வியாபாரத்தில் லாபம்!
சகல செளபாக்கிய தனலாபம்!
வணக்கம் நண்பர்களே!
இராமதேவர் எனும் யாக்கோபு சித்தர், தமது வயித்திய காவியத்தில் 815 முதல் 818 வரையிலான பாடலில், வாடை என்று தலைப்பில் இந்த பாடலைத் தந்திருக்கிறார். வாடை ன்னா, வாசனை, வாசனையில் என்ன மகத்துவத்தை சொல்லியிருக்கிறார் என்று பாடலைப் படித்த போதுதான் வாசனையிலும் வசியம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டேன்.

இன்றும் கூட, சில இஸ்லாமிய நண்பர்கள் சாம்பிராணி தூபம் போட்டுக்கொண்டு வருவதைப் பார்த்திருக்கலாம். தூபத்தை நம்பிக்கையோடு பெற்றுக் கொள்வதையும் பார்த்திருக்கலாம். சாம்பிராணி தூபம் போலவே இந்த வசிய தூபத்தையும் யாக்கோபு சித்தரய்யா சொல்லித் தருகிறார். சாதாரணமாக, ஊதுபத்தி, சாம்பிராணி, தசாங்கம் எல்லாம் வீட்டில் ஏற்றுவது வெறும் வாசனைக்காக மட்டுமல்ல. வீட்டிலுள்ள கெட்ட நாற்றமும், கெட்ட திருஷ்டிகளும், கெட்ட நிகழ்வுகளையும் வெளியேற்றி, வீட்டில் நல்ல நிகழ்வுகளும், மகிழ்ச்சியும், வீட்டிலுள்ள அனைவருக்கும் உடல்நலத்தையும், சகல சௌபாக்கியத்தையும் வரச்செய்கிற ஒரு விஷயமாகவே இருக்கிறது என்று பெரியோர்கள் தமது வாழ்வின் அனுபவத்தைக் கொண்டும் சொல்லக்கேட்டிருக்கலாம். இந்த தூபத்தின் புகையானது, மற்றவர்களை ஈர்த்து வணங்க வைத்து வசியமாக்கிவிடும் என்றும், இந்த தூபத்தை கடைகள் வியாபாரம் நடக்கின்ற இடங்களில் புகையவிட்டால், மக்கள் பலர் வந்து பொருட்கள் வாங்கி, வியாபாரம் செழிக்கும்னும் யாக்கோபு சித்தரய்யா செல்லியிருப்பதைப் பார்த்துவரலாமா?
பாரப்பா வாடையொன்று சொல்லக்கேளு
பதிவான பூரணத்திற் பலமோவாங்கி
நேரப்பா சூடனுடன் சாம்பிராணி
நிசமான வாப்புடனே மட்டிப்பால்தான்
சாரப்பா திரிமஞ்சள் சந்தங்கஸ்தூரி
தயவான சாதிக்காய் கிராம்புபத்திரி
பேரான வரத்தையொடு பஞ்சமூலம்
பெருமை யுள்ளகிளியூரல் கோஷ்ட்டந்தூக்கே (815)
வாடைன்னு சொல்கிற தூபம் ஒன்று இருக்கிறது சொல்கிறேன்னுட்டு, சொல்லியிருக்கின்ற பொருட்களில் எல்லாம் தனித்தனியே 1பலம் வாங்கிடனும்னும் சொல்றார். அதாவது, சூடம், சாம்பிராணி, மட்டிப்பால்,
(மட்டிப்பால் என்பது ஒரு வகை மரத்திலிருந்து (மஞ்சாடி மரம் – (Adenanthera paronina); மட்டிப்பால் மரம் – (Ailanthus malabaricus) எடுக்கப்படும் பொருளாகும்.)
