தேன் எப்படி வலிமை கொடுக்கும்!

வணக்கம் நண்பர்களே!

தேன் எப்படி வலிமை கொடுக்கும்!

போகர் சித்தரால், போகர் ஏழாயிரத்தில் 1041முதல் 1044வரை குறிப்பிடப்பட்டுள்ள “தேனில் கற்பம்” பாடலில், சொல்லப்பட்ட தேனின் பயன்களையும், தேனை அருமருந்தாக செய்கிற பக்குவத்தையும் விளக்கமாக இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ளது.

போகர் சித்தரால் சொல்லித்தரப்பட்ட, அற்புதமான மருத்துவக் குறிப்புகளை அறியவும், புரிந்துகொள்ளவும், அதன்படி தேனை, உடல்நலம் காக்கும் ஒரு பொருளாக செய்து உலகமக்கள் அனைவரும் பயன்பெறவும், எங்களைப்போலவே நீங்களும் உற்சாகமாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம்!

போகர் சித்தர்  தமது மருத்துவ பகுதியில், மேற்கோள் காட்டிய தேனின் பயன்பாடு ‘தேனில் கற்பம்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது!

இந்த பதிவினை காணொளியாக காணலாம் – https://youtu.be/rOUYloW_VRo?si=cVdkM6weaI60IMbG

1041.

தானான பிள்ளையழச் சத்தங் கேட்டுத்

தயவுடனே பால்கொடுக்கும் தாயைப்போல

வேனான போகரிஷி இரக்கம் வைத்து

விருப்பமுடன் தானுரைக்கும் காயகற்பம்

பானான தேனதுவும் படிதா னெட்டு

பாங்காக அளந்துவொரு பாண்டமிட்டு

கோனான மேல்மூடி சீலை செய்து

குறிப்புடனே பூமிக்குள் புதைத்திடாயே


1042.

புதைத்துமே தீமூட்டி மண்ட லந்தான்

பொங்கமுடன் தானெரிப்பாய்ச் சதுரமட்டும்

சிதைத்துமே மண்டலமும் கடந்த பின்பு

தெளிவாகத் தேனதுவும் கட்டிப்போகும்

பதத்துடனே தானெடுத்து காலை மாலை

பதறாமல் மண்டலந்தான் மூன்றேயாகும்

மிதத்துடனே பலமதுவாய் கொண்டு வந்தால்

மிக்கான தேகமிது இறுகலாச்சே

1043.

ஆச்சப்பா தேகமது கல்தூ ணாகும்

அப்பனே வாசியது மேலேறாது

மூச்சப்பா வாசியது கீழேநோக் காகும்

முறுக்குடனே தாதுகளும் வலுத்துப் போகும்

பேச்சப்பா யில்லையப்பா பிராணா யாமம்

பேரான கும்பகத்தில் இருந்து கொண்டு

மாச்சப்பா மாய்கைதனை விட்டொ ழித்து

மகத்தான கேசரத்தில் நின்று வாடே

     ஒரு கிலோ சுத்தமான தேனை வாங்கி, ஒரு மண் பானையிலோ, கண்ணாடி சீசாவிலோ ஊற்றி நிரப்பி, அதை மூடிபோட்டு மூடியபின், அதன்மேல் இறுக்கமாக துணியை சுற்றிக் கட்டி வைக்கவும்.

     அடுத்ததாக, ஈரமில்லாத ஒரு நிலப்பரப்பில், ஒரு அடி ஆழத்திற்கு குழியை தோண்டி,  அந்த குழிக்குள் தேன் உள்ள பாத்திரத்தை வைத்து புதைத்துவிட்டு, அந்த குழியை உலர்ந்த மணலால் நிரப்பி மூடிவிடவும். அந்த இடத்தின் மேல், காய்ந்த இலைகள், சருகுகள், விறகு, வரட்டி போன்றவற்றைக் கொண்டு  நிரப்பி, நெருப்பை மூட்டவும்.

     தேன் நிரப்பப்பட்ட பாத்திரம் புதைக்கப்பட்ட இடத்தின் மேல்பரப்பில்தான் நெருப்பெரிக்க வேண்டும். பாதுகாப்பான முறையில் நெருப்பை எரித்து, மணல் சூடாகி, புதைத்து வைத்த தேனும் சூடாகும்படி, சுமார் இரண்டு மணி நேரம் நெருப்பை எரியவிடுவது நல்லது. எரித்து முடித்ததும், அப்படியே நாற்ப்பத்தெட்டு நாட்களுக்கு விட்டுவிடவேண்டும். அதாவது, தேன் நிரப்பிய பாத்திரத்தை, நாற்ப்பத்தெட்டு நாட்கள் நிலத்திலேயே புதைந்து இருக்கும்படி வைத்திருக்க வேண்டும்!

     மறுபடியும் அந்த இடத்தில் நெருப்பு எரிக்கத் தேவையில்லை! நாற்ப்பத்தெட்டு நாட்கள் முடிந்ததும் தான்,  நிலத்தில் குழிக்குள், புதைத்து வைத்திருக்கும் தேன் நிரப்பிய பாத்திரத்தை வெளியில் எடுக்கவேண்டும்.  நாற்ப்பத்தெட்டு நாட்கள் மண்ணில் புதைக்கப்பட்ட, பாத்திரத்திலுள்ள தேனை எடுத்துப் பார்க்கும்போது, அந்த தேன் இறுகி, கெட்டியாகி இருப்பதைக் காணலாம்! இந்த கெட்டியான பதத்திலுள்ள தேனை எடுத்து, தினமும் காலை, மாலை இருவேளையும், ஒரு சிறு ஸ்பூனில் எடுத்து, மூன்று மண்டலம் அதாவது, சுமார் ஐந்து மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது,

  • உடம்பு கல்தூண் போல வலுவாகவும், உறுதியாகவும், ஆரோக்கியமாகவும்,
  • உடம்பு முறுக்கேறி, தாது வலுப்பெறவும்,
  • சுவாசப் பயிற்சி முறை சிறப்பாகவும்,
  • நரம்பு மண்டலம் சீராகவும்,
  • சுவாசப் பயிற்சியின்போது, நீரின் மேற்பரப்பில் மிதந்துகூட ஆசனமுறைகளை செய்யமுடியுமென்றும்,

எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதத்துடனும், நோயல்லாத வாழ்வு பெற்று, ஆரோக்கியமாக வாழலாமென்று தேனின் சிறப்பையும், அதை முறையாக செய்யும் பக்குவத்தையும் ஆனந்தமான வாழ்க்கைக்கான ‘தேனில் கற்பம்’ பற்றிய மதிப்புமிக்க தகவலையும் கூறியுள்ளார் நமது போகர் சித்தர்!

நல்ல விஷயம் தானே!

நன்றி!

2 Comments

Leave a reply to SANTHOSH KUMAR P Cancel reply