ஆயுர்வேதம்

அகஸ்தியரருளிய பித்தம் தெளிவதற்கு பக்குவம்!

வணக்கம் நண்பர்களே!

அகத்தியரின் ஆயுர்வேதத்திலும் 1066 முதல் 1069 வரையிலான பாடலில் இந்த பக்குவத்தைப் பற்றி சொல்லியிருக்கிறார். கிராமங்களில் இன்றும்கூட, அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ன்னும், காமாலைக் கண்ணுக்கு, காண்கிற இடமெல்லாம் மஞ்சள்ன்னும் பேச்சு வழக்கில் சொல்வதுண்டு.

பார்க்கிற இடமெல்லாம்
மஞ்சளாகத் தெரிந்தால்
என்னவாக இருக்கும்?

பித்தம் அதிகமானால் காமாலை நோயின் அறிகுறியாக கண்கள் மஞ்சளாகத் தெரிவதால்கூட இப்படி சொல்லியிருக்கலாம்!

பித்தத்தினால் வருகிற கொடுமையான நோய்களினால் தப்பிப் பிழைப்பதற்கும், குணமாவதற்கும் அகத்தியரால் ஆயுர்வேதத்திலும் மருந்துப் பக்குவம் எளிதாகச் சொல்லப்பட்டிருப்பதையும், பார்த்து வரலாமா?

பித்தமிகுந்துக் கண்ணெ ரிந்து
பெருக்கத் தண்ணீர் தான்வடிந்து
உத்துப் பார்த்தவிட மெல்லா
மெளிரு மஞ்சள்போ லிருக்குஞ்
சித்த மிதற்கு தளராமற்
செய்யு மருந்து செப்பக்கேள்
சுக்குக் கடுக்காய்த் தான்றிநெல்லி
துய்ய சதைநன்றா யரையே      (1066)

பித்தத்தினால், கண்ணெல்லாம் எரிச்சலோட கண்களிலிருந்து தண்ணீராக கொட்டிக் கொண்டிருக்கும்னும், உற்றுப் பார்க்கின்ற இடமெல்லாம் மிளிருகின்ற மஞ்சளாக தெரியும்னும், இந்த அறிகுறிக்கெல்லாம் மனம் கலங்க வேண்டாம், குணப்படுத்துறதுக்கு சரியான மருந்துப் பக்குவத்தை சொல்லித்தருகிறேன், கேளுங்கப்பான்னுட்டு, மஞ்சள் காமாலைக்கு மருத்துப் பொருட்களைச் சொல்கிறார். சுக்கு, கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இந்த நாள்கு பொருட்களையும் எடுத்துட்டு, கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இந்தக் காய்களின் விதையை எடுத்து தூரப்போட்டுட்டு,  சதைப் பகுதியை எடுத்து, கூடவே, சுக்கையும் உடைத்துப் போட்டு வெயிலில் காயவைத்து, நல்லா அரைச்சுப் பொடியாக்கி எடுத்துக்கணும்னும் சொல்லிட்டு, அடுத்ததாக,


அரைத்து நாழி தண்ணீரில்
அன்பாய்க் கரைத்து வெட்டொன்றாய்
விரைத்துக் காய்ச்சி வைத்தபின்பு
விரும்புந் தேனுநறு நெய்யும்
முறைத்தே மூன்றுகாசி டைவார்த்
துள்ளுக்கு நீர்கொடுப் பீரால்
பொறுத்தே பித்தத்தால் வந்த
போகா வியாதிபோய் விடுமே   (1067)

மேலே சொன்ன பொருட்களான, சுக்கு 50 கிராம், கடுக்காய் 50 கிராம், தான்றிக்காய் 50 கிராம், நெல்லிக்காய் 50 கிராம் அளவுக்கும் எடுத்து, உடைச்சு வெயில்ல காயவச்சு அரைச்சு தூளாக்கி ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்திக்கொண்டு, ஒரு பாத்திரத்தில் சுமாரா 1 லிட்டர் அளவு  தண்ணீரில், ஒரு ஸ்பூன் அளவுக்கு பொடியை எடுத்து கலந்து, அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து,  எட்டுக்கு ஒன்றாக காய்ச்சி எடுத்துட்டு, சூடு ஆறினதும், தேன் கலந்தோ, நெய் கலந்தோ ஒரு டம்ளர் அளவுக்கு தினமும் காலையில் பருகி வரும் போது, பொறுமையாக பித்தத்தால் வந்து, போகாமல் துன்பம் கொடுக்கின்ற நோய்களெல்லாம் போய்விடும்னும் சொல்கிறார். பொறுமையாகத்தான் போகும்னு சொன்னதினால் மிகப் பொறுமையாகப் போகும்னு எடுத்துக்காமல், தொடர்ந்து மருத்து எடுத்துக் கொள்கிறபோது, பித்தம் சம்பந்தமான நோயெல்லாம் வந்த இடம் தெரியாமல் ஓடியே போகும்னும் அகத்தியரய்யா சொல்கிறார். அடுத்ததாக, இந்த பக்குவத்தை செய்து சாப்பிட்டு வர்ற போது, எந்த மாதிரியான உணவுகளை பத்தியமாக் சாப்பிடனும்னும் சொல்லித் தருகிறார்.