திரிமஞ்சள், சந்தனம், கஸ்தூரி, சாதிக்காய், கிராம்பு, சாதிபத்திரி, பஞ்சமூலம், பஞ்சமூலம்னா, சுக்கு, மிளகு, பேரரத்தை, சித்தரத்தை, திப்பிலி கூடவே கோஷ்டம் எல்லாத்தையும் மேலே சொன்னது போல, 1 பலம், சுமாரா 41 கிராம் அளவுக்கு தனித்தனியே எடுத்துக்கணும்னும் சொல்லிட்டு, அடுத்ததா,
தூக்கியதைக்கல்வமதிற் பொடித்துக்கொண்டு
சுகமான பன்னீரா லரைத்துத் தட்டி,
தாக்கியே ரவிதனிலே காயப்போடு
தன்மையுட னீர்வற்றிக் காய்ந்ததானாற்,
பாக்கியமென்றேயதனை யெடுத்துக்கொண்டு
பதிவாக நீயிருக்கு மொடுக்கந்தன்னில்
வாக்கியந்தான் றவராமல் அனலினல்ல
வலுவான தழலதுவை யெடுத்துக்கொள்ளே (816)
தூக்கியதை கல்வ மதிற் பொடித்துக்கொண்டு, மேலே சொன்ன பொருள்களையெல்லாம் பொடியாக்கிட்டு, நல்ல பன்னீர் சேர்த்து அரைச்சு எடுத்துட்டு, வில்லையாகத் தட்டி வெயிலில் காய வைக்கணும்னும். நல்லா வெயிலில் காய்ந்து பன்னீரெல்லாம் வற்றினதும், வில்லைகளை எடுத்து சீசாவிலே பத்திரப்படுத்திட்டு, ஒரு சாம்பிராணிக் கரண்டியிலேயோ, சிறுதட்டுப் பாத்திரத்திலேயோ நெருப்புக் கனலை எடுத்துக்கணும்னும் சொல்லிட்டு, அடுத்ததா,
எடுத்ததொரு வில்லைதனிற் பணவிடைதானெடுத்து
வேதந்தமான தொருதனல் மேல்வைக்க
தொடுத்த புகைமேலெழும்பிச் சுற்றும்பாரு
சுகமாகப் புகையிலகப்பட்ட தெல்லாம்
அடுத்ததொரு வாண்டுமை போலேமக்கா
என்பான வசிகரமாய் வணங்கிக்கொள்வார்
தடுத்த தொருவசிகரமாம்வாடை தன்னை
தனதான வடக்கமதா யடுத்துக்காரே (817)
வெயிலில் காய வைத்த ஒரு வில்லையிலிருந்து, கொஞ்சமாக ஒரு பணவெடை அளவு எடுத்து நெருப்புக்கனல் மேல் வைத்ததும், புகை எழும்ப ஆரம்பிக்கும், அந்தப் புகையானது சுற்றிலும் பரவும் போது, அந்த தூபத்தின் வாசனையாலேயும், வசியத்தாலேயும் மை வைத்த மாதிரி, மக்களெல்லாம் வசியமாக வந்து வணங்கி நிற்பார்கள்னும். வசிகரமான இந்த தூபத்தோட வாசனையை தன் வியாபாரக் கடைக்குள்ளேயும், வீட்டுக்குள்ளேயும் மட்டும் பரவுகிற மாதிரி அடக்கமா வச்சுக்கணும்னும் சொல்லிட்டு, அடுத்ததாக,
காராத மூடருக்கு ஞானமேது
கருவறியா மாந்தருக்குக் கருத்தங்கேது
நேராத யோகிக்கி வாசியேது
நிட்டையறி வில்லார்க்குப்பொரு ளங்கேது
கூராக வட்சரத்தைப் பணிந்துகொண்டு
குருவிருந்த சன்னிதியிற் குவிந்துநின்றாற்
றேறாதசிந்தை யெல்லாந் தேறுந்தேறுஞ்
சிவசிவா பூரணமுந் திறக்கும்பாரே (818)
வசிய தூபத்தை சரியாகப் பயன்படுத்தினால் பலன் கிட்டும்னும், சரியாக செய்யாதவர்களுக்கு பலன் எப்படிக்கிடைக்கும்? இந்த தூபத்தோட வசியத்தால் வியாபாரம் பெருகும்கற விஷயத்தை புரிந்து கொள்ளாதவர்களுக்கு, இந்த வசிய தூபத்தைப் பற்றிய விவரம் எதுக்கு? கஷ்டப்படாமல் யோகியாகிறவர்களுக்கு வாசியைப் பற்றிஎன்னதெரியும்? புரிந்து கொள்ளாதவர்களுக்கு எப்படி பொருள்கிடைக்கும்? வருமானம் கிடைக்கும்? லாபம் கிடைக்கும்னும் கேட்டுட்டு, கவனமாக கருத்தாக தூபத்தைப் ஏற்றிவைத்துக் கொண்டு, பக்தியோடு இருகரத்தையும் கூப்பி, இறைவனை வணங்கி வேண்டி நிற்கும் போது, மனதெல்லாம் நிறைந்து மகிழ்ச்சியான வருமானம் நிறைகின்ற நாளாக அன்றைய நாள் அமைந்திடும்னும், சிவமான அமைதியும், ஆற்றலும், செயலும் எப்போதும் கூடவே இருக்கும் என்றும் யாக்கோபு சித்தரய்யா சொல்லித்தருகிறார்.
உண்மைதான்! சாதாரணமாக, தூபப் புகையால் ஒருவித மனமகிழ்ச்சி ஏற்படுவதை எல்லோருமே உணர்ந்திருக்கலாம்! தினமும் மாலை வேளைகளில், வீட்டுக்குள்ளும், வியாபாரம் செய்யுமிடத்திலும், ஊதுபத்தியையாவது, கொழுத்தி மனதிற்கு நல்லதொரு அமைதியையும், வருமானம் தருகின்ற லாபத்தின் மகிழ்ச்சியையும்,தினம் தினமும் அடையலாமே! யாக்கோபு சித்தர் சொல்லித்தந்தது நல்ல விஷயம் தானே?

இந்தப் பதிவைப் பார்த்தவர்களுக்கும், பகிர்ந்தவர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்!