண்டி காய்ந்து மே மெழுகதானால், பெருங்காயத்தோடு, சர்க்கரை கலந்து வெள்ளைப்பூண்டு, கடுகு, மிளகு, சுக்கு, திப்பிலி ஓமம், சீரகம், அதிமதுரம், கோஷ்டம்  கூடவே பசு நெய்வையும் சேர்த்து கிண்டி வர்ற போது, ஒரு கால்படி, 250 கிராம் அளவுக்குப் பசும்பாலை சேர்த்து கிண்டி மெழுகுபதம் வர்றபோது, அடுப்பை அமர்த்திட்டு, பாத்திரத்திலிருந்து வழித்து, தனியே ஒரு பாத்திரத்திலயோ, சீசாவிலேயோ போட்டு, பத்திரப்படுத்திட்டு, தினமும் ஒரு கழஞ்சி வீதம், சுமாரா 5 கிராம் அளவுக்கு காலையிலே உருட்டி எடுத்து சாப்பிட்டு வந்தால், தீருகின்ற நோய் எதுவென்று சொல்லணும்னா, வோலமாய் வாய்வு, பெரிய சப்தத்தோடு பயமுறுத்துகிறமாதிரி, சிரிக்கிற மாதிரி வந்து, தம்மையும், சுற்றியுள்ள மற்றவர்களையும், முகஞ்சுழிக்கிற மாதிரி, கெட்ட நாற்றத்துடன் கஷ்டப்படுத்துகிற வாய்வு, வருவதை சீராக்கி வயிற்றையும், செரிமானத்தையும், வாதநோய்களையும் குணமாக்கிவிடும் என்று அகத்திரய்யா பெருங்காய லேகியத்தைப் பற்றி சொல்லிவிட்டு, அடுத்ததாக பத்திய முறைகளைப் பற்றி சொல்கிறார்.

உண்மையா மருந்துகொண்டால்

பத்தியமுரைக்கக் கேளு,

கன்மநன் மிளகுமஞ்சள்

சீரகங்கருதிக்கொள்ளு,

கண்மையாங் கறிவகைகள்

சாற்றுரோந் தரணியோர்க்கு,

வண்மையா முருங்கைபிஞ்சு

மாகுந்தான் ஆகுமாமே (139)

உண்மையாக மருந்து கொண்டால், பெருங்காய லேகியத்தை தயாரித்து, சாப்பிடுகிறபோது பத்தியமாக என்னென்ன சாப்பிடலாம்னு சொல்லித்தருகிறார். நல்ல மிளகு, சீரகம் சேர்த்துக் கொள்ளலாம். காய்கறி வகைகள் என்று எடுத்துக் கொண்டால், முருங்கை பிஞ்சு எடுத்துக்கலாம். அடுத்ததாக,

பிஞ்சொடுவாழைக்காயும்

பிசகில்லாசிறுநல்கீரை

யஞ்சியேபொன்னாங்காணி

யவரையின்பிஞ்சுமத்தி

துஞ்சிடுந்தூ தளங்காய்

துவரை நெல்லிக்காயோடு

றெஞ்சியமுசுட்டைக்கீரை

கொண்டிட குணமதாமே  (140)

பிஞ்சொடு வாழைக்காயும், வாழைக்காயில் பிஞ்சாகப் பார்த்து சேர்த்துக் கொள்ளலாம்னும், சிறுகீரை, பொன்னாங்காணி அவரைக்காயில் பிஞ்சு அவரைக்காயையும், தூது விளங்காய், துவரை, நெல்லிக்காய், முசுட்டைக்கீரையையும், சாப்பிடலாம்னும் சொல்லிட்டு, அடுத்ததாக,

குணமதாம் பால்நெய்மோரு

குறுமயி லுடும்புகாடை

பணமதாய் வெள்ளாட்டுவற்றல்

பகர்ந்திடு கவுரிதாரியுங்

கணமதா முடும்புமுள்ளான்

கடல்மீனில் சுதும்புகிழங்கான்

நிணமதா மாமைவிராலும்

நீந்திடுமுளுவைத்தானே  (141)

குணமதாம் பால் நெய் மோரு, பாலும், நெய்யும், மோரும் சேர்த்துக்கலாம்னும், குறுமயிலும், உடும்பும், காடையும், நல்ல பதமான வெள்ளாட்டு வற்றல், கவுதாரியும், கனமான உடும்பும், முள்ளான் எலியும், கடல் மீன் வகையில், சுதும்பு, கிழங்கான், ஆமை, விராலும், முளுவையும் சாப்பிட்டுக்கலாம்னும் சொல்லிட்டு, அடுத்ததாக,

உளுவையுஞ் சுளுதிருக்கை

நெத்திலி யுறுதியாகும்

பழுதிலா விதுகளெல்லாம்

பகர்ந்திட்டோம் பொதுவா ய்த்தானே,

யெழுதியநோய்கள் கண்டு

யேய்த்துக்கொள் ளின்னதென்று,

கொழுகிய பத்தியத்தைக்

கூறினோங் கூட்டிக்கொள்ளே  (142)

உளுவையுஞ் சுருதிருக்கை, உளுவை மீனும், திருக்கை மீனும், நெத்திலி மீனும் உறுதியாக சாப்பிடலாம்னும், குறைவேயில்லாமல் சாப்பிடறதுக்குத் பொதுவாக தேவையானதெல்லாம் சொல்லிட்டோம்னும், நோய்க்குஏத்தபடி என்ன சேர்த்துக்கலாம்னும் தெரிந்து கொண்டு, வேண்டாததை விட்டு விட்டு,  கடைபிடிக்க வேண்டியதை பத்தியமாகவும், உணவாகவும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அகத்தியரய்யா சொல்லித்த கிறார்.

பத்தியமாக, இதையெல்லாம், சாப்பிடக் கூடாது என்றும், இதையெல்லாம் சாப்பிடலாம் என்றும் சொல்வதிலும் ஒரு பாங்கு இருக்கின்றது. வாய்வு தொல்லை போனால் போதும்னு கவலைப்பட்டுக்கிட்டு, வேலைக்கே போகாமல் வீட்டிலேயே அடைந்து கிடப்பதிலிருந்தும், கூட்டத்துக்குள்ளேயே சேராமல், தனியே இருப்பதிலிருந்தும் விடுபட்டாலே போதும் என்கிற நிலையிலிருப்பவர்கள் அகத்தியரய்யா சொல்லித்தந்த பெருங்காய லேகியத்தை, சித்த வைத்தியப் பெருமக்களின் ஆலோசனையின்படியும், அறிவுரையின்படியும் உபயோகித்து பயன்பெறலாம் என்பதையும் அகத்தியரய்யா சொல்லித்தந்த இந்த லேகியமருந்து நல்ல விஷயம் என்பதும் சரிதானே!

இந்த பதிவைப் பார்த்தவர்களுக்கும், பகிர்ந்தவர்களுக்கும், கோடானுகோடி நன்றிகள்!

Leave a comment