விடுமே யடுத்த வுணவதுகேள்
மேவுங் குருவையரிசி சேர்
கொடுமே பாசிப்பயர் பருப்புக்
கூடும் பொன்னாங் காணியுடன்
றொடுமே யூர்க்குருவி யுடன்
றுய்ய புனத்தினன் முருங்கை
எடுமே பசுவின்பால் நெய்யு
மிணங்கும் புளியின்னங் கேளே  (1068)

பித்தம் குணமாக எடுத்துக்கொள்கிற பத்தியத்துக்கான உணவாக, குருவையரிசி சேர்த்துக்கலாம்னும், பாசிப்பயறும் சேர்த்துக்கலாம்னும், பொன்னாங்கன்னி கீரையுடன் பருப்பும் சேர்த்து சமைத்து சாப்பிடலாம்னும், கோழி இறைச்சி சாப்பிடலாம், முருங்கை கீரையோ, காயோ சாப்பிடலாம்னும், பசும்பாலும், நெய்யும், தேவைக்கு ஏற்ப புளியும் சேர்த்துக்கொள்ளலாம்னும் இன்னும் இருக்கிறது கேளுப்பான்று சொல்லிட்டு, அடுத்ததாக,


கேளீர் கருப்புக்கட்டி யுடன்
கிளறக் காய்ச்சியே கொள்ளு
நாளு நயனந்தனி லெரிந்து
நயமா மிகுதியிருந் தக்கால்
ஆளு முள்ளங்கால் தன்னில்
வளரும் பசுவிநெய் விட்டு
சூழு மூன்றே முக்காலிற்
றுலங்கக் கடிகைதேய்ப் பதுவே  (1069)

கருப்பட்டியை நல்லா காய்ச்சிக் கிளறி, பலகாரத்தோடு கூட சேர்த்து  எடுத்துக்கலாம்னும், இந்தப் பொடியோட கூட கருப்பட்டியை காய்ச்சிக் கிளறிச் சேர்த்து உருண்டையாகவோ, தட்டையாகவோ,  மிட்டாய் போல, இஞ்சி முறப்பா போல செய்து கூட தினமும் சாப்பிட்டு வரலாம்! இதையே வியாபாரமாகக் கூட, பித்தமருந்தாக வீட்டிலேயே செய்து விற்று சம்பாதிக்கலாம்! பணத்துக்கு பணமுமாச்சு! மருந்துக்கு மருந்துமாச்சு!  இது ஒரு ஆலோசனைமட்டும்தான்! எதற்க்கும் இந்த மருந்துப் பக்குவத்தை எடுத்துக்கறபோது, சித்த வைத்திய பெருமக்களின் ஆலோசனையோடும், அறிவுரையோடும் செய்து பயனடைவது நல்லது!
அது மட்டுமல்ல, கண் எரிச்சல் அதிகமாக இருக்கிறபோது, உள்ளங்கால்களில் பசு நெய்யை பூசி, நெய் நன்றாகப் பரவுகிற மாதிரி, ஒன்றரை மணி நேரம் தேய்த்து விட்டால், கண் எரிச்சல் போய்விடும்னும் ஒரு துணுக்கு மருத்துவத்தையும் அகத்தியரய்யா சொல்லித் தருகிறார்.

அகத்தியர் சொன்ன ஆயுர்வேதத்திலும், மக்களுக்குத்  தேவையான மருந்துப் பக்குவங்களும் கொட்டிக்கிடக்கின்றன. மக்களுக்கு இந்தப் பக்குவத்தின் மகிமையும், பயனும் எவ்வளவு தூரம் நம்பிக்கையளிக்கும் என்பதும், ஆதரவளிக்கும் என்பதையும்  மக்களின் பார்வைக்கு கொண்டு செல்வது மட்டுமே இது போன்ற பதிவுகளின் முயற்சியாகும்.

நோயைக் கண்டு பயப்பட வேண்டாம்! சரியான பக்குவத்தால் சரியாக நோய்களெல்லாம் தீரும்! , நோயை தீர்க்கும் சரியான பக்குவமுறைகளையும், உண்ணுகிற உணவில் என்ன குணங்களும், பலன்களும் இருக்கிறது என்பதையும் ஒருமுறை பார்த்து விட்டு, யோசித்து விட்டு, எடுத்துக் கொள்வதே நல்லது. எந்த மந்திரங்களும், மருத்துகளும், தேவர்களும் தீர்க்க முடியாத நோய்களையெல்லாம், ஞானத்தோடும் பக்குவமான உணவோடும், கட்டுப்பாடோடும் இருந்து வாழ்வதே, நோய் தீர்க்கும் அருமருந்தாக முடியுமென்று தான் சித்தர் பெருமக்களின் பொதுவான கருத்தாக இருக்க முடியும்!

அகத்தியரய்யா சொல்லித்தந்த இந்த பித்த நோய்களுக்கான பக்குவம் சிறப்பான பலனைத் தந்து, நோய்கள் பல தீர்க்கும் என்பதில் சந்தேகமேயில்லை!  முடிந்தால் இந்தப் பதிவையும் மற்றவர்களோடு பகிருங்கள்!

பதிவை பார்த்தவர்களுக்கும், மற்றவர்களோடு பகிர்ந்தவர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்!

Leave a comment