அமுக்கரா லேகியம்

என்ன செய்யும்?

வணக்கம்! அகத்தியர் மெய்ஞானம் என்கிற நூலில், 297 முதல் 300 வரையிலான பாடல் வரிகளில், அமுக்கரா லேகியம் அப்படிங்கற பக்குவத்தை, எளிய மருத்துவ பொருட்களைக் கொண்டு, சலக்கழிசல், பாண்டு, மேகம் சம்பந்தமான நோய்கள், மற்றும், ஆண்மைக்குறைபாடு நீங்கி, புத்துணர்ச்சியோடும், நரம்புகளை வலுவாக்கவும், நீரடைப்பு, தசை அடைப்பு, குணமாவதற்கும், அகத்தியர் ஐயா சொல்லித்தந்திருக்கிறார்!

இந்த அமுக்கரா லேகியத்தின் பயன்களோடு, எப்படி இந்த அமுக்கரா லேகியத்தை முறைப்படி  தயாரிப்பது  என்பதையும், தெரிந்து கொள்ள பாடலை பார்த்து வரலாமா?

பூட்டுகிறே னின்னமொரு லேகியந்தான்

புகழான வமுக்கரா பலந்தானொன்று

நாட்டடா வாவாரை பலந் தானொன்று

நலமான தூதுவளை பலந்தானொன்

ஆட்டுவாயிதுவெல்லாம் நிழலுலர்த்தி

யுத்தமனே யிடித்துச் சூரணமேசெய்து

ஆட்டுவாய் வேலியது பருத்திச்சாற்றா

லப்பனே மெழுகதுபோலரைத்து வாங்கே  (297)

இன்னொரு லேகியத்தையும், மனசுல பூட்டி பதிய வச்சிக்கிறதுக்காக சொல்றேன்! அமுக்குரா (Withania somnifera) ஒரு பலம்  அதாவது 35 கிராம் அளவுக்கு எடுத்துட்டு,.  இந்த அமுக்கராவுக்கு, அசுவகந்தி, கண்ணன் வாசி, வலக்கம், ஆனந்தராசி, வீரண்டவல்லி, வாதாளி, வீரகேந்திர மங்கை, நலமாது அப்படின்னு பல பெயர்களில் சொல்லப்படுகிறது.  அமுக்கிரா கிழங்கு நாட்டு மருந்து கடைகளில் கேட்டா கிடைக்கும். அந்த அமுக்கிரா கிழங்கும், கூடவே நாட்டாவாரையோட பூ, இலை, விதை எதுவா இருந்தாலும் எடுத்துக்கலாம்!  கூடவே, தூதுவளை கீரையும் , ஒரு 35 கிராம் அளவுக்கு எடுத்திட்டு, எல்லாத்தையுமே நிழல்ல காயவைத்து நன்றாக காய்ந்ததும், எடுத்து இடிச்சு பொடி செய்து விட்டு,  வேலிப்பருத்தின்னும்,  உத்தம கன்னிகைன்னும், உத்தாமணின்னும் சொல்லக்கூடிய,  வேலி ஓரங்களில் படர்ந்து வளருகின்ற, இந்த செடியை கிள்ளி விட்டால்  பால் வடியும், இந்த செடியோட காய் வெடிக்கும் போது, பஞ்சு போல அதோட விதையையும் சுமந்து கொண்டு பறந்து போவதையும் நம்ம பார்த்து இருக்கலாம்!  வேலியில படர்ந்து வளர்கிறதாலையோ என்னவோ, இதை வேலிப்பருத்தின்னு சொல்லியிருக்கலாம்!,  இந்தச் செடியையும் கிள்ளி எடுத்துட்டு மெழுகு போல அரைச்சு எடுத்து, 

அரைத்தபின்பு சாதிக்காய் கிராம்புமேல

மப்பனே வால்மிளகு கடுக்காய்சுக்கே

யுரைத்துவிடு தான்றிக்காய் நெல்லிமுள்ளி

யுத்தமனே வகைக்கியரைப் பலமாய்ச்சேர்த்து

திறத்துடனே யுலர்த்திச் சூரணமே செய்து

சீராகவெடுத்ததனை வைத்துக்கொண்டு

குறைத்துவிடு ரோசனையுங் குங்குமப்பூ

கூர்வகைக்கு மிரண்டு நிஷ்கங்கூடச்சேரே  (298)

அமுக்கரா, ஆவாரை,  தூதுவளை எல்லாத்தையும்,  தனித்தனியே 35 கிராம் எடுத்துட்டு,  நிழலில் காயவைத்து எடுத்து பொடி செய்து வச்சிட்டு,  வேலிப்பருதியையும் மெழுகு போல அரைச்சு, சாதிக்காயையும், கிராம்பையும், ஏலமும், வால் மிளகும்,  கடுக்காய்,  சுக்கு,  தான்றிக்காய், நெல்லிமுள்ளி இதெல்லாம் வகைக்கு ஒரு 20 கிராம் அளவுக்கு எடுத்து பொடி ஆக்கி எடுத்து வச்சுட்டு, கொஞ்சமா கோரோசனையையும், குங்குமப்பூவும் கூட கொஞ்சமா சேர்த்துக்கலாம்னும்  சொல்லிட்டு,,

சேரப்பா பொடித்ததனை யொன்றதாக

செப்புபடி யரையாகு மாவினெய்தான்

கூறப்பாவெண்கலமாம் பாத்திரத்திற்

குறியுடனேவேடு கட்டி மருந்தைவைத்து

நேரப்பாமேல்சட்டி கொண்டு மூடி

நிசமாகவாலு கையின் மீதுவைத்து

வீரப்பாவிளாவிறகா லெரித்து வாங்கி

விதமான வமுக்கரா விறகாற்கிண்டே  (299)

ஒரு பாத்திரத்தை எடுத்து, பொடியாக்கி வச்சிருக்கிற,  அமுக்கரா, ஆவாரை,  தூதுவளை கூடவே, வேலிப்பருத்தியை  ஆட்டி, மெழுகா  எடுத்து வைத்திருக்கிறதையும், சாதிக்காய்,  கிராம்பு, ஏலம், வால்மிளகு, கடுக்காய், சுக்கு, தான்றிக்காய்,  நெல்லிமுள்ளி  இதெல்லாம் காயவைத்து பொடி ஆக்குனதையும் எடுத்துட்டு, கூடவே, கொஞ்சமா கோரோசனையும், குங்குமப்பூவும் சேர்த்து எல்லா பொடியையும்,  போட்டு, பாத்திரத்தை மூடி, அடுப்பின்மேல் வைத்து நெருப்பெரிக்கவேண்டும். அடுத்ததா, ஒரு அரை படி பசு நெய் வாங்கி கொஞ்சம் கொஞ்சமா விட்டு, லேகியப்  பதம் வரும்வரைக்கும் கிண்டி விடணும்னு சொல்றார்.  இந்த பக்குவத்துல இறக்கி வைக்கணும்!  

கிண்டியே யாறவைத்தே யெடுத்துகொண்டு

கீர்த்திபெற வெள்ளாட்டு நெய்யிலே தான்

அண்டியே கழற்சிக்காயளவு கொள்ளு

வப்பனே வொருநாளைக்கிரு நேரந்தான்

மண்டலந் தானுண்டுவர தீரும்நோய்கேள்

மகத்தான சலக்கழிச்சல் பாண்டுமேகம்

தண்டு நோய் நீரடைப்பு தசையடைப்பு

தானான மேகமெல்லாந் தானேபோகும்  (300)

அடுத்து, அப்படி மெழுகு பதமா, லேகிய பதத்துக்கு கிண்டி, ஆறவச்சிருக்கிற அமுக்கரா லேகியத்தை, ரொம்ப சிறப்பா இருக்குறதுக்கு, வெள்ளாட்டு நெய்யிலே  கலந்து,  ஒரு சின்ன நெல்லிக்காய் அளவுக்கு, இல்லைனா ஒரு சிறு உருண்டையா எடுத்துட்டு, ஒரு நாளைக்கு காலை, மாலை இரண்டு வேளையும், ஒரு மண்டலம், அதாவது 48 நாளைக்கு சாப்பிட்டு வந்தால், சலக் கழிச்சல், பாண்டு, மேகம், ஆண்மைக்குறைவு, நீர் அடைப்பு,  தசை அடைப்பு, போன்ற நோய்களெல்லாம், தானாகவே போயிடும்னு சொல்றார்!  சலக்கழிசல்னு சொல்லுராங்களே! அது என்ன? கொஞ்சம் பேருக்கு, எதை சாப்பிட்டாலும் சரி, இல்ல, எப்போ சாப்பிட்டாலும் சரி,  இல்லை எப்படி சாப்பிட்டாலும் சரி! வயிற்றை கலக்கி, சலமா வெளியில போறதுக்குப் பெயர்தான் சலக்கழிசல்!, அதுமட்டுமில்லே, தோல் வியாதியான பாண்டுக்கும், மேகம் போன்ற நோய்களுக்கும், ஆண்மைக்குறைபாட்டுக்கும், நீரடைப்பு,  தசை அடைப்பு ஏற்பட்டாலோ, குணமாக்குவதற்கும் இந்த அமுக்கரா லேகியம் சரியான தீர்வாக இருக்குமென்று அகத்தியரையா சொல்லித்தருகிறார். 

    இந்த பக்குவத்துல சொன்ன பொருட்களை எல்லாம், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.  வேலிப்பருத்தியும், வெள்ளாட்டு நெய்யும்தான் நகரங்களில் இருப்பவர்களுக்கு சுலபமா கிடைப்பது கஷ்டம்!  அதுக்கு வேலிப்பருத்திக்கு பதிலா பருத்தி கொட்டையை எடுத்துக்கலாம்! பருத்திக்கொட்டையை  ஊறவைத்து,  அரைச்சு,  வடிகட்டி கிடைக்கிற பால் கூட எடுத்துக்கலாம்!  கிராமங்களில் பருத்திப்பால்னு  ஒரு சுவையான பாயாசம் மாதிரி, இனிப்பு வகை செய்து குடும்பத்தில் இருக்கிறவங்களும், குழந்தைகளுக்கும் கூட கொடுத்து சாப்பிடுறதுங்கறது  வழக்கமா இருக்குது. வெள்ளாட்டு நெய்க்கு பதிலா, சுத்தமான தேனை கூட கொஞ்சமா எடுத்துக்கிட்டு, தினமும்  சாப்பிட்டு வந்தால்,  உடல் வலிமையாகி, எல்லா வேலையும் எளிதாக செய்து, சந்தோஷமாகவும், நோயில்லாமலும் இருக்கலாம் என்று, அகத்தியரையா சொல்லித்தந்த,  ‘அமுக்கரா லேகியம்’ நல்லதும், நல்ல விஷயமும் தானே! 

2 Comments

  1. vanakkam ayya… This is mohankumar living chattisgarh state… Thank you for opening website.. One humble request pls make and give for us… It will be so much useful ayya

    nandri ayya🙏🙏🙏🙏

    Like

    1. Vanakkam @Mohan Kumar Naikkar
      Thank you for your comment. Our motive is to spread information about the medicinal remedies given by ancestors. Kindly check with your physician or siddha doctor as they can provide more information about the preparation. Nandri

      Like

Leave a reply to Mohan Kumar Naikkar Cancel reply